இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பும்ரா, புவனேஷ்வரின் பந்துவீச்சே காரணம் என விராட் கோலி கூறினார்.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 25) புனேயில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 230 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த இந்தியா 46 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியில் 10 ஓவர்களில் 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, நியூசிலாந்தின் சரிவுக்கு வழிவகுத்த புவனேஷ்வர்குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பும்ரா பந்துவீச்சிலும், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கிலும் ஜொலித்தனர்.
இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது :
டாஸ் நேரத்தில் பேசியது போல, இன்று எங்களின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. பகலில் மைதானம் மெதுவாகவும், மாலையில் சற்றே சிறப்பாகவும் அமையும் என நினைத்தோம். அப்படியே இருந்தது. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பீல்டிங்கும் நன்றாக இருந்தது.
குறிப்பாக பும்ராவையும், புவனேஷ்வரையும் சொல்லியாக வேண்டும். இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய பணி அவர்களுக்கு இருப்பது அவர்களுக்கு தெரியும். மெதுவான மைதானத்தில் அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
பேட்டிங்கில் தவான் சிறப்பாக செயல்பட்டார். பந்துகளை சரியான முறையில் விளாசினார். இந்த தருணத்தில் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் காட்சி தருகிறார். தினேஷ் கார்த்திக் அவருக்கும், அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ரன்களை திரட்டினார். ஆட்டத்தில் சவால்களை எப்போதும் நான் எதிர்பார்த்தே இருக்கிறேன். கடந்த ஆட்டத்தில் நடந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்திருக்கிறோம். கான்பூரில் (3-வது போட்டி) இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ என்றார் கோலி.
நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் கூறுகையில், “230 ரன்கள் என்பது போதுமானதல்ல. எங்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கூடுதல் ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். இந்திய பவுலர்களின் தொடக்க பந்துவீச்சு அருமை. அவர்கள்தான் எங்களுக்கு அழுத்தத்தை அதிகரித்துவிட்டார்கள். அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ என்றார் வில்லியம்சன்.
தினேஷ் கார்த்திக் கூறுகையில், தனக்கு நம்பிக்கை அளித்ததாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும், கேப்டன் விராட் கோலியையும் புகழ்ந்தார்.