இந்தியா தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்ற இந்திய அணி தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜேகனஸ்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கிய நிலையில், டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்கள் எடுத்து அசத்தினார்.
தொடர்ந்து 202 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 13.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பிறந்த நாளில் அசத்திய வீரர்கள்
நேற்று தனது 29-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்த இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 2.5 ஓவர்கள் (17 பந்துகள்) வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் குறிப்பாக டேவிட் மில்லர் விக்கெட்டை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் பிறந்த நாளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் குல்தீப் முதலிடம் பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் ஹசரங்கா 2021-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி 2-வது இடத்திலும், 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தென்ஆப்பிரிக்க அணியின் இம்ரான் தாஹீர் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி 3-வது இடத்திலும், யுஏஇ அணியின் கார்த்திக் மெய்யப்பன் அயர்லாந்து அணிக்கு எதிராக 2021-ம் ஆண்டு 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி 4-வது இடத்தில் உள்ளார்.
2023-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் படுதோல்வி
2023-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்க அணி டி20 போட்டிகளில் 4முறை படுதோல்வியை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டில் டர்பனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அடுத்து அதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஜெகனஸ்பார்கில் நடைபெற்ற போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து.
அதனைத் தொடர்ந்து நேற்று ஜெகனஸ்பார்கில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்து செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 2020-ம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் தென்ஆப்பிரிக்க அணி 4 முறை 90 மற்றும் அதற்கு மேல் ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியாவுக்காக ஒரு போட்டியில் அதிக விக்கெட்
டி20 போட்டிகளில்இந்தியாவுக்காக ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் 4-வது மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 2019-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக தீபக் சஹார் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து 2017-ல் சாஹல் இங்கிலாந்துககு எதிராக 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்திலும், 2022-ம் ஆண்டு ஆப்கான் அணிக்கு எதிராக புவனேஷ்வர் குமார் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி 3-வது இடத்திலும் உள்ளனர்.
நேற்று நடந்த தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் இந்த பட்டியலில் 4-வது இடத்திலும், 2018-ல் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 24 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் 5-வது இடத்திலும், 2018-ல் இங்கிலாந்துக்கு எதிராக 24 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தி குல்தீப் யாதவ் 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
டி20 போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணியின் குறைந்த ஸ்கோர்
இந்தியாவுக்கு எதிராக நேற்றைய போட்டிகளில் 95 ரன்களில் சுருண்ட தென்ஆப்பிரிக்க அணி டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2-வது குறைந்தபட்ச ரன்கள் என்ற மோசமான சாதனையை படைத்தது. இதில் ஜெகனஸ்பார்க்கில் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்க 89 ரன்களில் சுருண்டதே டி20 போட்டிகளில் குறைந்தபட்ச ஸ்கோராகும்.
2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் 96 ரன்களிலும், 2018-ல் கொழும்புவில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், 98 ரன்களிலும், 2013-ம் ஆண்டு செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக 100 ரன்களிலும் சுருண்டு தென்ஆப்பிரிக்கா தனது மோசமான சாதனையை படைத்தது.
டி20 போட்டிகளில் இந்தியாவின் பெரிய வெற்றி
தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டி20 போட்டிகளில் தனது 3-வது பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த பட்டியலில் நடப்பு ஆண்டில் அகமதாபாத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டி20 போட்டிகளில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து, அயர்லாந்து அணிக்கு எதிராக டுப்ளினில் நடைபெற்ற போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்திலும், 2022-ம் ஆண்டு ஆப்கான் அணிக்கு எதிராக 101 ரன்கள் வித்தியாசத்திலும், 2017-ல் கட்டாக்கில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 95 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி டி20 போட்டிகளில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.