இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகலே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 50 ஓவர்கள் முடிவில் 236 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி, அடுத்ததாக ஆரம்பித்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதைத் தொடர்ந்து இன்று 2-வது ஒருநாள் போட்டி தொடங்கியது.
இந்திய அணியை பொறுத்தவரை ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், இலங்கை அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் படுதோல்வி அடைந்திருப்பதால், மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. திசாரா ஃபெரேரா, வனிது ஹசரங்கா, லக்ஷன் சன்கடன் ஆகியோர் நீக்கப்பட்டு துஷ்மந்தா சமீரா, அகிலா தனஞ்செயா, மிலிந்தா சிறிவர்த்தனா ஆகியோர் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டனர்.
தொடக்க வீரர்கள் டிக்வெல்லா 31 ரன்னிலும், குணதிலகா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து குசல் மெண்டிஸ் 19 ரன்னிலும், கேப்டன் உபுல் தரங்கா 9 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றினார்கள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏஞ்சலா மேத்யூஸ் 20 ரன்னில் அவுட்டானார். இதனால், அந்த அணி 121 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் ஜோடி சேர்ந்த மிலிந்தா சிறிவர்த்தனா - கபுகேதரா ஜோடி அணியை ஓரளவிற்கு சிக்கலில் இருந்து மீட்டது. ஆறாவது விக்கெட்டிற்கு இந்த இணை 91 ரன்கள் சேர்த்தது.
மிலிந்தா 58 ரன்னிலும், கபுகேதரா 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது.
#TeamIndia need 237 runs to win the 2nd ODI #SLvIND pic.twitter.com/v2aDBlJGIg
— BCCI (@BCCI) 24 August 2017
இந்திய அணி தரப்பில் பும்ரா 10 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். யுவேந்திரா சாஹல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனால், இந்திய அணிக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எளிதாக வென்றுவிடலாம் என்று களம் இறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்கரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 109 ரன்களை சேர்த்தனர். 16வது ஓவரில் ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்தார். 17வது ஓவரில் ஷிகர் தவான் தனது விக்கெட்டை இழக்க, இந்திய அணி வேகமாக சரிய தொடங்கியது.
தனஞ்ஜெயா (18வது ஓவரில்) கே.எல்.ராகுல், ஜத்தேவ், விரட் கோலி மூவரும் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா பரிதவித்தது. ஆனாலும் பசியடங்காத தனஞ்ஜெயா, அடுத்தடுத்த ஓவர்களில் பாண்டியா, அக்ஸர் பட்டேல் ஆகியோர் விக்கெட்டையும் வீழ்த்த, இந்திய அணி 131 ரன்னுக்கு 7 விக்கட்டை இழந்து தவித்தது.
அதன் பின் ஜோடி சேர்ந்த டோனியும், புவனேஸ்வர் குமாரும் நிதானமாக ஆடினர். ஒருநாள் போட்டியா டெஸ்ட் போட்டியா என்று சந்தேகம் எழுந்தது. 34.3வது ஓவரில் டோனி எதிர் கொண்ட பந்து பேட்டில் பட்டு, கால்களுக்கு இடையே புகுந்து, ஸ்டம்பின் அடிபாகத்தில் மோதியது. நல்ல வேளையாக டெயில்ஸ் கீழே விழவில்லை. இதனால் டோனி அவுட்டில் இருந்து தப்பினார். அதே ஓவரில் புவனேஸ்வர் குமார் எல்.பி.டப்ள்யூவில் இருந்து தப்பினார்.
இருவரும் ஒன்று இரண்டு ரன்களாக சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் என்றனர். 44.2 ஒவரில் இந்தியா 231 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இலங்கை பந்துவீச்சாளர்கள் 14 ஓய்டு பந்துகளை வீசியது, இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. எட்டாவது விக்கெட்டுக்கு இலங்கைக்கு எதிராக டோனி - புவனேஸ்குமார் 100 ரன்களை எடுத்து சாதனைப் படைத்தது. புவனேஸ்குமார் தனது முதலாவது அரை சதத்தையும் பூர்த்தி செய்தார்.
மூன்று விக்கெட்டுகள், 53 ரன்கள் எடுத்த புவனேஸ்குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆறு விக்கெட்டுகளை தனஞ்ஜெயா வீழ்த்தியும் கொண்டாட முடியாமல் போனது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.