உலகின் ஒவ்வொரு நாடும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வரும், அதே வேளையில், இளைஞர்களும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிப்பதும், சரியாக விளையாடாத வீரர்களுக்கு விமர்சனம் கொடுப்பதும் ரசிகர்களின் வேலை.
வெளியில் இருந்து ரசிகர்கள் என்னதான் வீரர்களை விமர்சனம் செய்தாலும், களத்தில் அவர்கள் எச்சரிக்கையுடன் விளையாடுவதை முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. முக்கியமாக கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங் அல்லது பீல்டிங் என எந்த பக்கம் இருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
ராமன் லாம்பா – இந்திய கிரிக்கெட் வீரர்
இந்த முன்னுதாரணங்களுக்கு முக்கிய சான்றாக இருப்பவர் தான் இந்திய கிரிக்கெட் வீரர் ராமன் லாம்பா. 1960-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி உத்திரபிரதேச மாநிலம் மீரட் நகரில் பிறந்தவர் ராமன் லாம்பா. சிறுவயது முதலே கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வத்துடன் இருந்த லாம்பா, 1980-81 சீசனிகளில் ரஞ்சிக்கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில், 5 முறை இரட்டை சதம் உட்பட 22 சதங்கள் அடித்துள்ள இவர், 87 போட்டிகளில் 6362 ரன்கள் குவித்துள்ளார்.
1994-95 சீசனிகளில் இமாச்சல பிரதேச அணிக்கு எதிராக 312 ரன்கள் குவித்த இவர், அதிகபட்ச ரன்கள் குவித்த வீரராக பெருமை பெற்றார். அந்த சீசனிகளில் 10 போட்டிகளில் விளையாடி 3 சதம், 4 அரைசதத்துடன் 1034 ரன்கள் குவித்து ரஞ்சிக்கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்திருந்தார். இந்த சீசனில் 8 போட்டிகளில் டெல்லி அணிக்கு கேப்டனாக பணியாற்றிய ராமன் லாம்பா 3 வெற்றியும், 5 போட்டிகளில் டிராவும் கண்டிருந்தார்.
1986-87 துலீப் டிராபி தொடரில், வடக்கு மண்டல அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 320 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் 720 நிமிடங்கள் (12 மணிநேரம்) களத்தில் இருந்த லாம்பா 6 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன், 471 பந்துகளில் 320 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து 7 ஆண்டுகள் கழித்து டெல்லியில் நடைபெற்ற இமாச்சல பிரதேச அணிக்கு எதிராக 392 பந்துகளில் 2 சிக்சர் 24 பவுண்ரிகளுடன் 312 ரன்கள் குவித்து முச்சதம் விளாசியிருந்தார். உள்ளூர் போட்டிகளில் ரன் மிஷினாக செயல்பட்ட ராமன் லாம்பாவுக்கு 1986-ம் ஆண்டு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
சர்வதேக போட்டியில் அறிமுகம்
1986-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ராமன் லாம்பா அறிமுக வீரராக களமிறங்கினார். இந்த போட்டியில் 53 பந்துகளை சந்தித்த அவர், 8 பவுண்டரி 1 சிக்சருடன் 64 ரன்கள் குவித்து தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சதமடித்து அசத்தினார்.
அதேபோல் இந்த தொடரின் 2-வது போட்டியில் 1, 3-வது போட்டியில் 20 ரன்கள் எடுத்த லாம்பா 4-வது போட்டியில் 68 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 74 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். 5-வது போட்டியில் 17 ரன்களில் ஆட்டமிழந்த லாம்பா, கடைசி போட்டியில், அதிரடியாக விளையாடி சதமடித்தார். 120 பந்துகளை சந்தித்த அவர், 8 பவுண்டரி 2 சிக்சருடன் 102 ரன்கள் குவித்தார்.
தனது அறிமுக தொடரில் களமிறங்கிய ராமன் லாம்பா 6 போட்டிகளில், 1 சதம், 2 அரைசதத்துடன் 278 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். தொடர்ந்து 1989-ம் ஆண்டு நடைபெற்ற ஜவகர்லால் நேரு நூற்றாண்டு கோப்பை தொடரில், 6 போட்டிகளில் 3 அரைசதத்துடன் 231 ரன்கள் குவித்திருந்தார்.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துடன் தொடக்க வீரராக களமிறங்கிய லாம்பா இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2 முறை பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்கள் குவித்து அசத்தினர். கடந்த 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த லாம்பா, 3 போட்டிகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். லாகூரில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் 24 பந்துகளை சந்தித்த லாம்பா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுவே அவரின் கடைசி போட்டியாக அமைந்தது.
மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் – வெளிநாட்டு பிரீமியர் லீக்
1989-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காத லாம்பா, மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார். ஒரு சில போட்டிகளை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் மீண்டும் ரன் குவிக்க தொடங்கிய லாம்பாவுக்கு இந்திய அணியின் கதவு கடைசிவரை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக வெளிநாட்டு பிரீமியர் லீக் தொடரில் விளையாட தொடங்கினார். அயர்லாந்தில் க்ளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய லாம்பா, அடுத்து வங்கதேசத்தின் டாக்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடினார்.
வங்கதேசம் மற்றும் அயர்லாந்தின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய வெளிநாட்டு வீரராக உருவெடுத்த லாம்பா, வங்கதேசத்திலும் க்ளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகளில் முக்கிய வீரராக அதிகபட்ச ரன்கள் குவித்திருந்தாலும், சர்வதேக அங்கீகாரம் பெறவில்லை. டாக்கா பிரீமியர் லீக்கில் இவரின் அதிரடி ஆட்டத்தை பார்த்து இவரை டாக்காவின் டான் என்று அழைத்துள்ளனர்.
ராமன் லாம்பாவின் அதிர்ச்சி மரணம்
பிப்ரவரி 20, 1998 அன்று, பங்கபந்து ஸ்டேடியத்தில் நடைபெற்ற டாக்காவின் பிரீமியர் லீக் தொடரில், அபாஹானி கிரிரா சக்ரா அணிக்காக முகமதியன் ஸ்போர்டிங் அணிக்கு எதிரான போட்டியில் லம்பா களமிறங்கினார். இந்த போட்டியின்போது, அவுட்ஃபீல்டில் இருந்த லாம்பாவை அந்த அணியின் தற்காலிக கேப்டன் கலீத் மஷூத், ஷார்ட் லெக் திசையில் பீல்டிங் செய்யுமாறு அழைத்துள்ளார்.
இடது கை சுழற்பந்துவீச்சாளர் சைஃபுல்லா கான் வீசிய இந்த ஓவரில் முதல் 3 பந்துகள் அவுட் பீல்டில் இருந்த லாம்பா, அடுத்த 3 பந்துகளுக்கு லெக் திசையில் அழைக்கப்பட்டார். அப்போது கேப்டன், கலீத் மஷூத் ஹெல்மட் அணிந்துகொள்ளும்படி சொல்ல, இன்னும் 3 பந்துதானே ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டு பீல்டிங் பணியை தொடர்ந்துள்ளார். அடுத்த பந்தை சைஃபுல்லா வீச, அதை பேட்ஸ்மேனாக களத்தில் இருந்த மெஹ்ராப் ஹைசன் பலமாக அடிக்க, அந்த பந்து எதிரில் இருந்த ராமன் லாம்பாவின் நெற்றியில் பட்டு மேலே சென்றுள்ளது. இதை பார்த்த விக்கெட் கீப்பிங் பணியில் இருந்த கேப்டன் மஷூத் கேட்ச் பிடித்துள்ளார்.
விக்கெட் விழுந்ததை அனைத்து வீரர்களும் கொண்டாடிய போது, ராமன் லாம்பா மைதானத்தில் விழுந்து கிடந்துள்ளார். அப்போதும் அவர் சில நிமிடங்களில் எழுந்து நின்று பேசியுள்ளார். அவரிடம் வீரர்கள் கேட்டபோது, பரவாயில்லை என்று, சொல்லிவிட்டு யாருடைய உதவியும் இல்லாமல் அவரே டிரெஸ்ஸிங் ரூமுக்கு நடந்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து தண்ணீர் கொடுத்துள்ளனர்.
அடுத்த சில நிமிடங்களில் லாம்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனை சென்ற உடனே அவர் சுயநினைவை இழந்துள்ளார். அவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்து ரத்த கட்டியை அகற்றியுள்ளனர். இதற்காக டெல்லியல் ஒரு மருத்துவ நிபுணர் வரவழைக்கப்பட்ட நிலையில், அவர் லாம்பா குணமடைவார் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு அவரது மனைவி, மற்றும் குழந்தைகள், வங்கதேசத்திற்கு வரவழைக்கப்பட்ட நிலையில், 3 நாட்களுக்கு பிறகு லாம்பா மரணமடைந்தார். லாம்பாவின் நினைவாக அவர் கடைசியாக விளையாடிய, பங்கபந்து ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டாண்ட் அவரது பெயரில் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த ஸ்டேடியத்தில் யாரும் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று கூறப்படுகிறது.
ராமன் லாம்பா புள்ளிவிபரங்கள்
இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லாம்பா, 102 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு அரைசதம் அடித்துள்ள அவர். அதிபட்சமாக 53 ரன்கள் குவித்துள்ளார். 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் 6 அரைசதத்துடன் 783 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். 121 முதல் தர போட்டிகளில் விளையாடி, 31 சதம். 27 அரைசதத்துடன் 8776 ரன்கள் குவித்துள்ளார். அதிபட்சமாக ஒரு போட்டியில் 320 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 6 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள லாம்பா 60 கேட்சுகளை பிடித்துள்ளார்.
1960-ம் ஆண்டு பிறந்த லாம்பா 1998-ம் ஆண்டு தனது 38 வயதில் மரணமடைந்தார். இந்திய அணிக்காக அதிரடி புயலாக கிளம்பிய அவர், இளம் வயதில் மரணத்தை தழுவியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று ராமன் லாம்பா பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.