அன்பரசன் ஞானமணி
இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு 2017ல் திருப்திகரமாகவே இருந்தது என சொல்லலாம். பல தொடர்களில் விளையாடியுள்ள இந்தியா, இந்தாண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரேயொரு டி20 தொடரை மட்டும் இழந்துள்ளது. என்னதான் நம்ம பிளேயர்கள் அதிகமாக சம்பாதித்தாலும், ஒவ்வொரு முறையும் நம்மை ஏமாற்றாமல் வெற்றியைத் தேடித் தந்து விருந்து படைக்கின்றனர். அதிலும், இந்த டிசம்பர் மாதம் இந்திய ரசிகர்களுக்கு 'மெர்சல்' ட்ரீட் தான். ஒருநாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் மூன்றாவது இரட்டை சதம், டி20 போட்டியில் 35 பந்துகளில் சதம் என இம்மாதம் ரசிகர்களை பரவசப்படுத்திவிட்டார் மனுஷன்!.
என்னதான் வெற்றி...வெற்றி... என நாம் முழங்கினாலும், ஜீரணிக்கவே முடியாத அளவு சில தோல்விகளையும் இந்திய அணி சந்தித்துள்ளது. தீவிர கிரிக்கெட் வெறியர்கள், போர்வையை இழுத்துப் போர்த்தி அழும் அளவிற்கு, இந்திய அணி தோல்விகளை சந்தித்துள்ளது. 'இந்த மேட்ச்லாம் இந்தியா எப்போ ஆடினுச்சு?' , 'இந்தியா இப்படிலாம் இந்த வருஷம் தோத்துச்சா?-னு' பலருக்கும் நினைவே இல்லாத போட்டிகள் என்னென்ன என்று இங்கே பார்ப்போம்.
5) ஓரளவிற்கு மனதை தேற்றிக் கொள்ளும் தோல்வி:
இந்தாண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், ஜூன் 8ம் தேதி இந்தியாவும், இலங்கையும் ஓவல் மைதானத்தில் சந்தித்தன. 'பாகுபலி' பலம் கொண்ட இந்திய அணி, எதிர்பார்ப்பே இல்லாத இலங்கை அணியுடன் மோதியதால், பெரிய ரெஸ்பான்ஸ் இப்போட்டிக்கு இல்லை. எதிர்பார்த்தது போலவே, முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி, 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது.
எப்படியும் இலங்கை தோற்றுவிடும் என்பதே பெரும்பாலோனரின் கருத்து... இல்லை இல்லை.. அனைவரின் கணிப்பாக இருந்தது. ஆனால், 48.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 322 ரன்கள் எடுத்து இலங்கை வென்றது.
எல்லோருக்கும் ஷாக் தான்!. இருந்தாலும் லூஸ்-ல விடு... லூஸ்-ல விடு... என்று ரசிகர்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
4) நண்பனிடம் வாங்கிய அடி:
இந்தாண்டு ஜூன் - ஜூலையில், கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றி இருந்தாலும், ஜூலை 2ம் தேதி ஆண்டிகுவாவில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியை இப்போது ரீவைண்ட் செய்து பார்த்தாலும், இந்தியா எப்படி இப்படி தோற்றது? என்று யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவின் அபார பந்துவீச்சால் 50 ஓவர்களில் 189 ரன்கள் மட்டும் எடுத்தது. இதையடுத்து, இந்திய ரசிகர்கள் பலரும், டிவியை ஆஃப் செய்துவிட்டே போயிருப்பார்கள். ஆனால், நம்மை விட சிறப்பாக பவுலிங் செய்த வெ.இ., பவுலர்கள், இந்தியாவை 178 ரன்களில் ஆல் அவுட் செய்துவிட்டனர். இங்கே ஒரு கூடுதல் தகவல்... இப்போட்டியில் ரஹானே 60 ரன்கள், தோனி 54 ரன்கள் என இரு அரைசதம் அடிக்கப்பட்டும் இந்திய அணி தோற்றது. அப்படினா, மற்ற பேட்ஸ்மேன்கள் எவ்ளோ ரன் அடிச்சு இருப்பாங்க-னு நீங்களே கணக்கு பண்ணிக்கோங்க!.
என்னதான் இப்போட்டியில் இந்தியா தோற்றாலும், அடுத்த நிமிஷமே இரு அணி வீரர்களும் கைக்கோர்த்து, தோள் சேர்த்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்ததால், ஒரு நண்பனிடம் பெற்ற தோல்வியாக இது எடுத்துக் கொள்ளப்பட்டது. (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு!)
3) 'யாருய்யா இவன்? எனக்கே இவன பார்க்கணும் போல இருக்கே!"
அக்டோபர் 10. இடம் குவஹாத்தி. எதிரணி ஆஸ்திரேலியா. 2வது டி20 போட்டி. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்த போது, இந்திய ரசிகர்கள் பலருக்கும் 'சென்னை 28' படத்தின் 'கடற்கரை கிரிக்கெட் மேட்ச்' தான் நினைவுக்கு வந்தது. இந்தியா பேட்டிங்காம்...........னு நண்பர்களுக்கு வாட்ஸ்அப் பண்ணுவதற்குள் முதல் விக்கெட்..... அந்த மெசேஜ் ரீசிவ் ஆவதற்குள் அடுத்த விக்கெட்.... டபுள் கிரீன் டிக் காட்டுவதற்குள் 3-வது விக்கெட், நண்பன் ரிப்ளை பண்ணுவதற்குள் 4வது விக்கெட் என இந்திய அணி 27 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஸ்தம்பித்தது.
Jason Behrendorff என்ற அறிமுக ஆஸ்திரேலிய ஃபேஸ் பவுலரின் பந்துவீச்சில், கோலி உட்பட இந்தியாவின் டாப் 4 விக்கெட்டும் காலி. இந்தியாவால் 20 ஓவரில் 118 ரன்களே எடுக்க முடிந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா, கேஷுவலாக போட்டியை வெல்ல, ரசிகர்கள் சற்றே ஷாக் ஆகித் தான் போனார்கள். யாருப்பா இந்த Jason Behrendorff என்ற தேடல் அன்றைய கூகுள் தேடலில் முதலிடம் கூட பிடித்து இருக்கலாம்.
2) "என்னப்பா... பொசுக்குனு தோத்துட்டீங்க!?"
ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி, இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி புனேவில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலத்த அடி வாங்கியது. ஆஸி., முதல் இன்னிங்ஸில் 260 ரன்னும், இரண்டாம் இன்னிங்ஸில் 285 ரன்னும் எடுத்தன. ஆனால், இந்தியா முறையே 105, 107 என அடங்கியது. மூன்று நாள் முழுதாய் முடிவதற்குள் மேட்ச்சே முடிந்துவிட்டதால், ரசிகர்கள் பலரும் கொதித்தெழ, சைலன்ட் மோடிற்கு சென்றது இந்திய அணி. ஆனால், தொடரை 2-1 என இந்தியா வென்றது.
இந்த இரண்டாம் இடத்தில் மற்றொரு போட்டியையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், அதுவும் 'பயங்கரமான' போட்டி தான். சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அணிக்கு எதிராக, தரம்சாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கு நாம் பெரிதாக ஷாக் ஆக வேண்டிய விஷயம், இந்தியா 29 ரன்களுக்கு 7 விக்கெட். ஜீரணிப்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால், அதுதான் உண்மை. 20 ஓவர்களில் இலங்கை எளிதாக இப்போட்டியை வென்றது.
1) பலராலும் இன்றும் மறக்க முடியாத தோல்வி!
இதை ஓரளவிற்கு நீங்களே கெஸ் செய்திருக்கலாம். ஆம்! சாம்பியன்ஸ் டிராபி இறுதி கிரிக்கெட் போட்டி தான் அது. இதைப் பற்றி அதிக விளக்கம் தர வேண்டியதில்லை. (அவ்ளோ பீலிங்).. டாஸ் வென்ற கேப்டன் கோலி, முதலில் பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைக்க, அந்த அணி 338 ரன்கள் குவித்தது.
எப்படியும் இந்தியா சேஸ் செய்துவிடும், என இந்திய ரசிகர்கள் நம்பிக்கை வைக்க, 158 ரன்களில் சுருண்டது நமது அணி. 180 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாகிஸ்தான் கோப்பையைக் கைப்பற்றியது. அதே தொடரின் லீக் ஆட்டத்தில், இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பாகிஸ்தான் பழி தீர்த்துக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் கொண்டாடி தீர்த்தன.
ஆனால், அந்த தோல்வியிலும் இந்திய ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல், ஹர்திக் பாண்ட்யாவின் மிரட்டலான ஆட்டம் தான். 43 பந்துகளை சந்தித்த பாண்ட்யா, 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை விளாசி, சிறிது நேரம் பாகிஸ்தான் பவுலர்களை கதிகலங்க வைத்துவிட்டார்.
இந்தத் தோல்வி தான் இந்தாண்டில் இந்தியா சந்தித்த மிகப்பெரும் தோல்வி. வரும் ஆண்டு, தொடக்கமே இந்தியாவுக்கு சோதனை தான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர். அதுவும், அவர்களது மண்ணில். இந்திய அணியில் ரியல் டெஸ்ட்டிங் இங்கே தான் காத்திருக்கிறது. இருப்பினும், நாம் நமது வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுவோம்.
ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.