Advertisment

11.6வது ஓவரிலேயே தனது அணியின் தோல்வியை வெற்றிகரமாக நிர்ணயித்த கேப்டன் பெரேரா!

இப்போது புரிகிறதா தோனியின் மகிமை!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
11.6வது ஓவரிலேயே தனது அணியின் தோல்வியை வெற்றிகரமாக நிர்ணயித்த கேப்டன் பெரேரா!

ANBARASAN GNANAMANI

Advertisment

ஒரு முக்கியமான போட்டியை நிம்மதியாக முடித்துள்ளது இந்திய அணி.

தினமும் மதிய பொழுதில் மழை பெய்துவரும் கொழும்பிலேயே முத்தரப்பு டி20 தொடரின், அனைத்துப் போட்டிகளும் நடப்பதால், எல்லா அணிகளும் டாஸ் வென்று, பீல்டிங்கை தேர்வு செய்யவே விரும்புகின்றன. நேற்றும் அவ்வப்போது மழைச் சாரல் வீசியதால்,  இந்தியா - இலங்கை இடையேயான நான்காவது லீக் போட்டி தொடங்குவது காலதாமதமானது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, இரவு 8.20 மணிக்கு தொடங்கியது. இதனால், 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது மாற்றப்பட்டது. நேற்று தனது மூன்றாவது லீக் ஆட்டத்தை எதிர்கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, நல்ல வேளையாக டாஸ் வெல்ல, யோசிப்பே இல்லாமல் 'பந்தை முதலில் நாங்கள் கையில் எடுக்கிறோம்' என்றார். இந்திய அணியில், ஒரேயொரு மாற்றமாக ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை அணி, எதிர்பார்த்தது போன்றே அதிரடியாக இன்னிங்சை தொடங்கியது. ஆனால், ஓப்பனர் குணதிலகாவை 17 ரன்னில் ஷர்துள் தாகுர் வெளியேற்ற, அடுத்த ஓவரில் அதிரடி வீரர் குசல் பெரேராவை மூன்றே ரன்னில் நம்ம வாஷிங்டன் போல்டாக்கினார்.

மறுபக்கம், குசல் மெண்டிஸ் 'மீடியம் அதிரடி' காட்டி 38 பந்தில் 55 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 144.74. இதில் மூன்று பவுண்டரியும், மூன்று சிக்ஸரும் அடங்கும். ஆனால், இவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்கத் தான் ஆளில்லை.

உபுல் தரங்கா.. அணியின் சீனியர் வீரர். நல்ல திறமையான வீரர். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும்... டி20 உட்பட, தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துக் காட்டியவர். புரியும்படி சொல்ல வேண்டுமெனில், நமது அணியின் கவுதம் கம்பீரைப் போன்றவர். ஆனால், அதிகம் சிக்ஸர்களை விரும்பாமல், பவுண்டரிகளை மட்டுமே விளாசும் தரங்காவால், டி20ல் சில போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை. அப்படி நேற்றும் அவர் திணறியதை நம்மால் பார்க்க முடிந்தது. 24 பந்துகளுக்கு 22 ரன்கள். இலங்கை அணியின் ரன் விகிதத்தை பெருமளவில் குறைத்த பெருமை நேற்று இவருக்கு கிடைத்தது.

இவர் அவுட் ஆகும் போது, இலங்கையின் ஸ்கோர் 10.4 ஓவரில் 96-3. இதன்பின் களமிறங்கிய கேப்டன் திசாரா பெரேரா, தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு தூக்கினார். அதுவும், நம்ம விஜய் ஷங்கர் ஓவரில். அதுவரை டீசன்டான எகானமியை வைத்திருந்த ஷங்கருக்கு, அந்த இரண்டு சிக்ஸர்களும் ஏமாற்றத்தை தந்தது.

சரி! ஒரு நல்ல அதிரடியான தொடக்கம் கொடுத்திருக்கிறார்... எப்படியும் 180+ ரன்களை எட்டிவிடலாம் என நினைத்தால், தான் சந்தித்த அனைத்து பந்துகளையும் விளாசவே முற்பட்டார் கேப்டன் பெரேரா. 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த போது, தேவையில்லாமல் ஷர்துள் தாகுரின் 'Knuckle ball'-ல் உயர அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது இலங்கையின் ஸ்கோர் 11.6 ஓவர்களில் 113-4. அந்த அணியின் கைவசம் 7 ஓவர்கள் மீதம் இருந்தது.

அவர் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால், உபுல் தரங்கா வீணாக்கிய அந்த 24 பந்துகளை சமன் செய்திருக்கலாம். அதாவது, இன்னும் ஒரு 30 - 40 ரன்களை அணிக்கு சேர்த்திருக்கலாம். இத்தனை ஓவர்கள் மீதமிருக்கையில், 'நான் எல்லா பந்தையும் சுத்துவேன்' என்றால்... விளைவு? வேறென்ன, தோல்வி தான்!. இதை மட்டும் அவர் ஒழுங்காக செய்திருந்தால், இந்தியாவுக்கு நிச்சயம் நெருக்கடி கொடுத்திருக்க முடியும்.

உலக டாப் அதிரடி வீரர்களில் ஒருவரான அப்ரிடி, பல மேட்சுகளில் இப்படித் தான் தேவையில்லாமல் அதிரடியாகத் தான் அடிப்பேன் என்று வீம்பு பிடித்து, அணி தோற்க முக்கிய காரணமாக இருந்துள்ளார். 2007ல் முதன் முதலாக நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இப்போது புரிகிறதா தோனியின் மகிமை! எத்தனை, எத்தனை ஆட்டங்களில் அவர் பொறுமையாக இன்னிங்ஸ் தொடங்கி, அதிரடியாக முடித்திருக்கிறார். அதனால், எண்ணற்ற போட்டிகளில் இந்தியாவை வெற்றிப் பெற வைத்திருக்கிறார். அவரது ஸ்லோவான ஆட்டம் நமக்கு சில சமயம் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அணியின் வெற்றி என்பது மட்டுமே எப்போதும் தோனியின் இலக்கு!.

சரி! விஷயத்திற்கு வருவோம். பெரேரா அவுட்டான பின், 'அட போங்கடா' என்ற ரீதியில் நன்றாக ஆடி வந்த குசல் மெண்டிஸும் அவுட்டாக, 152 ரன்களுக்கே அடங்கிப் போனது இலங்கை.

இந்திய பவுலிங்கில், ஷர்துள் தாகுர் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர். ஒருவழியாக, இந்தப் போட்டியில் தனது லைன் அன்ட் லென்த்தை உனட்கட் கண்டுபிடித்துவிட்டார். 3 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்தாலும், இதை நினைத்து நாமும் திருப்திபட்டுக் கொள்ளலாம், அவரும் நிம்மதியடையலாம்.

இதைத் தொடர்ந்து, 153 ரன்கள் இலக்கை துரத்த ஆரம்பித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை, அவரது கெட்ட நேரம் அதவிட வேகமாக துரத்த ஆரம்பித்தது. முதல் ஓவரிலேயே சிக்ஸர், பவுண்டரி விளாசினாலும், 11 ரன்னில் தனஞ்செயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தவானும் 8 ரன்னில் தனஞ்செயா பந்தில் அவுட்டானார். நிதானமான இன்னிங்சை தொடங்கிய லோகேஷ் 18 ரன்னில் ஹிட் விக்கெட் ஆகி ஏமாற்றம் தந்தார்.

நம்ம 'குட்டித் தல' சுரேஷ் ரெய்னா, நேற்றுமுன்தினம் வீரர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஒரு இசைக்குழுவுடன் இணைந்து பாட்டெல்லாம் பாடி அசத்தினார். சரி, மனுஷர் கான்பிடன்ட்டா இருக்கார் போல என நினைத்தால், நேற்று களமிறங்கியது முதல் சுற்றிக் கொண்டே தான் இருந்தார். மொத்தமாக 15 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். இந்த 27 ரன்னும் எப்படி வந்தது என்று அவருக்கும் தெரியவில்லை, நமக்கும் தெரியவில்லை. ஆனால், அதிரடியாக தான் அடித்தார். 'போற வரை போகட்டும்' என்ற மோடிலேயே இருந்தது ரெய்னாவின் ஆட்டம்.

கான்பிடன்ட் இல்லாமல் தான் ஆடினார் என்பதற்கு அவர் பிரதீப் ஓவரில், அவுட்டான விதமே சாட்சி. திசாரா பெரேரா ஓவர் கான்பிடன்ட்டில் அவுட்டானார் என்றால், ரெய்னா கான்பிடன்ட் இல்லாமல் அவுட்டானார் என்பதே உண்மை!.

85-4 என்றிருந்த இந்திய அணியை தினேஷ் கார்த்திக்கும், மனீஷ் பாண்டேவும் திறம்பட விளையாடி கரை சேர்த்தனர். தினேஷின் திறமையை பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. ஆனால், மனீஷ் ஆடிய விதம் சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஒரு நல்ல முதிர்ச்சியை அவரது ஆட்டத்தில் திடீரென காண முடிந்தது. அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு 'பொறுப்பான' ஆட்டத்தை நாம் பார்த்திருக்க முடியாது. 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ப்யூர் மேட்ச் வின்னிங் பெர்பாமன்ஸ் கொடுத்தார் மனீஷ் பாண்டே. அவரின் இந்த இன்னிங்ஸ், இந்திய அணியில் அவரது வாய்ப்பை தரமாக வலுப்படுத்தியுள்ளது எனலாம். பக்கபலமாக தினேஷ் கார்த்திக் 25 பந்தில் 39 ரன்கள் எடுக்க, மெச்சூரிட்டியுடன் போட்டியை வெற்றிகரமாக முடித்தது இந்தியா.

ஒட்டுமொத்தமாக, இத்தனை வருட 'Experience' இருந்தும் 'InExperience' பேட்ஸ்மேன் போல் ஆடிய திசாரா பெரேராவின் ஆட்டம் தான், நேற்றைய இலங்கையின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. பரிசளிப்பு நிகழ்வில், 'நாங்கள் 30-40 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்' என்று அவர் கூறியிருப்பதே இதற்கு சாட்சி!.

Rohit Sharma Thisara Perera
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment