இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், அடிக்கடி ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 172 ரன்கள் மட்டும் எடுத்தது.
அதிகபட்சமாக புஜாரா 52 ரன்கள் எடுத்தார். விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். இலங்கை தரப்பில், சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. திரிமன்னே 51 ரன்களும், மேத்யூஸ் 52 ரன்களும் எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி 45.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்த போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் சண்டிமல் 13 ரன்னுடனும், டிக்வெல்லா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
4-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஷிகர் தவானின் விக்கெட்டை மட்டும் இழந்து 171 ரன்கள் சேர்த்திருந்தது. 5-வது நாளான இன்று வேகமாக ரன்களை குவித்து, இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க இந்திய அணி முடிவு செய்தது.
ஆனால் அதிர்ச்சி தரத்தக்க வகையில் லோகேஷ் ராகுல் 79 ரன்களில் லக்மல் பந்தில் போல்டு ஆனார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் அரை சதம் கண்ட புஜாராவும் 22 ரன்களில் லக்மல் பந்திலேயே கல்லி திசையில் கேட்ச் ஆனார். இதனால் இந்தியாவின் வெற்றிக் கனவும் நொறுங்கியது. அடுத்த அடியாக ரஹானேவும் 4 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் லக்மல் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதன்பின், தனி ஆளாக போராடிய விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 18-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இதனால், இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 231 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை, அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்தது. 26.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால், தோல்வியில் இருந்து இலங்கை தப்பியது.