'Ziel த சாஹல்'! இதுதான் நேற்று இந்தியா தோற்க காரணம்!

மற்ற லெக் ஸ்பின்னர்களின் கேரியரை நான் முடித்து விட வேண்டும். அப்போது தான் அவர் டாப்பில் இருக்க முடியும்.

அந்த ஒரு ஓவர்; நான் அப்போதே ஃபிக்ஸ் செய்துவிட்டேன். காரணம், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இந்தியாவுக்கு எதிராக செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி. தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 18.4 ஓவர்களில் தனது இலக்கான 189-ஐ எந்தவித சிரமமும் இன்றி எட்டுகிறது.
நேற்று போட்டியை பார்த்த போது நம்மால் இரண்டு விஷயங்களை தோல்விக்கு காரணமாக பார்த்திருக்க முடியும். ஒன்று, ‘மழைத் தூரல்’. இரண்டாவது, ‘யுவேந்திர சாஹல்’.ரைமிங்கா இருக்குல.. ஆனால், அதுதான் உண்மை!.

நேற்று டாஸ் வென்றவுடனேயே எந்தவித தயக்கமும் இன்று ‘ஹப்பாடா’ என்ற நிம்மதியுடன் பவுலிங்கை தேர்வு செய்த டுமினிக்கும் சரி, ‘ச்ச’ என்ற மைண்ட் வாய்சோடு நின்றுக் கொண்டிருந்த கோலிக்கும் சரி, நாள் முழுவதும், மழை தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறது என்பது அப்பட்டமாக தெரியும். முந்தைய நாளே, வானிலை மையத்தின் அறிக்கை, இரண்டு அணி நிர்வகாங்களின் கைகளுக்கு வந்தாச்சு!

அதனால், பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய களமிறங்க, தோனி – மனீஷ் பாண்டே கூட்டணியால் 188 என்ற டீசன்ட்டான ஸ்கோரை எட்டியது டீம் இந்தியா. இதில் நாம் உண்மையில் மகிழ்ச்சி அடையக் கூடிய விஷயம் என்ன தெரியுமா? கோலி 1, ரோஹித் 0, தவான் 24 என முக்கிய தலைகள் விரைவில் வெளியேறிய பின், இந்தியாவின் மிடில் ஆர்டர் என்ன செய்யப் போகிறதோ என்று பக்கென்று இருந்த நமக்கு, தோனியின் அதிரடி ஆட்டமும், மனீஷ் பாண்டேவின் ‘இன்னிங்ஸ் சேவ்’ ஆட்டமும் தான். இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு  98 ரன்கள் குவித்தனர். அப்புறம் இன்னொரு விஷயம்.. மனீஷ் பாண்டேவின் ‘இன்னிங்ஸ் சேவ்’ ஆட்டம் அணிக்கு மட்டுமல்ல, அவருக்கும் தான். இதிலும் அவர் அடிக்காமல் இருந்திருந்தால்…. ரொம்ப கஷ்டம்!

சரி விஷயத்திற்கு வருவோம். ஒருவழியாக இந்தியா 189 என இலக்கு நிர்ணயிக்க, தொடக்க வீரர்கள் ஸ்மட்சை 2 ரன்னில் உனட்கட் காலி செய்ய, ஹென்ட்ரிக்சை 26 ரன்னில் வெளியேற்றினார் தாகுர். இதன்பின் கேப்டன் டுமினியும், விக்கெட் கீப்பர் கிளாசீனும் ஜோடி சேர்ந்தனர்.

கிளாசீன் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட, டுமினி சற்று அமைதி காட்ட, பின்பு இருவரும் காட்டு காட்டு என காட்ட ‘சல்லீசா’ வென்றது தென்னாப்பிரிக்கா. முன்பே சொன்னது போல, ‘மழைத் தூரல்’ மைதானத்தை ஈர மோடிலேயே வைத்திருக்க, அதனால் ‘நம்மவர்’கள் பந்தை க்ரிப்பாக பிடிக்க முடியாமல் போக, வெற்றியை வசமாக்கியது தென்னாப்பிரிக்கா.

இந்த ஒரு காரணத்தால் மட்டும் நாம் தோற்கவில்லை. இந்தியா செட் செய்த டார்கெட் நல்ல டார்கெட் தான். ஆனால், தென்.ஆ. வீரர்கள் டார்கெட் செய்தது சாஹலை.. குறிப்பாக விக்கெட் கீப்பர் கிளாசீன், ‘ஷூட் த குருவி’ போல பக்காவாக டார்கெட் செய்தது சாஹலைத் தான்.

எப்போது தெரியுமா? 13வது ஓவரில்.. சாஹல் வீசிய அந்த ஓவரில் 6, 6, 4, 1, 0, 6. மொத்தம் 23 ரன்கள். ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் பக்கம் வேரோடு சாய்ந்தது இங்குதான். கடைசி சிக்சரைத் தவிர்த்து 17 ரன்கள் அந்த ஓவரில் விளாசினார் கிளாசீன்.

இதுகுறித்து போட்டி முடிந்த பிறகு கிளாசீன் பேசியது தான் சுவாரஸ்யத்தின் உச்சம். அவர் கூறுகையில், “எனக்கு சாஹலை ரொம்பப் பிடிக்கும். நிறைய பிடிக்கும். ஏனெனில், அவர் ஒரு லெக் பிரேக் ஸ்பின்னர். அமெச்சூர் கிரிக்கெட்டில் விளையாடிய பொழுது, நானும் ஷான் வான் பெர்க் எனும் லெக் ஸ்பின்னரும் இவ்வாறு அடிக்கடி ஜோக் அடித்துக் கொள்வோம்.. அதாவது, ‘மற்ற லெக் ஸ்பின்னர்களின் கேரியரை நான் முடித்து விட வேண்டும். அப்போது தான் அவர் டாப் பொஷிஷனில் இருக்க முடியும் என்று!’. எப்போதாவது நான் ஜோக் அடிப்பது நிஜமாக நடக்கும். நேற்று ‘சிறப்பாக’ நடத்தப்பட்டது.

13வது ஓவரை சாஹல் வீச வந்த போது, அப்போதே அவர் தான் எனது டார்கெட் என ஃபிக்ஸ் செய்து விட்டேன். அந்த ஓவரில் 20 ரன்களுக்கு மேல் அடிக்க முடியும் என்பது எனக்கு தெரியும். ஏனெனில், எனக்கு தான் லெக் ஸ்பின்னரை நன்றாக முடிக்க தெரியுமே!” என்று பேசியுள்ளார்.

ஜெர்மன் மொழியில் Ziel என்றால் ‘டார்கெட்’ என அர்த்தமாம். அப்போது ‘Ziel the Chahal’ தானே!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close