இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்திய அணி முழுமையாக இலங்கையை வீழ்த்தி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
இலங்கை அணியின் தொடக்கவீரர் கேப்டன் தரங்கா 5 ரன்னில் வெளியெற, அடுத்து வந்த முனவீரா அதிரடியாக விளையாடினார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய போதும், அடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முனிவீரா 53 ரன்களும், பிரியஞ்சன் 40 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் ஷர்மா, 9 ரன்களில் வெளியேற லோகேஷ் ராகுல் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய கேப்டன் கோஹ்லி, 54 பந்துகளுக்கு 82 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். அதன்பிறகு வந்த மனிஷ் பாண்டே அரை சதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய இந்திய அணி, 19 புள்ளி 2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய கேப்டன் கோஹ்லி 82 ரன்களும், மனிஷ் பாண்டே 51 ரன்களும் குவித்து வெற்றி வித்திட்டனர்.
இந்தப் போட்டியிலும் வெற்றி பெறுவதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான மொத்த தொடரையே ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.