இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. ஜசிசி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 7-வது இடத்தில் இருக்கும் இலங்கைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்த தொடரில் களம் இறங்கியுள்ளது.
நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான ஷிகர் தவானும், அபினவ் முகுந்தும் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 27-ஆக இருந்த போது, அபினவ் முகுந்த் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய சட்டீஸ்கர் புஜாரா ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி எதிரணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 168 பந்துகளில் 190 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் ஆட்டமிழந்தபோதுஅணியின் ஸ்கோர் 280-2 என இருந்தது.
இதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 3 ரன்களில், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய அணி 286 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த ரகானே, புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். இதனிடையே, சட்டீஸ்கர் புஜாரா தனது 15-வது சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 399 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. காலே பிட்ச் இன்று முழுவதுமாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இருப்பினும், இலங்கையின் நுவான் பிரதீப், இந்திய வீரர்களை தனது ஸ்விங் பந்துவீச்சால் திணறடித்தார். 'வெல்செட்' பேட்ஸ்மேனாக இருந்த புஜாராவை, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஸ்விங் செய்து, கீப்பர் கேட்சாக்கினார் பிரதீப். இதனால், 153 ரன்களில் ஏமாற்றத்துடன் வெளியேறினார் புஜாரா.
தொடர்ந்து, சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய அஷ்வினையும் 47 ரன்களில் பிரதீப் அவுட்டாக்கினார். ரஹானே 57 ரன்களுடனும், சஹா 16 ரன்களுடனும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 49 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். அதேபோல், முகமது ஷமியும் 3 சிக்சர்களுடன் 30 ரன்கள் திரட்ட, இந்திய அணி 600 ரன்களை எட்டியது.
இலங்கைத் தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளையும், குமாரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தற்போது வரை 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. கருனரத்னேவை 2 ரன்னில் உமேஷ் யாதவ் எல்.பி.டபிள்யூ ஆக்கினார்.
முன்னதாக, இப்போட்டியின் போது, இலங்கை ஆல்ரவுண்டர் வீரர் அசிலா குணரத்னே இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் போட்டியில் இருந்து விலகினார்.
ஷிகர் தவான் அடித்த பந்து அசிலா குணரத்னேவின் இடது கை பெரு விரலை பதம்பார்த்தது. 2வது சில்ப் பொசிஷனில் நின்றிருந்த அசிலா குணரத்னே கேட்ச் பிடிக்க முயன்ற போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆல்ரவுண்டர் அசிலா குணரத்னே இல்லாதது இலங்கைக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. இலங்கை அணி இனிதான் இரண்டு இன்னிங்ஸும் விளையாடவுள்ள வேண்டும் என்ற நிலையில், அந்த அணிக்கு பேட்டிங்கில் ஒரு விக்கெட் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.