அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததுடன் 187 ரன்கள் எடுத்து சாதனை படைத்த ஷிகர் தவான் தனது 100-வது ஒருநாள் போட்டியில் சதமடித்த இந்தியர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார். உள்ளூர் கிரிக்கெட், ரஞ்சிக்கோப்பை, மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் பல சாதனைகளை படைத்து ரன் மிஷினாக திகழ்ந்துள்ள ஷிகர் தவான் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரராக இருக்கிறார்.
பிறப்பும் - கிரிக்கெட் ஆர்வமும்
1985-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி டெல்லியில், மகேந்திர பால் தவான் – சுனைனா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் ஷிகர் தவான். டெல்லி ஜெயிண்ட் மார்கஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த தவான், தனது 12 வயது முதல் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். அப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் தாரக் சின்ஹா வழிகாட்டுதலின் படி செனட் க்ளப்பில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார் ஷிகர் தவான். இந்த க்ளப்பில் தவான் முதலில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தான் பயிற்சி பெற்றுள்ளார்.
1999-2000 காலக்கட்டத்தில் விஜய் மெர்ச்சன்ட் டிராபி கிரிக்கெட் தொடரில் டெல்லியின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்ற ஷிகர் தவான், 2000-01 தொடரில் விஜய் மெர்ச்சன்ட் டிராபி தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 755 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். இதில் 2 சதங்கள் அடித்த தவான் அதிகபட்சமாக 199 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் இந்திய ஜூனியர் அணியில் தவானுக்கு வாய்ப்பு கிடைத்தது.
2000-01 ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியகோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற தவான், 3 ஆட்டங்களில் விளையாடி சராசரியாக 85 ரன்கள் குவித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதேபோல் 2001-02 தொடரில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 282 ரன்கள் குவித்து மீண்டும் தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கூச் பெஹார் டிராபிக்கான தொடரில் 19 வயதுக்குட்பட்ட டெல்லி அணியில் இடம் பெற்றிருந்தார்.
இந்த தொடரிலும் தனது பேட்டிங்கில் தனித்திறமையை வெளிப்படுத்திய தவான், 8 இன்னிங்ஸ்களில் 388 ரன்கள் குவித்தார். அதேபோல் 2003-ம் ஆண்டு கூச் பெஹார் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 444 ரன்கள் குவித்த தவான், அதே ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற எம்.ஏ. சிதம்பரம் டிராபியில், கேப்டனாக தனது முதல் போட்டியில் களமிறங்கி தனது பேட்டிங் சராசரியை 66.66 ஆக வைத்திருந்தார்
உள்நாட்டு கிரிக்கெட் தொடர் – இந்திய ஜூனியர் அணியில் இடம்
2004-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கிய தவான் 3 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன், 505 ரன்கள் குவித்து அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துடன் தொடர்நாயகன் விருதையும் வென்றிருந்தார். இதன் மூலம் அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய ஜூனியர் அணியில் இடம் பெற்று 3 இன்னிங்ஸ்களில் 138 ரன்கள் குவித்திருந்தார்.
2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கிய தவான், 2004-05 ரஞ்சி டிராபியில்,6 போட்டிகளில் விளையாடி 461 ரன்கள் குவித்தார். இதில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 131 ரன்கள் குவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சேலஞ்சர் கோப்பை தொடரில் இந்திய சீனியர் அணியில் இடம்பெற்ற தவான், இந்தியா பி அணிக்கு எதிரான தொடரில் எம்.எஸ்.தோனியுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கி ரன்களை குவித்தார்.
இந்த தொடரின் 2-வது போட்டியில் எம்.எஸ் தோனியுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு, 246 ரன்கள் சேர்த்த தவான், 124 பந்துகளில் 126 ரன்கள் குவித்து அசத்தினார். அடுத்த ஆண்டு பாகிஸ்தான் சென்ற இந்திய ஏ அணியில் இடம்பெற்ற தவான், 8 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு 2005-06 சேலஞ்சர் கோப்பை தொடரில் இந்திய பி அணிக்காக விளையாடி ரன்கள் குவிக்க தவறிய தவான், துலிப் டிராபி தொடரில் ஜிம்பாப்வே கிரிக்கெட் யூனியன் அணிக்கு எதிராக 117 ரன்கள் குவித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார்.
2007-ம் ஆண்டு ரஞ்சிக்கோப்பை ஒருநாள் தொடரில், டெல்லி அணியில், சேவாக், கம்பீர், நெஹ்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இருந்தும் அந்த தொடரில் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரில் மொத்தமாக 161 ரன்கள் மட்டுமே குவித்த தவான், பேட்டிங்கில் ஜொலிக்காத நிலையில், டெல்லி அணி காலிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வீழ்ச்சியை சந்தித்தது. அடுத்து 2008-ம் ஆண்டு ரஞ்சி சீசனை டெல்லி வென்ற நிலையில், இந்த தொடரில் தவான் 570 ரன்கள் குவித்து அசத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம்
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த தவான், 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த தொடரில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய தவான் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தவானுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
இதில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் அரைசதம் கடந்து 51 ரன்கள் எடுத்த தவான் 2-வது போட்டியில் 3 3-வது போட்டியில் 4 மற்றும் 5-வது போட்டியில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடரில் நடந்த ஒரே ஒரு டி20 போட்டியின் மூலம் டி20 போட்டியில் அறிமுகமான தவான் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு மீண்டும் உள்ளூர் போட்டிக்கு திரும்பிய தவான் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர்
2013-ம் ஆண்டு மார்ச் மாதம் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தவான், தொடக்க வீரரான களமிறங்கிய 174 பந்துகளில் 33 பவுண்டரி 2 சிக்சருடன் 187 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் 85 பந்துகளில் சதமடித்த தவான் அறிமுக போட்டியில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இன்னிங்சில் டக்அவுட் ஆன தவான் 2-வது இன்னிங்சில், சதமடித்து 115 ரன்கள் விளாசினார்.
அதன்பிறகு தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறாத தவான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முக்கிய வீரராக திகழ்ந்தார், 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில், ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய தவான் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 94 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த சாம்பியன் டிராபியை இந்தியா கைப்பற்றிய நிலையில், 5 இன்னிங்ஸ்களில் தவான் 363 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
2015 உலககோப்பை கிரிக்கெட்
2015 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய வீரராக இடம் பெற்ற ஷிகர் தவான், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 73 ரன்கள் எடுத்த நிலையில், தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தில், 137 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார். இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுடன் வெளியேறினாலும், தவான் 412 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்திருந்தார்,
தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தி வந்த தவான், 2018-ம் ஆண்டு, தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது 100-வது போட்டியில் களமிறங்கி சதமடித்து அசத்தினார். இதன் மூலம் 100-வது போட்டியில் சதமடித்த முதல் இந்தியயர் என்ற பெருமை பெற்ற தவான், உலகளவில் 9-வது இடத்தை பெற்றார். 140 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை கடந்த தவான், 5000 ரன்கள் குவித்து 50 விக்கெட்டுகளுக்கு காரணமாக இருந்த வீரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் 4 கேட்சுகளை பிடித்த தவான், ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் என்டரி
2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ், டெக்கான் சார்ஜஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளில் விளையாடியுள்ளார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள தவான், இதுவரை ஒட்டுமொத்தமாக 329 டி20 போட்டிகளில் விளையாடி 9645 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதம், 69 அரைசதம் கடந்துள்ளார்.
தவான் கிரிக்கெட் புள்ளிவிபரங்கள்
இந்திய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தவான், 7 சதம், 5 அரைசதத்துடன் 2315 ரன்கள் குவித்துள்ளார். 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 17 சதம் 39 அரைசதத்துடன் 6793 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 143 ரன்கள் குவித்துள்ள தவான், 83 கேட்ச் பிடித்துள்ளார். 68 டி20 போட்டிகளில் 11 அரைசதத்துடன் 1759 ரன்கள் குவித்துள்ளார். 19 கேட்ச் பிடித்து விக்கெட் வீழச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்.
கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற தவான் கடந்த 5 வருடங்களாக டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். 2021-ம் ஆண்டுக்கு பின் இந்திய டி20 அணியிலும் தவான் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.