/tamil-ie/media/media_files/uploads/2017/10/z624.jpg)
India vs Newzealand, 2nd ODI, Pune
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருப்பதால், இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது. அதேசமயம், இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், தொடரை வெல்லும் முனைப்போடு இன்று களமிறங்கியது.
டாஸ் வென்ற நியூசி., கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக, குல்தீப் யாதவ்விற்கு பதிலாக ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசி., அணியின் தொடக்க வீரர்களான மார்டின் கப்திலை 11 ரன்னிலும், கார்லின் மன்ரோவை 10 ரன்னிலும் புவனேஷ்குமார் வெளியேற்றினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் இம்முறையும் சொற்ப ரன்னில் அவுட்டானார். அவர் 3 ரன்னில் பும்ராவால் எல்பிடபிள்யூ செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில், நிக்கோல்ஸ் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் புவனேஷ் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
231 ரன்கள் என்கிற எளிதான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அதிர்ச்சி (7 ரன்கள்) தொடக்கம் கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி 29 ரன்களில் (29 பந்துகள்) அவுட் ஆகிவிட, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் முன்கூட்டியெ இறக்கப்பட்டார். இவரும் தவானும் மிக பொறுப்புடன் ஆடினார்கள்.
தவான் 68 ரன்களில் (84 பந்துகள்) அவுட் ஆனார். ரன் வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் அடுத்து இறக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 30 (31 பந்துகள்) ஸ்வீப் ஷாட்டுக்கு ஆசைப்பட்டு கேட்ச் ஆனார். பின்னர் மாஜி கேப்டன் டோனியுடன் இணைந்து (21 பந்துகளில் 18 ரன்கள்), தினேஷ் கார்த்திக் அணியை வெற்றி பெற வைத்தார். 46 ஓவர்களில் வெற்றி இலக்கை இந்தியா தொட்டது.
92 பந்துகளை சந்தித்து 64 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் கடைசி வரை அவுட் ஆகவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். இதன் மூலமாக மிடில் ஆர்டர் வரிசையில் தனக்கான இடத்தை அவர் உறுதிப் படுத்தியிருக்கிறார். பவுலிங்கில் அசத்திய புவனேஷ்வர்குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதால், இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. தொடரின் வெற்றி யாருக்கு? என நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.