இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி! ஆனாலும், இது முழுமையான வெற்றி தானா?

இந்தியாவுக்கு எதிராக ஹஷிம் ஆம்லாவின் கடைசி 10 ஒருநாள் போட்டிகளின் ஸ்கோர் 13, 22, 37, 17, 5, 7, 23, 35, 16 & 23 (இன்று).

இந்தியாவுக்கு எதிராக ஹஷிம் ஆம்லாவின் கடைசி 10 ஒருநாள் போட்டிகளின் ஸ்கோர் 13, 22, 37, 17, 5, 7, 23, 35, 16 & 23 (இன்று).

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி! ஆனாலும், இது முழுமையான வெற்றி தானா?

ANBARASAN GNANAMANI

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே செஞ்சூரியனில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றுள்ளது.

Advertisment

உண்மையில் இது மெகா வெற்றி தான்! 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதற்காக இல்லை. தென்னாப்பிரிக்காவை தென்னாப்பரிக்க மண்ணில் இவ்வாறு வீழ்த்தியது தான் மிகப்பெரிய சாதனை. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவை வெறும் 118 ரன்களில் சுருட்டி, இலக்கை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 20.3வது ஓவரிலேயே வென்றுள்ளது இந்திய அணி. இதன் மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்திய வீரர்களின் செயல்பாடுகள் மெச்சத்தக்க வகையில் தான் இருந்தது. அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனாலும்.... இது இந்தியாவின் 100% உண்மையான வெற்றியாக கருத முடியுமா?

முதல் ஒருநாள் போட்டியில், பேட்டிங்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த டர்பன் ஆடுகளத்தில், தென்னாப்பிரிக்கா 269 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த கிரவுண்டில் 350 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 330 ரன்களாவது எடுத்திருக்க வேண்டும். இதை செய்யத் தவறியது தென்னாப்பரிக்கா.

Advertisment
Advertisements

இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சொதப்பும் ஆம்லா-வின் மோசமான ஃபார்ம் மற்றும் டுமினி, டேவிட் மில்லரின் மிக மோசமான ஃபார்ம். தென்னாப்பிரிக்காவின் பேட்டிங்கை தூக்கி நிறுத்த வேண்டிய முக்கிய பொறுப்புடைய இவர்கள் மூவரும், சொற்ப ரன்னில் இரு போட்டிகளிலும் வெளியேறியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக ஹஷிம் ஆம்லாவின் கடைசி 10 ஒருநாள் போட்டிகளின் ஸ்கோர்

13, 22, 37, 17, 5, 7, 23, 35, 16 & 23 (இன்று).

டி வில்லியர்ஸ், டு பிளசிஸ் இல்லாததும் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு தான். ஆனால், இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் தோற்றுவிடும் அளவிற்கு அந்த அணி மோசமானது கிடையாது. அதுவும் தங்களது சொந்த மண்ணில் அவ்வளவு சீக்கிரம் தோற்காத அணி தென்னாப்பிரிக்கா.

ஆனால், இப்போது நடக்கும் விஷயம் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. மேற்சொன்ன மூவரின் ஃபார்ம் அவுட், டி20 போட்டிகளுக்கு சேர்க்க வேண்டிய ஆல் ரவுண்டர் க்ரிஸ் மோரிசை அணியில் சேர்த்தது, அனுபவமில்லாத ஆல் ரவுண்டர் பெலுக்வாயோவை அணியில் சேர்த்தது, போன்ற விஷயங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, முதல் போட்டியில் அந்த அணியின் பேட்டிங்கை குலைத்துவிட்டது. பெலுக்வாயோவை சேர்த்தது தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அவரது அனுபவமின்மையை இந்திய அணி பயன்படுத்திக் கொண்டது. குறிப்பாக, இப்படி பல குறைகளை கொண்டிருந்த அந்த அணியை,  விராட் கோலி நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

அதேசமயம், டு பிளசிஸ் சதமடித்து, 269 ரன்கள் என்ற ஓரளவிற்கு டீசன்டான இலக்கு நிர்ணயித்தும் அந்த அணி தோற்றுள்ளது. இதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம். மோர்னே மோர்கலின் பவுன்ஸ் இரண்டு ஆடுகளங்களிலும் எடுபடவில்லை. ரபாடா பந்துவீச்சையும் இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்துவிட்டனர். முக்கிய ஸ்பின்னரான இம்ரான் தாஹிரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இதற்கு காரணம், நாம் முன்பே சொன்னது போல, முதல் போட்டி நடந்த டர்பன் மைதானம் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது தான். இரண்டாவது போட்டியில், மொத்தமாகவே அந்த அணி 118 ரன்கள் தான் எடுத்தது. இதை தற்போதுள்ள ஜிம்பாப்வே அணியே சேஸ் செய்துவிடும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நேரமும் காலமுமே தென்னாப்பிரிக்காவை இந்த சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது எனலாம். சீனியர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல், அனுபவமில்லா இளம் வீரர்களின் திணறல், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை இரண்டு போட்டிகளிலும் தோற்கடித்துவிட்டது.

டி வில்லியர்ஸின் வருகை நிச்சயம் அந்த அணியின் பேட்டிங் வரிசையில் புதிய தெம்பை கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இரண்டு போட்டியில் தோற்றாலும், அவர்களின் பந்துவீச்சு பலம் வாய்ந்ததாகவே திகழ்கிறது. எனவே, அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம், பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டியது மட்டுமே.

இருப்பினும், இந்திய அணியையும் பாராட்டியே தீர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால்,  இப்போது கேப்டன் கோலி ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் நான்கு வீரர்களுக்கு அடுத்தபடியாக உள்ள தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் எந்தளவிற்கு இந்த ஒருநாள் தொடரில் பிரகாசிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏனெனில், இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி 2 விக்கெட்டுகளுக்கு மேல் இழக்கவில்லை. அதேபோல், ஸ்பின் பந்துவீச்சை வைத்து மட்டும் இத்தொடரை வென்றுவிட முடியாது. இதனால், எச்சரிக்கை அவசியம்.

Virat Kohli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: