ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 15 ரன்களுடனும் விருத்திமான் சாஹா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து இன்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் 15 ரன்களிலும், சஹா 9 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய உமேஷ் யாதவ் (6), ஷமி (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் கடைசி 11 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், மீச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், லியோன் ஹாசில்வுட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி தக்க பதிலடி கொடுத்தது. இந்தியாவை போல ஆமை வேகத்தில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர் மேத்யூ வாட் 8 (51), பர்ன்ஸ் 8 (41)ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய லபுசேஸன் ஒரு புறம் போராட, மறுமுனையில், முன்னணி பேட்ஸ்மேன் ஸ்மித் 1 (29) ரன்னுக்கும், ஹெட் 7 ரன்களுக்கும், அறிமுக வீரர் கிரீன் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணிக்கு 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் பெய்ன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுசேஸன் அரைசத்ததை நெருங்கிய நிலையில், 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கம்மின்ஸ் (0), ஸ்டார்க் (15), லியோன் (10) ஹாசில்வுட் (8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் டீம் பெய்ன் 73 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக 4 ரன்கள் எடுத்திருந்த தொடக்க வீரர் பிரித்வி ஷா கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இவர் முதல் இன்னிங்சில் ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் 2-வது பந்தில் போல்ட் ஆகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும், தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதுவரை இந்திய அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"