Advertisment

India vs Sri Lanka 1st Test: இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் 'மெகா' வெற்றி!

இந்திய அணி 498 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சி இருப்பதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Sri Lanka 1st Test: இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் 'மெகா' வெற்றி!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, காலேவில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது.

Advertisment

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான ஷிகர் தவானும், அபினவ் முகுந்தும் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 27-ஆக இருந்த போது, அபினவ் முகுந்த் ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய சட்டீஸ்கர் புஜாரா ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி எதிரணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 168 பந்துகளில் 190 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் ஆட்டமிழந்தபோதுஅணியின் ஸ்கோர் 280-2 என இருந்தது.

இதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 3 ரன்களில், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய அணி 286 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த ரகானே, புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். இதனிடையே, சட்டீஸ்கர் புஜாரா தனது 15-வது சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 399 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. காலே பிட்ச் முழுவதுமாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இருப்பினும், இலங்கையின் நுவான் பிரதீப், இந்திய வீரர்களை தனது ஸ்விங் பந்துவீச்சால் திணறடித்தார். 'வெல்செட்' பேட்ஸ்மேனாக இருந்த புஜாராவை, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஸ்விங் செய்து, கீப்பர் கேட்சாக்கினார் பிரதீப். இதனால், 153 ரன்களில் ஏமாற்றத்துடன் வெளியேறினார் புஜாரா.

தொடர்ந்து, சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய அஷ்வினையும் 47 ரன்களில் பிரதீப் அவுட்டாக்கினார். ரஹானே 57 ரன்களுடனும், சஹா 16 ரன்களுடனும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 49 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். அதேபோல், முகமது ஷமியும் 3 சிக்சர்களுடன் 30 ரன்கள் திரட்ட, இந்திய அணி 600 ரன்களை எட்டியது.

இலங்கைத் தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளையும், குமாரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர் கருனரத்னேவை 2 ரன்னில் உமேஷ் யாதவ் எல்.பி.டபிள்யூ ஆக்கினார். அதைத் தொடர்ந்து குனத்திலகா மற்றும் குஷால் மெண்டிசை அடுத்தடுத்து ஷமி வெளியேற்றினார். சிறப்பாக ஆடிய உபுல் தரங்கா 64 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை தனது முதல் இன்னிங்ஸில்  5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து தடுமாறியது.

இந்த நிலையில், நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை, 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக, தில்ருவான் ஃபெரேரா 92 ரன்களும், மேத்யூஸ் 83 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து இலங்கைக்கு ஃபாலோ ஆன் தராமல், இந்திய அணி தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் விளாசிய தவான், இம்முறை 14 ரன்களில் வெளியேறினார். புஜாரா 15 ரன்னில் அவுட்டானார். தற்போதுவரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. போட்டியின்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கியது. அபினவ் முகுந்த்தும், விராட் கோலியும் ஜோடிசேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அபினவ் முகுந்த் 81 ரன்கள் எடுத்திருந்தபோது, குணதிலகா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதையடுத்து மூன்றாம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 76 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இந்திய அணி, 240 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 550 ரன்கள் எனும் பிரம்மாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து. உணவு இடைவேளையின் போது, 23 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள்களை எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர், இலங்கையின் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழத் தொடங்கியது. முடிவில்  அந்த அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கருணரத்னே 97 ரன்களும், டிக்வெல்லா 67 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஏற்கனவே அசெல் குணரத்னே காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், ரங்கனா ஹெராத்தும் காயம் காரணமாக இரண்டாம் இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை. இதனால், 76.5-வது ஓவரில் எட்டு விக்கெட்டுகள் இழந்த நிலையில், இலங்கை 304 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத்  தழுவியது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 1-0 என வென்று இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இலங்கை மண்ணில் இந்திய அணியின் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

India Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment