இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், டெல்லியில் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்தை முதன் முறையாக டி20 போட்டியில் வீழ்த்தி, இந்திய அணி தனது மோசமான வரலாற்றை திருத்தி சரியாக எழுதியது. அரைசதம் விளாசிய ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். 19 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்த ஆசிஷ் நெஹ்ரா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அப்போட்டியோடு ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இரவு (சனிக்கிழமை) நடக்கிறது. ஆசிஷ் நெஹரா ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்ப்பதா? அல்லது இன்னொரு பவுலருக்கு வாய்ப்பு அளிப்பதா? என்பது குறித்து அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.
மற்றொரு சாதனையை நெருங்கியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி மேற்கொண்டு 12 ரன்கள் எடுத்தால் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள இலங்கையின் தில்ஷனை முந்துவார்.
இதற்கிடையே, தற்போது உலகின் நம்பர்.1 அணியாக இருக்கும் நியூசிலாந்து, இன்றைய போட்டியை வென்று இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அதன்படி, அவர்களது ஸ்ட்ரேடஜியில் சின்ன சின்ன மாற்றங்களை செய்துள்ளனர். அதாவது, துல்லியமான வேகப்பந்து வீச்சு மூலம், இந்திய தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ரோஹித்தை விரைவில் அவுட் செய்து வெளியேற்றுவது என்பதுதான் அவர்களது நோக்கமாம். விராட் கோலி எப்படியும் அடிப்பார் என்பதால், அவரை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, பாண்ட்யா மீது இலக்கு வைக்கப்பட்டுள்ளதாம். தொடக்க வீரர்கள் மற்றும் பாண்ட்யாவை விரைவில் காலி செய்துவிட்டால், இந்திய அணியை 150 - 160-க்குள் கட்டுப்படுத்திவிடலாம் என்பதே அவர்களது இன்றைய ஸ்ட்ரேடஜியாம்.
தோனியை பொறுத்தவரை, அவர் களத்தில் அவுட்டாகாமல் இருந்தால் கூட, 18-வது மற்றும் 19-வது ஓவரில் தான் அடித்து ஆடவே முயற்சிப்பார் என்பதால், அவரையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.
இத்திட்டத்தை எப்படியும் செயல்படுத்தி, இந்திய அணியை வீழ்த்திவிட வேண்டும் என்று நியூசிலாந்து அணி நிர்வாகம் உறுதியாக உள்ளதாம்.
பொதுவாக இந்த மைதானம் பேட்டிங்குக்கு உகந்தது. ஆடுகளத்தில் புற்கள் அகற்றப்பட்டுள்ளதை வைத்து பார்க்கும் போது, பேட்ஸ்மேன்கள் ரன்வேட்டை நடத்துவது எளிது என்றே தோன்றுகிறது. இங்கு இதுவரை ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மட்டுமே நடந்துள்ளது. 2013-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 202 ரன்கள் இலக்கை இந்திய அணி 2 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.