குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து, எப்படி இந்தியாவை வெல்லப் போகிறது என்பதை முன்பே ஐஇ தமிழ் மூலம் நாம் சொல்லியிருந்தோம். நாம் சொன்னபடியே இந்தியாவை வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து.
ஐஇ தமிழ் சொன்னது என்ன?
இன்று காலையிலேயே, நமது ஐஇ தமிழ்.காமில், "இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்தின் புதிய வியூகம்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
அதில், "தற்போது உலகின் நம்பர்.1 அணியாக இருக்கும் நியூசிலாந்து, இன்றைய போட்டியை வென்று இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அதன்படி, அவர்களது ஸ்ட்ரேடஜியில் சின்ன சின்ன மாற்றங்களை செய்துள்ளனர். அதாவது, துல்லியமான வேகப்பந்து வீச்சு மூலம், இந்திய தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ரோஹித்தை விரைவில் அவுட் செய்து வெளியேற்றுவது என்பதுதான் அவர்களது நோக்கமாம். விராட் கோலி எப்படியும் அடிப்பார் என்பதால், அவரை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, பாண்ட்யா மீது இலக்கு வைக்கப்பட்டுள்ளதாம். தொடக்க வீரர்கள் மற்றும் பாண்ட்யாவை விரைவில் காலி செய்துவிட்டால், இந்திய அணியை 150 - 160-க்குள் கட்டுப்படுத்திவிடலாம் என்பதே அவர்களது இன்றைய ஸ்ட்ரேடஜியாம்.
தோனியை பொறுத்தவரை, அவர் களத்தில் அவுட்டாகாமல் இருந்தால் கூட, 18-வது மற்றும் 19-வது ஓவரில் தான் அடித்து ஆடவே முயற்சிப்பார் என்பதால், அவரையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.
இத்திட்டத்தை எப்படியும் செயல்படுத்தி, இந்திய அணியை வீழ்த்திவிட வேண்டும் என்று நியூசிலாந்து அணி நிர்வாகம் உறுதியாக உள்ளதாம்" என்று குறிப்பிட்டிருந்தோம்.
இன்று நடந்தது என்ன?
நியூசிலாந்தின் 197 ரன்கள் இலக்கை துரத்த களமிறங்கியது இந்திய அணி. 2-வது ஓவரை வீசிய டிரென்ட் பவுல்ட், சரியான லைனில் வீசி, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்திருந்த தவானின் மிடில் ஸ்டெம்பை காலி செய்தார். அதே ஓவரில், 5 ரன்கள் எடுத்திருந்த ரோஹித்தை பவுன்சர் பந்து மூலம் கீப்பர் கேட்ச் ஆக்கினார். சும்மா குத்துமதிப்பாக அவர் பந்துவீசவில்லை. ரோஹித் அவுட்டாவதற்கு முந்தைய பந்தையும் அதே போன்றே பவுல் செய்த பவுல்ட், கீப்பர் கேட்ச் அப்பீல் செய்தார். ஆனால், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அதற்கு அடுத்த பந்தை அதே லெந்தில் இன்னும் துல்லியமாக வீச, சத்தம் போடாமல் கேட்ச் கொடுத்துச் சென்றார் ரோஹித். ஆக, நியூசிலாந்து நிர்வாகத்தின் முதல் டார்கெட் (தொடக்க வீரர்களை உடனே காலி செய்வது) சக்சஸ்!.
அவர்களது அடுத்த டார்கெட் ஹர்திக் பாண்ட்யா. ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டான பின்னர், பாண்ட்யா களமிறங்கியதால், ஸ்பின்னர் இஷ் சோதியை கொண்டுவந்தார் நியூசி., கேப்டன் வில்லியம்சன். ஒரு ரன் மட்டும் எடுத்திருந்த பாண்ட்யாவை போல்டாக்கினார் சோதி. நியூசிலாந்தின் இரண்டாவது டார்கெட்டும்(பாண்ட்யாவை விரைவில் அவுட்டாக்குவது) சக்சஸ்.
மற்றபடி, எப்படி பவுலிங் செய்தாலும் கோலி அடிப்பார் என்பதால், அவரை நியூசி., கண்டுகொள்ளவேயில்லை. அதுபோலவே, அவரும் அரைசதம் விளாசினார். 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தோனி கடைசி நேரத்தில் தான் அடிப்பார் என்பதாலும், அவரது பழைய அதிரடியை அவரே மறந்துவிட்டதாலும், தோனியையும் நியூசிலாந்து வீரர்கள் சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவேயில்லை. இருப்பினும், தோனி 49 ரன்கள் எடுத்தார்.
முடிவில், இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து அணி நிர்வாகம் திட்டமிட்ட ஸ்ட்ரேடஜியை முன்பே கணித்து ஐஇ தமிழ்.காம் சொன்னது போல், இந்திய அணியை 160-க்குள் கட்டுப்படுத்தி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது நியூசிலாந்து.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.