இந்தியா vs இலங்கை 2-வது டெஸ்ட்: இலங்கை மண்ணில் முதன்முறையாக இன்னிங்ஸ் வெற்றி!

இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி கொழும்புவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். காய்ச்சல் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத லோகேஷ் ராகுல்,  ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக களமிறங்கினார்.

ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய தவான், ஒரு சிக்ஸருடன் 37 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த போது, பெரேரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அரைசதம் கடந்த ராகுல் 57 ரன்கள் எடுத்திருந்த போது, ரன் அவுட் ஆனார்.

கடைசியாக விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரைசதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்  லோகேஷ் ராகுல். இதற்குமுன்னர் விஸ்வநாத் மற்றும் ராகுல் டிராவிட்  இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

பின், களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, 13 ரன்னில் ஹெராத் ஓவரில் கேட்ச் ஆனார். இதனால் 133 ரன்களுக்கு இந்தியா 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது.

இதையடுத்து களமிறங்கிய ரஹானே, புஜாராவுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  புஜாரா 35 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்தார். 84-வது டெஸ்ட் இன்னிங்ஸில் இதை அவர் நிகழ்த்தியுள்ளார்.  ஆச்சர்யப்படும் விதமாக, ‘இந்திய அணியின் சுவர்’ என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டும் தனது 84-வது டெஸ்ட் இன்னிங்ஸில் தான் 4000 ரன்களைக் கடந்தார்.  தொடர்ந்து சிறப்பாக ஆடிய புஜாரா, இன்று தனது 13-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதையடுத்து, ரஹானேவும் 151 பந்துகளில் தனது ஒன்பதாவது டெஸ்ட்  சதத்தை பூர்த்தி செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 128 ரன்களுடனும், ரஹானே 103 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடங்கத்திலேயே  சட்டீஸ்கர் புஜாரா 133 ரன்களில்(232 பந்து, 11-பவுண்டரி, ஒரு சிக்ஸர்)ஆட்டமிழந்தார்.  இதேபோல, ரகானே 132 ரன்கள் (222 பந்து, 14 பவுண்டரிகள்)எடுத்திருந்தபோது புஷ்பகுமாரா பந்தில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 451-ஆக இருந்த போது அஸ்வின் 54 ரன்களில்(92 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ஹெராத் பந்தில் போல்டானார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய ஹர்த்திக் பாண்டியா 20 ரன்களில் வெளியேறினார்.

இந்திய அணி, 155.1 ஓவர்களில் 600 ரன்களை கடந்தது. ஒரு புறம் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்தாலும், மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா அரைசதம் அடித்துத்தார். அணியின் ஸ்கோர் 622-9 என்று இருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்சியாக அமைந்தது. அந்த அணியின் கருணாரத்னே மற்றும் தரங்கா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். தரங்காக ரன் ஏதும் எடுக்காமலேயே அஸ்வின் பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு இலங்கை அணி 50 ரன்கள் எடுத்துள்ளது.

மூன்றாம் நாளான நேற்று தனது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் சந்திமல் 10 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். டிக்வெல்லா மட்டும் சற்று தாக்குப்பிடித்து 51 ரன்கள் எடுத்தார்.

எஞ்சிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, 49.4 ஓவரில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது இலங்கை. இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளும், ஷமி மட்டும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர் உபுல் தரங்கா 2 ரன்னில், உமேஷ் யாதவ் ஓவரில் போல்டானார். அதன்பின், இலங்கை அணியின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. குறிப்பாக குஷல் மென்டிஸ், இந்தியாவின் அஷ்வின், ஜடேஜா ஓவர்களை அடித்து ஆடினார். 135 பந்துகளை சந்தித்த மென்டிஸ், 17 பவுண்டரிகளின் உதவியுடன் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 120 பந்துகளில் தனது சதத்தை அவர் எட்டினார். ஹர்திக் பாண்ட்யா ஓவரில், விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில், சிறப்பாக ஆடி வந்த கருணாரத்னே 141 ரன்களில் ஆட்டமிழந்தார். பின், மேத்யூஸ் 36 ரன்களுடனும், டிக்வெல்லா 31 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். முடிவில், இலங்கை 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.

இலங்கை மண்ணில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெறும் முதல் இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும். கோலி தலைமையிலான இந்திய அணி இச்சாதனையை படைத்துள்ளது.

×Close
×Close