Advertisment

HBD AKILAN PARI: கிரிக்கெட்டுக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்ற போட்டிகளுக்கு இல்லை ஏன்? அகிலன் பாரி விளக்கம்

இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அகிலன் பாரி தமிழகத்தில் பிறந்து இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Akilan Pari

இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அகிலன் பாரி

இந்தியாவில் மக்கள் கிரிக்கெட் போட்டிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற எந்த விளையாட்டு போட்டிக்கும் கொடுப்பதில்லை. இதன் காரணமாக கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மக்கள் மனதில் தனி இடம் பிடிக்கும், நிலையில், மற்ற விளையாட்டு வீரர்கள் பெரிய சாதனை படைத்திருந்தாலும், அவர்கள் யார் என்று பெரும்பாலான மக்களுக்கு தெரியவதில்லை.

Advertisment

அந்த வகையில், தமிழக விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் அறியப்படமாத ஒரு வீரர் தான் அகிலன் பாரி. தமிழ்நாட்டில் பிறந்த இவர், இந்திய கூடைப்பந்து முக்கிய வீரராகவும், வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் திகழ்ந்துள்ளார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 1989-ம் ஆண்டு சென்னையில் பிறந்த அகிலன் பாரிக்கு இன்று பிறந்த நாள்.

இன்றைய தினத்தில் இந்த கூடைப்பந்தாட்ட வீரரின் விளையாட்டு வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்வதற்காக அவரை தொடர்புகொண்டோம்.

Akilan Pari

இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட் மீது அதிக ஆர்வத்துடன் இருக்கும்போது நீங்கள் கூடைபந்தாட்டத்தில் ஆர்வம் காட்ட காரணம் என்ன?

பொள்ளாச்சியில் தான் எனது வாழ்க்கையை தொடங்கினேன். அப்போது அங்கு கிரிக்கெட் போட்டிக்கு போதுமான கட்டமைப்பு இல்லை. பயிற்சி மையம், பயிற்சியாளர் என யாருமே கிரிக்கெட் போட்டிக்கு என்று இல்லாமல் இருந்த காலக்கட்டம். அப்போது கூடைப்பந்தாட்டத்தில் முன்னாள் வீரர்கள் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். நானும் முதலில் கிரிக்கெட் தான் விளையாடிக்கொண்டு இருந்தேன். நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது, கிரிக்கெட் போட்டியே விளையாடிக்கொண்டு இருந்தால் முன்னேற முடியாது என்று முடிவு செய்து கூடைப்பந்தாட்டத்தை தேர்வு செய்தேன்.

கூடைப்பந்தாட்டதை தேர்வு செய்து விளையாடும்போது கிரிக்கெடை விட்டுவிட்டோமே என்று யோசித்தது உண்டா?

இந்தியாவில் எப்போதுமே கிரிக்கெட் போட்டிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கார்ப்ரேட் கம்பெனிகள், அதிக விளம்பரங்கள் என அனைத்துமே கிரிக்கெட் போட்டிக்கு கிடைக்கிறது. இளைஞர்கள் பலர் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனால் அதில் அத்தனைபேரும் மாநில அணிக்கோ அல்லது இந்திய அணிக்கோ தேர்வாகிவிடுவதில்லை. இதை மனதில் வைத்துக்கொண்டதால் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை. அதே சமயம் இதேபோல் கூடைப்பந்தாட்டத்தில் முன்னேற வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.

Akilan Pari

தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட அணியில் கிடைத்த முதல் வாய்ப்பு உங்களுக்கு எப்படி இருந்தது?

பொள்ளாச்சி என்ற சிறிய டவுனில் எனது விளையாட்டை தொடங்கினேன். அதன்பிறகு 2 வருடங்கள் கழித்து கோயம்புத்தூருக்கு வந்தோம். அப்போது ஒய்.எம்.சி. என்ற க்ளப் இருந்தது. அதில் சேர்ந்து எனது விளையாட்டை மேம்படுத்தினேன். அங்கிருந்து தமிழ்நாடு அணிக்கு தேர்வாகும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதன்பிறகு தமிழ்நாடு அண்டர் 13, அண்டர் 16, அண்டர் 18 ஆகிய 3 அணிகளிலும் தலா 2 வருடங்கள் விளையாடி இருக்கிறேன். 10 வருடங்கள் தமிழ்நாடு அணியில் விளையாடி கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

இந்திய கூடைப்பந்து அணியில் உங்கள முதல் போட்டி எப்படி அமைந்தது?

2014-ல் தான் இந்திய அணிக்கு முதன் முதலாக தேர்வு செய்யப்பட்டேன். அப்போது ஸ்குவாட் ப்ளமிங் என்பவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். 2014-ல் சீனியர் நேஷ்னல் சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, தமிழக அணி 11 வருடங்கள் கழித்து, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றபோது அந்த அணியின் நான் சிறப்பாக விளையாடினேன். அப்போது மேல் வாங்கிக்கொண்டு வெளியில் வரும்போது பயிற்சியாளர் என்னை பாராட்டிவிட்டு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

Akilan Pari

அவர் சொன்னபடியே இந்தியன் கேம்பில் தேர்வாகி நன்றாக விளையாடினேன். 2014- ஏப்ரல் மாதத்தில் இந்திய அணியில் தேர்வானேன். அப்போது சவுத் ஆசியன் பேஸ்கெட் பால் சாம்பியன்ஷிப் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. அந்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா வெற்றி பெற்றது. அங்கிருந்து தொடர்ந்து 6 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடினேன். இதில் 2017-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாகவும் பணியாற்றி இருக்கிறேன்.

2018-ல் உங்கள் நிச்சயதார்த்தம் நடந்தபோது லெபனான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இந்த தருணம் எப்படி இருந்தது?

இந்த நிலை ரொம்ப கடினமாகத்தான் இருந்தது. நிச்சயதார்த்தம் 2 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டார்கள். ஆனால், போட்டி அதன்பிறகுதான் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அந்த நாளை விட்டால் வேறு நல்ல நாள் இல்லை என்பதால் அதே நாளில் நிச்சயதார்த்தம் நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு அணி மற்றும் பயிற்சியாளருடன் பேசினேன். அவர்கள் இந்த ஒரு போட்டிதான் நீ ஃபீல பண்ணாத, உனக்கு ஒரு சந்தோஷமாக விஷயம் நடக்க இருக்கிறது. அதை தள்ளிப்போட வேண்டாம். இதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள்.

இதன் காரணமாக ஒரு போட்டியில் மட்டும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது எனக்கு கொஞ்சம் ஃபீல் ஆச்சு இந்தியாவில் நடக்கும் போட்டியில் இந்திய அணிக்கு உதவ முடியவில்லை என்று வருத்தப்பட்டேன்.

Akilan Pari

இப்போவும் கிரிக்கெட் போட்டிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எந்த போட்டிக்கும் கொடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறதா?

கண்டிப்பான இருக்கிறது. இது ஒரு சைக்கிள் மாதிரி. மற்ற விளையாட்டு போட்டிகளும் இப்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. கூடிய விரைவில் கூடைப்பந்தாட்டமும் முன்னேற்றத்திற்கு வரும். இப்போ கபடி எடுத்துக்கொண்டால் கிராமத்தில் அதிகம் விளைாடும் விளையாட்டு போட்டியாக இருந்தது. அதை இப்போது ஸ்டார் ஸ்போர்ட்சும் கபடி பெட்ரேஷனும் இணைந்து புரோ கபடி என்று தொடங்கி 12 வருடங்களாக நடத்தி வருகிறார்கள். இப்போது இந்த போட்டி பெரிய ஹிட்டாகிவிட்டது.

இதன் மூலம் ஒவ்வொரு கபடி வீரருமே, ஒரு சீசனுக்கு 60-80 லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு விளையாட்டை பெட்ரேஷனும் மீடியா ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து கவர் செய்தால் எப்படி முன்னேற்றம் அடையும் என்பதற்கு கபடி ஒரு பெரிய உதாரணம். இதன் மூலம் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் முன்னேற்றம் அடைந்து வருமானம் ஈட்டுகிறார்கள். அதேமாதிரி கார்ப்ரேட் ஸ்பான்சர்ஷிப் கொடுத்து, கூடைப்பந்தாட்ட போட்டியை பெரிய சேனலில் ஒளிபரப்பு செய்தால், பெரிய அளவில் வரவேற்பை பெறும். அப்போது தான் வீரர்களும் விளையாட வருவார்கள்.

Akilan Pari

விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் அப்பாய்மெண்ட் கிடைக்கும் என்பது சாத்தியமில்லை. அதனால் இந்த மாதிரி ஒரு லீக் வந்தது என்றால், வீரர்கள் விளையாடி வருமானம் பெறுவார்கள். இதன் மூலம் புதிய வீரர்கள் உள்ளே வருவார்கள். தமிழ்நாடு மற்றும் இந்திய அணிக்காக விளையாடிய ஒரு வீரர் அதன்பிறகு என்ன செய்வது என்று யோசிக்க வேண்டிய நிலை வரும். அப்போது இதுபோன்ற ஒரு லீக் இருந்தால், அவர்கள் வருமானத்திற்கு தடை இருக்காது. அதே சமயம் மக்களின் கவனத்தை ஈர்த்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இந்திய அணியில் நீங்கள் விளையாடியபோது மறக்க முடியாத நிகழ்வுகள் இருக்கிறதா?

மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய இருக்கிறது. இந்தியன் டீமில் இடம்பெறுவதே பலரின் கனவாக இருக்கிறது. கடவுளின் அருளால் 6 வருடங்கள் நான் இந்திய அணியில் விளையாடினேன். 25 வயதில் தான் இந்திய அணியில் அறிமுகமானேன். 6 வருடங்கள் விளையாடிவிட்டு, 31-32 வயதில் பெரிய ஸ்கோப் இல்லை. அதன்பிறகு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வெளியேறிவிட்டேன். இந்த 6 வருடத்தில் ஒரு வருடம் இந்திய அணியின் கேப்டனாக இருந்தேன். நான் விளையாடியபோது 2 முறை சீனா அணியை வீழ்த்தியது தான் மறக்க முடியாத அனுபவம்.

Akilan Pari

கூடைப்பந்தாட்டத்தில் 1950 அல்லது 60 களில் ஒருமுறை இந்திய அணி சீனாவை வீழ்த்தியுள்ளது. அதன்பிறகு 2014-ல் ஆசியகோப்பை கூடைப்பந்தாட்டத்தில், முதல்முறையாக சீனாவை வீழ்த்தியது இந்தியா. அந்த அணியில் நான் ஒரு வீரராக இருந்தேன். இதில் 10-12 நிமிடங்கள் நான் விளையாடினேன். அணி வெற்றி பெற உதவி செய்தேன் என்பது பெரிய மகிழ்ச்சி. அடுத்து 2016-ல் ஈரானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் சீனாவை இந்திய அணி வீழ்த்தியது. இதில் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் விளையாடினேன். இந்த இரு தருணங்களுமே எனக்கு மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Sports Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment