நோஸ்டால்ஜியா கிரிக்கெட் இதுவல்ல! ரசிகர்களின் கிரிக்கெட் விஸ்வாசம் ஏமாற்றப்படுகிறதா?

ஆஸ்திரேலிய சீரிஸ் ஒரு பந்தில் கூட இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கிறது. இதுபோன்ற பல நுணுக்கமான விஷயங்களை நோக்கி நாம் இப்போதே தயாராக வேண்டும்.

ANBARASAN GNANAMANI

மளிகைக் கடையில் வேலைப்பார்த்து வந்த அந்த சிறுவன், தனது முதலாளியின் முகத்தை நிமிடத்திற்கு பத்து முறையாவது பார்த்திருப்பான்.. ‘நீ கிளம்பு’ என்று அவர் வாயில் இருந்து எப்போது அந்த வார்த்தை வரும் என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.

மணி 11 ஆனது… 12 ஆனது… நேரம் செல்ல செல்ல அவனது கைகள் பொட்டலம் கட்டுவதில் சிரமப்பட்டன. ஒருவழியாக, 12.20 மணிக்கு முதலாளியிடம் இருந்து அந்த வார்த்தை வந்தது.

‘டேய் குமரா… என்ன கை தடுமாறுது? பொறுக்க முடியலையா? சரி..சரி.. மூட்டையில் இருந்து வெள்ளத்தை வெளியே எடுத்துவச்சிட்டு கிளம்பு. நானும் அரை மணி நேரத்துல கடைய சாத்திட்டு வந்துடுறேன்’ என்று சொல்ல உற்சாகம் பொங்க துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்தான் குமரன்.

அவன் சைக்கிளை எடுக்கும் முன், ‘டேய்.. மேச்சு எத்தனை மணிக்கு-ன்னு சொன்ன?’ என்று கேட்க, ‘1.30 மணிக்குன்னே’ என்று சொல்லிக் கொண்டே காற்றாய் மாயமானான் அவன்.

இவ்வளவு கான்வர்சேஷனும், ஒரு சாதாரண நாளில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் மேட்சை பார்க்கவே.

கிரிக்கெட் அந்தளவிற்கு கடைநிலை ரசிகனிடமும் விதிக்கப்பட்டிருக்கும் ஒரு போதை.

ஆனால், கிரிக்கெட்டிற்கு இவ்வளவு விசுவாசமாக இருக்கும் ரசிகர்களுக்கு, கிரிக்கெட் விசுவாசமாக நடந்து கொள்கிறதா? கிரிக்கெட் வாரியங்கள் விசுவாசமாக நடந்து கொள்கிறதா?

இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று, நீண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை எதிர்த்து விளையாட வேண்டும் என்றால், அது எவ்வளவு கடினமானது என்பதற்கு ஆண்டாண்டு காலமாக நாம் அங்கே உதைவாங்கிக் கொண்டிருப்பதே சாட்சி.

இந்த நிலையில், இந்திய அணி இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியோடு விளையாடி வருகிறது. முதலில் ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிப் பெற்ற இந்தியா, ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த இரு டெஸ்ட் போட்டியிலும், உமேஷ் யாதவ் தவிர்த்து முழுக்க முழுக்க பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது ஸ்பின்னர்கள் மட்டுமே. இரு டெஸ்ட் போட்டியிலும் ஸ்பின்னர்கள் சேர்ந்து 26 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

அடுத்த நடக்கப் போகும் ஆஸ்திரேலிய தொடருக்கு இந்த சாதனை வெற்றிகள் துணை புரியும் என நினைக்கிறீர்களா?

‘பவுன்ஸ்’ ஆடுகளங்கள் தான் ஆஸ்திரேலியா முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. அங்கே இந்த ஸ்பின் பவுலிங்கை வைத்துக் கொண்டு விக்கெட்டுகளை அள்ள முடியும் என எண்ணுகிறீர்களா? இதனால் தான், கிரிக்கெட் வாரியம் ரசிகனுக்கு உண்மையாக இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது!.

வெஸ்ட் இண்டீஸ் அணியை குறை சொல்வது நமது நோக்கமில்லை. ஆனால், அடுத்த மாதம் மிகப் பெரிய சோதனையை முன்வைத்துக் கொண்டு, பேட்டிங் பிட்சுகள் அமைத்து, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அடித்து துவம்சம் செய்து, ‘வாவ் விராட்’, ‘ஹிட்மேன் அபாரம்’ , ‘இந்தியா சாதனை வெற்றி’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதால் யாருக்கு என்ன லாபம்?.

நமது வீரர்களின் ஆட்டத் திறன் குறித்து எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர்களது சதங்களுக்கும், அணியின் வெற்றிக்கான உழைப்பும் என்றுமே போற்றப்படக் கூடியது தான்.

ஆனால், பேட்டிங் பிட்சை அமைத்து சென்ச்சுரியாக அடித்து தள்ளுவதால் யாருக்கு என்ன லாபம்?

இந்த ஆட்டத்திறன் வெளிநாட்டு தொடர்களில் எடுபட மாட்டேங்குதே. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் தோற்றுவிட்டு, இலங்கையையோ, வெஸ்ட் இண்டீசையோ இந்தியாவிற்கு அழைத்து அடித்து நொறுக்கி, ‘அபாரம்’ என்று கூச்சலிடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

ஒருநாள், டி20 மட்டுமே கிரிக்கெட். அதில் வெற்றிப் பெற்றால் போதும் என இந்தியா மட்டுமல்ல.. எந்த அணி நினைத்தாலும், அது இரண்டு அழிவுகளை முன்னெடுக்கும். ஒன்று அந்த அணிக்கு.. இன்னொன்று கிரிக்கெட்டுக்கு.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இதுவரை இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. அப்படிப்பட்ட கடினமான ஆஸ்திரேலிய பிட்சுகளில் இம்முறை சமாளிக்க, இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் துளி கூட உதவப் போவதில்லை.

முக்கால்வாசி இந்திய வீரர்களின் தகவமைத்துக் கொள்ளும் பண்பு சராசரிக்கும் கீழ் உள்ளது. வெளிநாடுகளின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது பேட்டிங் அல்லது பவுலிங் தன்மையை அவர்களால் மாற்றிக் கொள்ளவே முடியாது. இதனால் தான், சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஷ்மண் என ஜாம்பவான்கள் இருந்த காலத்தில் கூட ஆஸ்திரேலியாவில் நம்மால் டெஸ்ட் கோப்பைகளை வெல்ல முடியவில்லை.

ஆஸ்திரேலியாவில் ‘கூக்கபுரா’ பந்தில் தான் கிரிக்கெட் விளையாடப்படும். நாம் பயன்படுத்துவதோ எஸ்ஜி பந்துகள்.

கூக்குபுரா stitching ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கும்.

இந்த கூக்கபுரா பந்து, முதல் 20 ஓவர் வரை, swing மற்றும் seam பவுலிங்கிற்கு ஒத்துழைக்கும். அதன்பிறகு, இந்த பந்து ஸ்பின்னர்களுக்கு நல்ல க்ரிப் (Grip) கொடுக்கும். அதேசமயம், பேட்ஸ்மேனுக்கும் வாகாக வந்து ஒத்துழைப்பு கொடுக்கும். டெஸ்ட் மேட்சுல, 80 ஓவர் வரை ஒரு கூக்கபுரா பால் நன்றாக தாக்குப்பிடிக்கும்.

கூக்கபுரா பந்துகளை அதிகம் எதிர்கொள்ள வைத்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இப்போது பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக கூக்கபுராவில் பவுன்ஸ் பந்துகளை எதிர்கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சி எடுக்க வேண்டும்.

இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பதிலாக அப்படியொரு பயிற்சி முகாமை இந்திய நிர்வாகம் நடத்தினால், அது நமது அணிக்கு பயன் தரும். சும்மா, ஜேசன் ஹோல்டர் பந்தை வளைச்சு நின்னு சிக்ஸ் அடிப்பதால் ஒரு யூஸும் இல்லை.

ஆஸ்திரேலிய சீரிஸ் ஒரு பந்தில் கூட இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கிறது. இதுபோன்ற பல நுணுக்கமான விஷயங்களை நோக்கி நாம் இப்போதே தயாராக வேண்டும்.

இப்படி எந்த பயிற்சியும் இல்லாமல், கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவை அனுப்பி, அங்கே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை மிக பிரம்மாண்டமாக ஆஸ்திரேலியா வீழ்த்தி, கோலியின் கேப்டன்ஷிப்பை மீடியாக்கள் கேள்விக்குறியாக்கி, இதர வீரர்களை ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் கிழி கிழித்து, பிறகு மீண்டும் இந்தியாவுக்கு ஒரு அணியை அழைத்து, அந்த அணியை வச்சு செய்து, ‘வாவ் இந்தியா’ என்று அதே ரசிகர்களை பாராட்ட வைத்து கிரிக்கெட்டை ஓட்டுவது தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்களை இன்னமும் முட்டாளாகவே வைத்திருக்க கிரிக்கெட் நிர்வாகங்கள் நினைத்தால், அது கிரிக்கெட்டுக்கு தான் அழிவே தவிர, ரசிகனுக்கு அல்ல!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close