இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கேப்டவுன் நகரில், இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.
ஒருநாள் தொடரில் 5-1 என்ற மெகா வெற்றிக்கு பின்னர், இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதி வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், இன்று கேப்டவுன் நகரில் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, இரவு 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.
முதல் போட்டியில் இந்தியா வெல்ல, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுக்க, இன்றைய போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றிவிட இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இரண்டு டி20 போட்டியிலும், முதல் 6 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் டாமினேட் செய்தார்கள். ஆரம்பம் முதலேயே தென்னாப்பிரிக்க பவுலர்களை அடிக்க ஆரம்பித்தார்கள். இது உண்மையிலேயே மிக நல்ல விஷயம்.. நல்ல ஃபார்முலா என்றும் கூறலாம். ஒருநாள் தொடரில் பவுலிங்கில் இந்தியாவின் பலமாக சாஹல் இருக்கிறார். ஆனால், தற்போது டி20 தொடரில் அவரையே தங்கள் வெற்றிக்கு பாலமாக்கி கொள்கின்றனர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்.
ஒருநாள் தொடரில், இந்தியா தோற்ற ஒரே போட்டியில் குல்தீப் மற்றும் சாஹலின் ஓவரை பிரித்து மேய்ந்தனர் தென்.ஆ.வீரர்கள். மழையால் டி20 பாணியில் நடந்த அந்தப் போட்டியில், இந்திய ஸ்பின்னர்கள் ஏமாந்தே போயினர். ஆனாலும், இவ்விருவர் தான் மற்ற ஒருநாள் போட்டிகளில், தென்னாப்பிரிக்க பேட்டிங்கை குலைத்தவர்கள்.
ஆனால், இப்போது டி20 தொடரிலும், நான்காவது ஒருநாள் போட்டியில் நடந்த சம்பவங்கள் தான் அரங்கேறி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வென்றாலும், சாஹல் நான்கு ஓவர்களுக்கு 39 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார். இரண்டாவது டி20 போட்டியில் நான்கு ஓவர்களில் 64 ரன்களை வழங்கினார். விக்கெட்டே விழவில்லை. (காயம் காரணமாக முதல் இரு டி20 போட்டியில் குல்தீப் யாதவ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
இந்தியா தோல்வியடைந்த இரண்டு போட்டியிலும் (ஒருநாள் & டி20) சாஹல் விட்டுக் கொடுத்த மொத்த ரன்கள் 103. பவுலிங் ஆவரேஜ் 132.00. எகானமி 13.89. விட்டுக் கொடுத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை மட்டும் 13.
இரண்டாவது டி20 போட்டியில் 64 ரன்களை விட்டுக் கொடுத்த போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில், அதிக ரன்கள் கொடுத்த இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை சாஹல் பெற்றார். மேலும், அப்போட்டியில் 7 சிக்ஸர்கள் விட்டுக் கொடுத்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில், ஒரே போட்டியில் 7 சிக்ஸர்கள் விட்டுக் கொடுத்த முதல் இந்திய பவுலர் என்ற பெயரையும் சாஹல் பெற்றார்.
ஆக, டி20 வகை போட்டிகளில் சாஹலின் பவுலிங்கை தென்னாப்பிரிக்கா திறம்பட விளாசுகிறது எனலாம். குறிப்பாக, தென்னாப்பிரிக்கா வென்ற இரு போட்டியிலும், அந்த அணியின் விக்கெட் கீப்பர் கிளாசின் தான் 'ஆட்ட நாயகன்' விருதை வென்றிருக்கிறார்.
அதிலும், இரண்டாவது டி20 போட்டி முடிந்த பிறகு, 'சாஹலை டார்கெட் செய்து அடித்தேன்' என்று கிளாசின் கூறியிருப்பதை இந்திய நிர்வாகம் சாதாரணமாக எடுத்துக் கொண்டால், விளைவு பாதகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. டுமினி, மில்லர், கிளாசின், பெலுக்வாயோ என்று இடது கை அதிரடி கில்லர்கள் இருக்கும் தென்னாப்பிரிக்காவிடம், லெக் ஸ்பின்னரான சாஹல் மீண்டும் ஒருமுறை தோற்காமல் இருந்தால், இன்றைய இறுதி டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றி உறுதி!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.