கடந்த வாரம் ஞாயிறன்று நடந்த இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான நிடாஹஸ் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டி, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் பிளட் பிரஷரை ஏற்றி இறக்கியது. இதே போன்றதொரு போட்டியை, இதே வங்கதேச அணிக்கு எதிராக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி எதிர்கொண்டது. அதுவும் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில்... ஆங்! நியாபகம் வந்துட்டா!! நம்ம தல தோனி கடைசி பந்தில் பாய்ந்து வந்து ரன் அவுட் செய்வாரே... அதே தான்.
2016ல் அந்த மேட்ச் நடந்து இன்றுடன் (மார்ச்.23) இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. ஹர்திக் பாண்ட்யாவின் இறுதி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த முஷ்பிகுர் ரஹீம் வெற்றிபெற்று விட்டது போல் கொண்டாட, அடுத்த பந்தில் தவானிடம் தூக்கி கேட்ச் கொடுத்து விரக்தியோடு செல்வார். அடுத்த பந்தே, மஹ்மதுல்லா ஆக்ரோஷமாக தூக்கி அடித்து ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து தலையை தொங்கப் போட்டு செல்ல, இறுதி பந்தில், தோனி ரன் அவுட் செய்ய, இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெறும்.
இந்த மேட்ச்சில் தோனி எனும் இந்திய விக்கெட் கீப்பரால் மோசம் போன வங்கதேசம், கடந்த வாரம் தினேஷ் கார்த்திக் எனும் விக்கெட் கீப்பரால் சின்னாபின்னமானது.
அந்த கடைசி ஓவர் 'மொமன்ட்ஸ்' இந்த வீடியோவில்,
அதேசமயம், இன்னொரு சோகமான செய்தியையும் சொல்கிறேன் கேளுங்கள். குறிப்பாக, 90's கிட்ஸ் கண்ணீரில் ரத்தத்தை வரவழைக்கும் சம்பவம் இது.
2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தான் அது. 15 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இந்திய பவுலர்கள் எல்லோரையும் துவம்சம் செய்த ரிக்கி பாண்டிங் 121 பந்தில் 140 ரன்கள் விளாசினார். அப்போ அதெல்லாம் பெரிய அடி!.
இதுல ஒரு தொழில் ரகசியம் என்னனா, இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள், நம்ம ஹர்பஜன் சிங், 'மேஜிக் பால் வீசி ஆஸ்திரேலியாவை வீழ்த்துவேன்' என்றார். ஆனால், கடைசி வரை அந்த மேஜிக் பந்தை நம்மால் பார்க்கவே முடியவில்லை. அதான் வேதனை!.