தலைப்பை பார்த்தவுடனேயே தெரிந்திருக்கும், வங்கதேசத்திற்கு எதிரான இந்த போட்டியின் முடிவு பற்றி. ஆம்! 265 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.
முதலில் ஆடிய வங்கதேசம், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமீம் இக்பால் 70 ரன்களும், முஷ் ஃபிகுர் ரஹீம் 61 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் புவனேஷ், பும்ரா, கேதர் ஜாதவ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் - தவான் கூட்டணி வழக்கம் போல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. அதிரடியாக ஆடி வந்த ஷிகர் தவான் 34 பந்துகளில் 46 ரன்கள் விளாசி அவுட்டானார். அதன்பின் ரோஹித்துடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணியை வங்கதேச பவுலர்களால் கடைசி வரை பிரிக்கவே முடியவில்லை.
முதல் போட்டியில் 91 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்ட ரோஹித், இம்முறை நிதானமாக ஆடி தனது 11-வது ஒருநாள் சதத்தை(123) பூர்த்தி செய்தார். கோலியும் தன் பங்குக்கு 96 ரன்கள் விளாசினார். இன்று தனது 300-வது போட்டியில் விளையாடிய யுவராஜ் சிங்கிற்கு கடைசி வரை பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவேயில்லை.
இறுதியில் இந்திய அணி 40.1-வது ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றிவாகை சூடியது. வரும் 18-ஆம் தேதி (ஞாயிறு) அன்று நடக்கும் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.
அதனால், ஆஃபிஸ் போறவங்க இப்போவே உங்க ஹெச் ஆருக்கு போன் செய்து சண்டே லீவ் வாங்கிடுங்க.