சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில், இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது. இதில் ஃபக்கர் 3 ரன்கள் எடுத்திருந்த போதே, பும்ரா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால், அந்த பால் எதிர்பாராதவிதமாக நோ-பாலாக அமைந்தது. முதலில் இந்திய வீரர்கள் ஆர்ப்பரிக்க, பின் பாகிஸ்தான் வீரர்கள் நோ பாலை கொண்டாடினர். மேலும், இந்திய வீரர்கள் இரண்டு ரன் அவுட்களையும் மிஸ் செய்துவிட்டனர்.
இந்நிலையில், அஷ்வின் வீசிய 22-வது ஓவரின் போது, நங்கூரம் போட்டு ஆடிவந்த அசார் அலி, சார்கிலில் பந்தை தட்டிவிட்டு பந்தை பார்த்தபடியே ரன் ஓடினார். அவர் மறுமுனைக்கு செல்லும் போதுதான் தெரிந்தது, அங்கு நின்றுக் கொண்டிருந்த ஃபக்கர் ரன்னே ஓடவில்லை என்று. அதற்குள் பும்ரா பந்தை தோனியிடன் கரெக்டாக வீச, தோனி கேஷுவலாக ரன் அவுட் செய்தார். இதனால், 59(71) ரன்னுடன் ஏமாற்றத்துடன் வெளியேறினார் அசார் அலி.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஃபக்கர், சதம் விளாசினார். இந்த சாம்பியன்ஸ் தொடரில் அறிமுகமான ஃபக்கருக்கு இதுதான் முதல் சர்வதேச ஒருநாள் சதமாகும். இறுதிப் போட்டியில், அதுவும் இந்தியாவிற்கு எதிராக அவர் சதம் விளாசியிருப்பது நிச்சயம் ஃபக்கருக்கு சிறப்பான தருணமாகும்.
That’s how you celebrate your maiden ODI ????#PAKvIND #CT17 pic.twitter.com/zlJX3KnNgV
— ICC (@ICC) 18 June 2017
அதன்பின், பாண்ட்யா ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஃபக்கர் அவுட்டானார். 106 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில், 12 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.
இதன்பின், பாபர் ஆஸம் 46 ரன்களும், ஹபீஸ் 57 ரன்களும் எடுக்க, பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. புவனேஷ், பாண்ட்யா, கெதர் ஜாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணிக்கு இப்படியொரு நிலைமை வரும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அமீர் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக, கேப்டன் கோலி 5 ரன்னில் அதே ஆமீரின் இரண்டாவது ஓவரில் அவுட்டானார்.
தொடர்ந்து தவான் 21 ரன்னிலும், யுவராஜ் 22 ரன்னிலும், தோனி 4 ரன்னிலும் அவுட்டாகி வரிசையாக வெளியேறினர். இதன்பின், ஹர்திக் பாண்ட்யா சிறிது நேரம் காட்டு காட்டி 76 ரன்னில் அவுட்டாக, மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் சுக்கு நூறாகியது. இறுதியில், 30.3-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டும் எடுத்து இந்திய அணி படுதோல்வி அடைந்தது.