2016-2017 ஆண்டில் மட்டும், அதாவது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்தியா 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி அனைத்து டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கடந்த 6 மாதங்களில் விளையாடிய போட்டிகளுக்கான தொகை வழங்கப்படவில்லை. மேலும், சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்ததற்காக வீரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி ரூபாயும் வழங்கப்படவில்லை.
பிசிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய டெஸ்ட் அணியில் பங்கேற்று விளையாடும் வீரர்களுக்கு போட்டி ஒன்றிற்கு ரூ.15 லட்சம் ஊதியமாக வழங்குகிறது. போட்டியில் பங்கேற்காமல் டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கும் வீரர்களுக்கு ரூ.7 லட்சம் வழங்கி வருகிறது. கடந்த காலங்களில், இந்த தொகையானது, போட்டி நிறைவடைந்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே காசோலையாக வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இதேபோல, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியில் உள்ள வீராங்கனைகள் தொடர் ஒன்றுக்கு ரூ.1 லட்ச ரூபாய் ஊதியமாக பெற்று வந்த நிலையில், அவர்களும் தற்போது அந்த காசோலைக்காக காத்திருக்கின்றனர்.
இது குறித்து விராட் கோலி தலைமையில் விளையாடி வரும் இந்திய அணியில், வீரர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், வழக்கமாக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகையானது போட்டி நிறைவடைந்த 15 நாட்களில் வந்துவிடும். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக போட்டித் தொகை பெறுவதில் அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென தெரியாது, ஆனால் இதற்கு முன்னர் இதுபோல நடந்தது இல்லை என்று கூறினார்.
இதனிடையே, தற்போது நிர்வாக குழுவிற்கும், பிசிசிஐ நிர்வாகிகளுக்கும் உள்ள பிரச்சனை இந்த தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஐஐசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ இடையேயான புதிய வருமானப் பகிர்வு முறை ஆகியவையும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளிவரும் தகவல் தெரிவிப்பதாவது, வீரர்களுக்கு வழங்கப்படும் தொகையில் கால தாமதம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு அனுமதி வழங்கும் அதிகாரிகள் தற்போது பிசிசிஐ-யில் இல்லை. செயலாளராக இருப்பவர் மட்டுமே பண விவகாரங்களுக்கு அனுமதி அளிக்க முடியும். அதனால் தற்போது பிசிசிஐ செயலாளராக (பொறுப்பு) இருந்துவரும் அமிதாப் சவுத்ரியால் இதற்கு அனுமதி அளிக்க முடியுமா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. மகளிர் கிரிக்கெட் அணியினரை பொறுத்தவரை அவர்கள் இன்னும் பிசிசிஐ-யுடனான ஒப்பந்தந்தில் கையெழுத்திடவில்லை. ஆகவே, அவர்கள் ஒப்பந்தத்தில் கையயெழுத்திட்டதும், அவர்களுக்கான தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நிர்வாக குழுவானது ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது, அதில் வீரர்களுக்கான தொகை ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.