உலக கிரிக்கெட் போட்டியில் மன்கட் என்ற விக்கெட் முறையை அறிமுகப்படுத்திய இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் வினு மன்கட் பிறந்த தினம் இன்று. 1917-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி தற்போதைய குஜராத்தின் ஜாம் நகரில் பிறந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரர், இடது கை சுழற்பந்துவிச்சாளர் என ஆல்ரவுண்டராக திகழ்ந்த வினு மன்கட் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக போற்றப்படுகிறார்.
1946 இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
1946-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் அறிமுக வீரராக களமிறங்கியவர் வினு மன்கட். இப்திகார் அலிகான் பட்டோடி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 1946- ஜூன் 22-ந் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வினு மன்கட், முதல் இன்னிங்சில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், 2-வது இன்னிங்சில் 85 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 63 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் வினு மன்கட். இந்த போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தாலும், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான லாலா அமர்நாத் மற்றும் விஜய் ஹசாரே ஆகியோருடன் ஒப்பிட்டு வினு மன்கட் சிறந்த ஆல்ரவுண்டர் என்று விஸ்டன் இதழ் பதிவு செய்திருந்தது.
2-வது போட்டியில் 0, 1 ரன்னில் வீழ்ந்த வினு மன்கட் 3-வது போட்டியில் 42 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 331 ரன்கள் குவித்தது. அதேபோல் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வினு மன்கட் 3-வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 42 ரன்கள் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் ஒரு அரைசதத்துடன் 124 ரன்கள், பந்துவீச்சில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய வினு மன்கட் உலகின் தலைசிறந்த 5 இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் என்று போற்றப்பட்டார். மேலும் அந்த ஆண்டில் விஸ்டன் இதழ் வெளியிட்ட டாப் 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
1947-48 இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வினு மன்கட் பேட்டிங்கில் 57 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன் இதுதான். அடுத்து நடந்த தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் டான் பிராட்மேன் விக்கெட் உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பந்துவீச்சிலும் 57 ரன்கள் எடுத்தார்.
டெஸ்ட் போட்டியில் முதல் சதம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய வினு மன்கட், பேட்டிங்கில் டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய வினு மன்கட் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 187 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரியுடன் 116 ரன்கள் எடுத்திருந்தார். பந்துவீச்சிலும் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தனார்.
தொடர்ந்து நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டும் சதம் அடித்த வினு மன்கட், முதல் இன்னிங்சில் 111 ரன்கள் குவித்தார். 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அதிகபட்சமாக 116 ரன்களுடன் 306 ரன்கள் குவித்த வினு மன்கட், பந்துவீச்சில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தொடர்ந்து 1952-ல் இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வினு மன்கட் தனது ஆல்ரவுண்டர் திறனை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
1952 லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 72 ரன்கள் குவித்த மன்கட் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 2-வது இன்னிங்சில் சதம் அடித்து 184 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து எளிதான வெற்றி பெற்றது என்றாலும் கூட மன்கட்டின் ஆல்ரவுண்டர் திறன் பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாதனை நீடித்த நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சாதனை படைத்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் அல்லாத வீரர்கள் 3 பேரில் இவரும் ஒருவராக இடம்பெற்றுள்ளார். மற்ற இருவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கீத் மில்லர், வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த சர் கேரி சோபர்ஸ் ஆவர்.
தொடர்ந்து 1952-ல் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய வினு மன்கட், பேட்டிங்கில் 22 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்கள் வீழ்த்திய நிலையில், இந்திய அணி இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சந்தித்த முதல் வெற்றியாகும்.
மன்கட் விக்கெட் நடந்தது எப்படி?
1947-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில், 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 25 ரன்களை எட்டியபோது, பந்துவீச வந்த வினு மன்கட், தொடக்க வீரர் ஆர்த்தூர் மோரீஸ்க்கு பந்துவீச ஓடிவந்தார். அப்போது ரன்னர் அப் பகுதியில் நின்ற பில் பிரவுன் கிரீஸ்க்கு வெளியில் சென்றதை பார்த்த மன்கட் பந்தை வீசாமல் ஸ்டெம்பில் அடித்தார். இதற்கு அவர் அவுட் கேட்க அம்பையரும் அவுட் கொடுத்தவிட்டார். இதனால் பில் பிரவுன் 18 ரன்களில் வெளியேறினார். இந்த அவுட்க்கு பெரும் சர்ச்சை வெடித்தது.
அதேபோல் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான முதல் தர போட்டியிலும் பில் பிரவுனை மன்கட் இதே முறையில் அவுட் செய்துள்ளார். இது கிரிக்கெட் போட்டியின் ஆன்மாவுக்கு எதிரானது என்று பலரும் விமர்சித்திருந்த நிலையில், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான டான் பிராட்மேன் வினு மன்கட்டின் செயலுக்கு தனது ஆதரவை தெரிவித்து தனது சுயசரிதை புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
வினு மன்கட் சாதனைகள்
இந்திய அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வினு மன்கட், 2109 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 231 ரன்கள் குவித்துள்ளார். 5 சதம் மற்றும் 6 அரைசதம் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 162 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 8 முறை 5 விக்கெட்டுகளும், 2 முறை பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள நிலையில், 33 கேட்சுகளை பிடித்துள்ளார். 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தியே அவரின் சிறந்த பந்துவீச்சாகும்.
1956-ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய வினு மன்கட் இரட்டை சதம் அடித்து 231 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் சஞ்சய் ராயுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்ததே இன்றுவரை டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இந்த போட்டியில் பங்கச் ராய் 173 ரன்கள் குவித்தார். 52 ஆண்டுகளுக்கு பிறகு 2008-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்க அணியின் ஸ்மித் – மெக்கன்ஸி ஜோடி இந்த சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தது.
டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக பந்துகள் வீசிய வீரர்கள் பட்டியலில் மன்கட் 8-வது இடத்தை பிடித்துள்ளார். 1953-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் 82 ஓவர்கள் (492) வீசிய மன்கட் 228 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஒரு டெஸ்ட் தொடரில் அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 1955-56 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 இரட்டை சதங்கள் அடித்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 3 இரட்டை சதங்கள் அடித்த டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார்.
வினு மன்கட் பெயரில் கிரிக்கெட் தொடர்
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டி வினு மன்கட் டிராபி நடத்தப்பட்டு வருகிறது. 1973-ம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. மும்பை வான்கடே மைதானத்திற்கு தெற்கில் வினு மன்கட் பெயரில் சாலை அமைக்கப்பட்டுள்ளது, குஜராத்தின் ஜாம்நகரில் வினு மன்கட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஐசிசியின் ஹால் ஆஃப் கிரிக்கெட் ஃபேமில் வினு மன்கட் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.