இந்தியா-இலங்கை அணிகளிடையே நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6-விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இலங்கை அணியை வொயிட் வாஷ் செய்தது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 4-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த நிலையில், இந்தியா- இலங்கை அணிகளிடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள்போட்டி கொழும்புவில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக திக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் களம் இறங்கினர். 3-வது ஓவரிலேயே திக்வெல்லா 2-ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களம் இறங்கிய முனவீரா 4 ரன்களில் விரைவிலேயே வெளியேறினார். இதனால் இலங்கை அணி 6.3 ஓவர்களில் 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிரடியாக விளையாடிய உபுல் தரங்கா 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையடுத்து, திரிமண்னே, ஆங்கிலோ மேத்திவ்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டுச் சென்றது. அணியின் ஸ்கோர் 185-ஆக இருந்தபோது திரிமண்னே 67 ரன்களில் ஆட்டமிழந்தார். சற்றுநேரத்தில் ஆங்கிலோ மேத்திவ்ஸ் 55 ரன்களில் அவுட் ஆகவே, இலங்கை அணி 41.1 ஓவர்களில் 194 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதைத்தொடர்ந்து வந்த இலங்கை அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெறியேறவே, அந்தஅணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியின் போது அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்த டோனி, சங்கக்காராவின் சானையை(99 ஸ்டம்பிங்) முறியடித்தார்.
இந்திய அணி தரப்பில் புவனேஷ் குமார் 5-விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா 2 விக்கெட்டுகளும், குல்திப் யாதவ், சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரகானே களம் இறங்கினர். ரகானே 5 ரன்களிலும், ரோகித் சர்மா 16 ரன்களிலும் விரைவிலேயே வெறியேறினர். இந்திய அணி 7.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனையடுத்து, களம் இறங்கிய விராட் கோலி, மணிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி ஒருபுறம் ரன் குவிப்பில் ஈடுபட்டிருக்க, மணிஷ் பாண்டே 36 ரன்களில் அவுட்டானார். 25.5 ஓவர்களில் இந்திய அணி 123 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அடுத்து வந்த கேதர் ஜாதவ், கேப்டன் விராட் கோலிக்கு அருமையான பார்ட்னர்ஷிப் கொடுக்கவே, இந்திய அணி வெற்றிப்பாதைக்கு சென்றது. ஒருமுனையில் கேதர் ஜாதவ் அரைசதம் பூர்த்தி செய்ய, மற்றொரு புறம் விராட் கோலி தனது 30-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
அணியின் ஸ்கோர் 237-ஆக இருந்தபோது கேதர் ஜாதவ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வெற்றி இலக்கை இந்திய அணி எட்டியது. கேப்டன் விராட் கோலி கடைசி 110 ரன்களிலும்(116 பந்து, 9 பவுண்டரி), டோனி 1 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணி தரப்பில் மலிங்கா, விஷ்வா ஃபெர்ணாண்டோ, புஷ்பகுமாரா, ஹசரன்கா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் மலிங்கா, விஷ்வா ஃபெர்ணாண்டோ, புஷ்பகுமாரா, ஹசரன்கா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை(9.4-0-42-5) சாய்த்த இந்திய வீரர் புவனேஷ் குமார் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதேபோல, இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் பும்ரா தொடர் நாயகர் விருதை பெற்றார்.