இந்தியா vs இலங்கை: படுதோல்வி எதிரொலி... வீரர்கள் சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்!

டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் இழந்த இலங்கை அணி, ஒருநாள் போட்டியிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் படுதோல்வியை அடுத்து, இலங்கை வீரர்கள் சென்ற வாகனத்தை மறித்து இலங்கை ரசிகர்கள் கோஷங்கள் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்து டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை இலங்கை அணி இழந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை ஈடுகட்டும் வகையில், ஒருநாள் தொடரில் இலங்கை அணி சிறப்பாக விளையாட வேண்டும் என காத்திருந்தனர்.

ஆனால், ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சொதப்பியது. முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.India vs Srilanka

இதனால், ஆத்திரம் அடைந்த இலங்கை அணி ரசிகர்கள், இலங்கை அணி வீரர்கள் சென்ற இருந்த வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட ரசிகர்கள், இலங்கை வீரர்கள் செல்ல இருந்த வானத்தை மறித்து கோஷங்கள் எழுப்பினர். போலீஸார் வந்து அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக வீரர்களின் பயணம் சுமார் அரை மணி நேரம் தாமதமானது.

முன்னதாக, நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு செல்லாமல் இலங்கை அணி வெளியேறியது. இதையடுத்து, ஜிம்பாப்வே அணியுடன் நடைபெற்ற தொடரிலும், இலங்கை அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. தரவரிசையில் 11-வது இடத்தில் இருந்த ஜிம்பாப்வே அணியிடம், ஒருநாள் போட்டித் தொடரை பறிகொடுத்தது. அந்த அணியுடன் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.

தற்போது, இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டெஸ்ட் தொடரை தான் இழந்து விட்டது, இனி ஒருநாள் போட்டித் தொடரையாவது இலங்கை அணி கைப்பற்றும் என காத்திருந்த நிலையில், முதல் போட்டியிலேயே இலங்கை படுதோல்வியை சந்திதுள்ளது. இதுவே, ரசிகர்களின் கோபத்திற்கு முக்கிய காரணமாகும்.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில், குமார் சங்கக்காரா மற்றும் மகிளா ஜெயவர்த்தனே ஆகியோரின் இடத்தை நிறப்ப முடியாமல், தவித்து வருகிறது. எனினும், இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் அனைவரும்,  தடுமாறி வரும் இலங்கை அணிக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

tharanga

முன்னதாக ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்னர் இலங்கை அணியின் கேப்டன் உபுல் தரங்கா கூறும்போது: ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவு தான் அணி வீரர்களின் மன உறுதியை வலுப்படுத்தும். நாட்டிற்காக விளையாடி, நாட்டிற்கு பெருமை தேடி தருவதே எங்களின் எண்ணம். எனவே, ரசிகர்கள் எப்போதும் அணிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் உங்களது ஆதரவை அளிக்க வேண்டும். இலங்கை அணி மீண்டும் சிங்கத்தை போன்று எழுந்துவரும் என்று கூறினார்.

Kumar Sangakkara

முன்னாள் கேப்டன் சங்கக்காராவும், ரசிகர்கள் அனைவரும் இலங்கை அணியின் பக்க பலமாக இருக்க வேண்டும் என்று கூறினார். இது தொடர்பாக அவர் கூறும்போது: அணி வெற்றி பெறும்போது, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதும், தோல்வி அடையும் போது சோகத்தையும் ரசிகர்கள்  பகிர்ந்து கொள்கின்றனர். அதேபோல, அணி பல தடுமாற்றங்களை சந்திக்கும் சமயத்தில், ரசிகர்களின் அன்பு, ஆதரவு வேண்டும். எனவே, அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close