இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே செஞ்சூரியனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வியுற்று தொடரையும் இழந்துவிட்டது. இப்போட்டியில் அறிமுக பவுலராக களமிறங்கிய லுங்கி எங்கிடி, இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
அனைவரும், சொல்கிறார்கள் எங்கிடி வேகத்தில், இந்திய அணி சரிந்தது என்று… உண்மை அதுவல்ல, தென்னாப்பிரிக்காவின் வெய்ன் பார்னல் வீசியிருந்தால் கூட, இந்திய அணி தோற்று தான் போயிருக்கும்.
காரணம், நம்ம இந்திய அணி வளர்க்கப்பட்ட விதம் அப்படி. அழகாக பேட்டிற்கு வருவது போல் பிட்ச் அமைத்து, அதிலேயே விளையாடி பழகியவர்களுக்கு தென்னாப்பிரிக்க பிட்ச்சில் எப்படி ஆட வரும்? சரி அது இருக்கட்டும்… நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்த பல சுவாரஸ்யமான புள்ளி விவரங்களை இங்கே பார்ப்போம்.
* இதற்கு முன், எந்தவொரு அணியும், தென்னாப்பிரிக்காவில் ஐந்தாம் நாளில் 250க்கு மேல் அடித்து டெஸ்ட் போட்டியை வென்றதே கிடையாது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணி 1910ம் ஆண்டு, தென்.ஆ அணிக்கு எதிராக 214 ரன்கள் இலக்கை, ஐந்தாம் நாளான இறுதி நாள் வெற்றிகரமாக துரத்தியதே இந்நாள் வரை சாதனையாக உள்ளது.
* இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே, புஜாரா மட்டும் தான் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் அவுட் முறையில் அவுட்டான முதல் இந்திய வீரராகிறார். இதற்கு முன் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங், 2000ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸிலும் ரன் அவுட் ஆகி இருந்தார்.
* டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய அணி தனது 7வது விக்கெட்டை மூன்று முறை 100 ரன்னுக்கும் குறைவான நிலையில் இருந்த போது இழந்திருப்பது இந்த இரண்டாவது நிகழ்வாகும். இத் தொடரில், 92, 82, 280, 87 ரன்கள் எடுத்திருந்த போது, இந்திய அணி தனது 7வது விக்கெட்டை இழந்துள்ளது. இதற்கு முன்னதாக, 1983/84ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இதுபோல் நடந்தது.
* இன்றைய போட்டியில், இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸில் எட்டாவது விக்கெட்டிற்கு ரோஹித் ஷர்மாவும், முகமது ஷமியும் 50 ரன்கள் திரட்டினர். இப்போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் இதுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். அதேபோல், இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில், மொத்தம் மூன்று இன்னிங்ஸில் 8வது விக்கெட்டுக்கு தான், இந்தியா பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளது. (49 & 99 – Capetown), (50 – Centurion).
* செஞ்சூரியனில் நடைபெற்ற கடைசி ஒன்பது டெஸ்ட் போட்டிகளில், ஒரு ஆசிய அணி கூட வெல்லவில்லை.
* தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருந்த இந்திய அணியின் வெற்றிப் பயணத்திற்கு தென்னாப்பிரிக்கா தற்போது முட்டுக்கட்டை போட்டுள்ளது. (10 Jun 2015 – Dec 2017)
* கேப்டனாக விராட் கோலி இழக்கும் முதல் டெஸ்ட் தொடர் இது.
* இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு:
முதல் இன்னிங்ஸ்:
விராட் கோலி – 153
மற்ற பத்து வீரர்களின் மொத்த ஸ்கோர் – 142
இரண்டாம் இன்னிங்ஸ்:
விராட் கோலி – 5
மற்ற பத்து வீரர்களின் மொத்த ஸ்கோர் – 141
இலக்கை எட்ட மீதமுள்ள 136 ரன்களை எடுக்க முடியாமல், இந்திய அணி தோற்றது. அதை கோலி எடுக்காமல் போக, முடிவு தோல்வி.
அன்று சச்சின்…. இன்று கோலி….
ஆனால், ஒரே வித்தியாசம் அன்று சச்சின், இரண்டு வடிவ கிரிக்கெட்டுக்கும் கட்டாயம் தேவைப்பட்டார். இன்று கோலி, டெஸ்ட் போட்டிகளுக்கு கட்டாயம் தேவைப்படுகிறார்.