இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டிகளில் வரும் செப்டம்பர் மாதம் 3 போட்டிகளில் விளையாட சசெக்ஸ் அணிக்காக இந்திய வீரர் ஜெயதேவ் உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளதாக சசெக்ஸ் அணி அறிவித்துள்ளது.
இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக உருவெடுத்துள்ள ஜெயதேவ் உனத்கட், தனது திறமையாக வேகப்பந்துவீச்சு மூலம் அணிக்கு பலமுறை வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார். 400 முதல் தர விக்கெட்டுகளுடன், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவராக இருந்து வரும் உனத்கட், சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீசி அசத்தி வருகிறார். மேலும் இக்கட்டான சூழலில் பேட்டிங்கிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
இந்திய அணிக்காக இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளும், 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளும், 10 டி20 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளும், 94 ஐபிஎல் போட்டிகளில் 91 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற உனத்கட் தற்போது இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய உள்ளூர் போட்டிகளில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட், இங்கிலாந்தின் சசெக்ஸ் அணியில் இணைந்துள்ளார். இந்த அணியின் ஏற்கனவே சவுராஷ்டிரா அணக்காக விளையாடி வரும் சேதேஷ்வர் புஜாராவுக்கு பிறகு சசெக்ஸ் அணியில் இணைந்த 2 வது இந்தியர் உனத்கட் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் 3 போட்டிகளில் உனத்கட் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
சசெக்ஸ் அணியில் இணைந்த மகிழ்ச்சியில் இருக்கும் உனத்கட் கூறுகையில், "செப்டம்பரில் சசெக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க நான் உற்சாகமாக இருக்கிறேன், சசெக்ஸ் அணியின் சமீபத்திய வெற்றியை நான் பார்த்து வருகிறார், இது குறித்து அணியின் பயிற்ச்சியாளர், நான் பால் ஃபார்ப்ரேஸ் உடன் பேசி வருகிறேன். அணியில் வெற்றியை கருத்தில் கொண்டு நான் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன். இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் ஒரு அற்புதமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. என்னால் முடிந்த வரை இந்த போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற நான் ஆர்வமாக இருந்தேன், இது எனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் எனக்கு கிடைத்த சரியான நேரம் என்று தோன்றுகிறது. எனது அன்பான நண்பர் & அணி வீரர், சேட்டேஷ்வர் புஜாரா கடந்த இரண்டு சீசன்களில் சசெக்ஸ் அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார் என கூறியுள்ளார்.
உனட்கட்டின் உணர்வுகளை எதிரொலிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள சசெக்ஸ் தலைமை பயிற்சியாளர் பால் ஃபார்ப்ரேஸ் வேகப்பந்து வீச்சாளர் உனத்கட், அணிக்கு வலு சேர்ப்பார். அவர் செப்டம்பர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் எங்களுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அவர் ஒரு தரமான பந்துவீச்சாளர் மற்றும் சீசனின் அற்புதமான நேரத்தில் எங்கள் அணியில் இணைந்த ஒரு சிறந்த வீரர்,
அவரது சாதனை சிறப்பானது, மேலும் ஜெய்தேவ் தனது அனுபவத்தை எங்கள் வளரும் அணியுடன் பகிர்ந்து கொள்வதற்காக அவரைத் தேர்வு செய்துள்ளோம். இந்த சாம்பியன்ஷிப் தொடரில் ஜெய்தேவ் பங்கேற்பதை ஹோவில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில், உனத்கட் விக்கெட்டுகளை வீழ்த்தி, வெற்றி பெற உதவுவார் என்று நம்பிக்கை உள்ளது. செப்டம்பர் 3-ந் தேதி தொடங்கும் கன்ட்ரி சாம்பியன்ஷிப் டிவிஷன் 2 போட்டிகளில் உனத்கட் களமிறங்க உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil