இந்தியா vs இலங்கை: தவான் - கோலி அதிரடியில் இலங்கையை பந்தாடியது இந்தியா!

ஷிகர் தவான் 137 (90 பந்து, 20 பவுண்டரிகள், 3 சிக்சர்) ரன்களுடனும். விராட் கோலி 80 ரன்களுடனும்(70 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்ஸர்)...

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், 5 ஓருநாள் மேற்றும் ஒரு 20 ஓவர் போட்டி உள்ளிட்ட தொடர்களில் விளையாடிவருகிறது. முன்னதாக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் செய்து, தொடரை வென்றது

இந்த நிலையில், இந்தியா இலங்கை அணிகளிடையேயான முதல் ஒருநாள் போட்டி தம்புல்லாவில் இன்று(20-08-17) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் ஃபில்டிங்கை தேர்வு செய்தது.

India vs Srilanka

இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் திக்வெல்லா மற்றும் குணதிலகா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அந்த அணி முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. அணியின் ஸ்கோர் 74-ஆக இருந்தபோது, குணதிலாக 35 ரன்னில்(44 பந்து, 4 பவுண்டரி)ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் பூர்த்தி செய்த திக்வெல்லா 64 ரன்களில்(74 பந்து, 8 பவுண்டரி), கேதவ் ஜாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

அணியின் ஸ்கோர் 150 ரன்களாக இருக்கும்போது, குஷால் மெண்டிஸ் 36 (37 பந்து, 5 பவுண்டரி)ரன்களில், அக்‌ஷர் பட்டேல் பந்தில் போல்டானார். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். உபுல் தரங்கா 13 ரன்களில் (23 பந்து), கபுகேதரா 1 ரன்னிலும், ஹசரங்கா 2 ரன்களிலும், பெரெரா ரன் ஏதும் எடுக்காமலும், சண்டகன் 5 ரன்களிலும், மலிங்கா 8 ரன்களிலும், ஃபெர்ணான்டோ ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 43.3 ஓவர்களில்  216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. மறு முனையில் மல்லுக்கட்டிய மேத்திவ்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் (50 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்ஸர் )எடுத்திருந்தார்.

இந்திய அணி தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டுளையும், பும்ரா, சாகல், கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

அடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினார்கள். ஆரம்ப அதிர்ச்சியாக ரோகித் ஷர்மா 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்கி தோள் கொடுக்க, ஷிகர் தவான் அதிரடியாக இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஷிகர் தவான் 71 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். 28.5 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 137 (90 பந்து, 20 பவுண்டரிகள், 3 சிக்சர்) ரன்களுடனும். விராட் கோலி 80 ரன்களுடனும்(70 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close