Advertisment

இந்தியா vs இலங்கை 3-வது ஒருநாள் போட்டி: தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்!

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியா vs இலங்கை 3-வது ஒருநாள் போட்டி: தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்!

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி, அடுத்ததாக ஆரம்பித்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளை வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இன்று 3-வது ஒருநாள் போட்டி பல்லேகலே மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கபுகேதரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Advertisment

இரண்டாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்தால், இலங்கை அணி கேப்டன் உபுல் தரங்காவிற்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்றைய போட்டிக்கு இலங்கை கேப்டனாக சமரா கபுகேதரா செயல்படுகிறார். முதன்முறையாக இவரது தலைமையின் கீழ் இலங்கை ஆடுகிறது. தரங்காவிற்கு மாற்று வீரராக திரிமண்ணே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை மாற்றம் ஏதுமில்லை.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் டிக்வெல்லா 13 ரன்னிலும், மெண்டிஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய தினேஷ் சன்டிமால் 36 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் பும்ராவிடம் கேட்ச் ஆனார், இன்னொரு முனையில் சவாலாக திகழ்ந்த லகிரு திரிமன்னேவை 80 ரன்களில் பும்ரா காலி செய்தார். அதன்பிறகு முன்னாள் கேப்டன் மேத்யூஸ், தற்காலிக கேப்டன் கபுகேதரா ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், அந்த அணி நிலைகுலைந்தது.

இதனால் 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், பாண்டியா, கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கை அணி ஒரு சவாலான இலக்கு நிர்ணயித்திருந்தால், நிச்சயம் அந்த டார்கெட்டை இந்தியா எட்டிவிடும். ஆனால், 218 போன்று ஒரு சுமாரான இலக்கு தான் உண்மையில் மிகவும் ஆபத்தான சேஸிங்காகும். ஏனெனில், இந்த இலக்கை எட்ட வீரர்களுக்கு அதிக நம்பிக்கையும் தேவையில்லை, அதிக மன உறுதியும் தேவையில்லை. ஆனால், அதுவே ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது. சாதாரண இலக்கு தானே என இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் ஏமாந்தாலும், நிச்சயம் தோல்வி தான். இரண்டாவது ஒருநாள் போட்டியில், 231 ரன்கள் இலக்கை துரத்த பட்ட அவஸ்தயை இந்திய வீரர்கள் மறந்துவிடக் கூடாது.

இந்த நிலையில், தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த ஷிகர் தவான் 5 ரன்களில் மலிங்கா ஓவரில் போல்டானார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, 3 ரன்களில் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார்.

அதற்குப்பின் பவுலிங் செய்ய வந்த தனஞ்செயா கடந்த ஆட்டத்தைப் போலவே, இந்தப் போட்டியிலும் அடுத்தடுத்து விக்கெட் வேட்டையை துவக்கினார். லோகேஷ் ராகுல் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தனஞ்செயாவிடம் பலியானார்கள். இதனால், இந்திய அணி 61 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஒருபக்கம் ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தாலும், விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் ரசிகர்கள் அச்சமடைந்தனர். ஆனால், இந்த முறையும் விக்கெட் வீழ்ச்சிக்கு 'கேப்டன் கூல்' தோனி தடுப்பணை கட்டினார்.

இலங்கை பவுலர்களால் இறுதிவரை இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்கவே முடியவில்லை. அபாரமாக ஆடிய ரோஹித் தனது 12-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 16 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல், தோனியும் அரைசதம் விளாசினார். வெற்றிக்கு 8 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், இலங்கை ரசிகர்களில் சிலர் ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை மைதானத்தை நோக்கி வீசினர். இதனால் ஆட்டம் தடைப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியவுடன் 45.1-வது ஓவரில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ரோஹித் 124 ரன்களுடனும், தோனி 67 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்தியா 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Virat Kohli India Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment