worldcup 2023 | india-vs-pakistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட்டின் பரம போட்டியாளர்களாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 12வது லீக் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சமீபத்தில் ஆசிய கோப்பையில் மோதின. இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்த நிலையில், முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இந்தியாவின் வீழ்ந்தது. அந்த தோல்விக்கு இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் பழிதீர்க்க நினைக்கும். அதேசமயம், உலகக் கோப்பையிலும் இந்தியா அதன் வெற்றியின் வேகத்தைத் தொடரும்.
ஒரு நாள் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை என்கிற வரலாற்றுச் சாதனையை வைத்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில், 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியது. அந்த 7 போட்டிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1992: சிட்னி - இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இது ஆச்சரியமாக இருந்தாலும், உலகக் கோப்பையின் முதல் நான்கு பதிப்புகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானை இந்தியா சந்தித்தபோது, அவர்களின் போட்டியின் முதல் அத்தியாயம் தொடங்கியது. இந்த உலகக் கோப்பை ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு முதல் தொடராகும்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய இந்திய அணி 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக அரைசதம் விளாசிய சச்சின் டெண்டுல்கர் 54 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முஷ்டாக் அகமது 3 விக்கெட்டுகளையும், ஆகிப் ஜாவேத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 217 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் 48.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு சுருட்டினர். பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணியில் கபில்தேவ், மனோஜ் பிரபாகர் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் தலா 2 விக்கெட்டுகளையும், சச்சின் மற்றும் வெங்கடபதி ராஜூ தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்தியா பாகிஸ்தான் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
1996: பெங்களூரு - இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
காயம் காரணமாக வாசிம் அக்ரம் இல்லாதது, இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டியில் மிகப்பெரிய பேசும் பொருளாக இருந்தது. இந்தியா முதல் முறையாக பாகிஸ்தானை நாக் அவுட்டில் எதிர்கொண்டது. இதன்படி, 1996 உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டி பரபரப்பாக அரங்கேறியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் நவ்ஜோத் சித்துவின் 115 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். வக்கார் யூனிஸுக்கு எதிராக அஜய் ஜடேஜாவின் மிரட்டல் அடி சிறப்பாக இருந்தது. அவர் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 288 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக சயீத் அன்வர் மற்றும் சோஹைல் ஜோடி வலுவான தொடக்கம் கொடுத்ததன் மூலம் பாகிஸ்தான் 10 ஓவர்களில் 84/0 என முன்னேறியது. அடுத்த ஓவரில் சோஹைல் கேலி செய்த வெங்கடேஷ் பிரசாத் உலகக் கோப்பையில் பிரபல தருணத்தை உருவாக்கினார். அவர் வீசிய பந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரரான சோஹைலின் மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது.
மிடில் ஆர்டர் வீரர்களான சலீம் மாலிக் மற்றும் மியான்டத் இருவருக்கும் நல்ல தொடக்கம் கிடைத்தாலும், பிரசாத் மற்றும் அனில் கும்ப்ளே தங்கள் சொந்த மண்ணான பெங்களூரில் மிகவும் மிரட்டலாக பந்துவீசினர். மியான்டத்தின் கடைசி உலகக் கோப்பை ஆட்டம் ஏமாற்றத்தில் முடிந்தது. பாகிஸ்தான் 49 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 மட்டுமே எடுத்தது. 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
1999: மான்செஸ்டர் - இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டி மற்ற போட்டிகளை விட மிகவும் உணர்ச்சிகரமாகவும் தீவிரமாகவும் இருந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கார்கில் போர் நடந்த அதே நேரத்தில் உலகக் கோப்பையும் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் போட்டிக்கு பரவாமல் இரு அணிகளும் சிறப்பாகச் செயல்பட்டன.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்தது. ராகுல் டிராவிட் (61 ரன்கள்) மற்றும் கேப்டன் முகமது அசாருதின் (59 ரன்கள்) ஆகியோர் தலா ஒரு அரைசதம் விளாசி அசத்தினர். சச்சின் இந்தியாவை 45 ரன்களுடன் விரைவாக முன்னேற்றி இருந்தார்.
228 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரரான சயீத் அன்வர் 6 பவுண்டரிகளை விரட்டி இந்தியாவுக்கு ஆரம்ப பயத்தை ஏற்படுத்தினார். ஆனால் வெங்கடேஷ் பிரசாத் பந்தில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இதன்பின்னர் பாகிஸ்தானுக்கு அனைத்தும் தலைகீழாக மாறத் தொடங்கியது. வெங்கடேஷ் பிரசாத் 5 விக்கெட்டுகளையும், ஜவகல் ஸ்ரீநாத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மிரட்டினர். 27 பந்துகள் மீதமிருந்த நிலையில் பாகிஸ்தான் 180 ரன்னில் சுருண்டது. இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2003: செஞ்சூரியன் - இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மிகப்பெரிய போட்டியாக இது கருதப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை கட்டுப்படுத்தும் அரசியல் பதட்டங்களுடன், இந்தியாவும் பாகிஸ்தானும் 2003 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியனில் சந்தித்தன, அங்கு தீப்பொறிகள் பறந்தன.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரரான சயீத் அன்வர் சதம் விளாசி 101 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த வீரர்களில் யாரும் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜாகீர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 274 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சச்சின் தரமான தொடக்கம் கொடுத்தார். சதம் விளாசுவர் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 98 ரன்கள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், களத்தில் இருந்த ராகுல் ட்ராவிட் (44 ரன்) - யுவராஜ் சிங் (50 ரன்) ஜோடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. பாகிஸ்தானை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்து அசத்தியது.
2011: மொஹாலி - இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2007ல் தவறவிட்ட பிறகு, பிரபலமான போட்டி மீண்டும் வந்தது. போட்டியில் பரபரப்பு முன்னெப்போதையும் விட அதிகமாக இருந்தன. ஏனென்றால் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் மல்லுக்கட்டின. 8 ஆண்டுகளுக்கு முன்பு போலவே, சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக அதிக ஸ்கோரை அடித்தார். அவர் 115 பந்துகளில் 11 பவுண்டரிகளை மட்டும் விரட்டி 85 ரன்களை எடுத்தார்.
பாகிஸ்தான் அணி தரப்பில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த வஹாப் ரியாஸ் வீரேந்திர சேவாக் (38), விராட் கோலி (9), யுவராஜ் (0), எம்.எஸ் தோனி (25) போன்ற முன்னணி வீரரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி, மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். களத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுரேஷ் ரெய்னாவின் 36 ரன்கள் இந்தியாவை 6 விக்கெட் இழப்புக்கு 260 என்கிற நல்ல இலக்கை எட்ட உதவியது.
தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை இந்தியா அபார பந்துவீச்சால் பயமுறுத்தியது. பந்துவீசிய யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முனாஃப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா ஆகிய 5 இந்திய பந்துவீச்சாளர்களும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். ஆனால் யுவராஜ் அசத் ஷபிக் மற்றும் யூனிஸ் கானை ஆட்டமிழக்கச் செய்தது, முனாஃப் பட்டேலின் கனவுப் பந்து வீச்சில் அப்துல் ரசாக்கின் ஸ்டம்பை பதம் பார்த்தது போன்ற சம்பவங்கள் பாகிஸ்தானின் சேஸிங்கை தலைகீழாக மாற்றியது. ஜோகன்னஸ்பர்க் 2007 போட்டியின் ஃப்ளாஷ்பேக்குகள் மனதைக் கவர்ந்தாலும், இந்தியா கடைசி ஓவரில் ஆட்டத்தை முடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
2015: அடிலெய்டு இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக இந்தியா தனது உலகக் கோப்பை தொடரை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் விராட் கோலி உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். மேலும் ஷிகர் தவான் (73 ரன்) மற்றும் சுரேஷ் ரெய்னா (74) ஆகியோரின் அரைசதங்களுடன் இணைந்து இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை எட்டியது.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்ட பாகிஸ்தான் மோசமான நிலைக்கு சென்றது. மிஸ்பாவின் அரைசதத்தைத் தவிர, வேறு எந்த பேட்டரும் சிறப்பாக செயல்படவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 224 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2019: மான்செஸ்டர் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் (டி.எல்.எஸ்) வெற்றி
1999 உலகக் கோப்பைக்குப் பின் 20 ஆண்டுகள் கழித்து இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் அதே இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. 2019 உலகக் கோப்பையில், விராட் கோலி இந்தியாவின் கேப்டனாக இருந்தார். மேலும், எம்.எஸ் தோனி இன்னும் ஓய்வு பெறவில்லை.
தொடக்க வீரரான ரோகித் சர்மா 113 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 140 குவித்து உலகக் கோப்பையில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். கேப்டன் கோலி 77 ரன்கள் சேர்க்கவே, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 336 என்ற உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை எட்டியது.
தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் 300 ரன்களை துரத்த வேண்டியிருந்தது. ஆனால் அவர்களின் முன்னணி வீரர்கள் விக்கெட்டுள் மளமளவென சரிந்தது. எதிர்பார்த்ததை விட வேகமாக வெளியேறினர். விஜய் சங்கர், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைய கைப்பற்றினர்.
பாகிஸ்தான் தரப்பில் ஃபகர் ஜமான் (62) மட்டும் அரைசதம் அடித்தார். 6 விக்கெட்டுகள் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. இதன்மூலம், உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 7-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த மாபெரும் சாதனையை பாகிஸ்தான் முறியடிக்குமா? என்பதை நாளை ஆட்டத்தில் பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.