தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களை போலவே பெண்களும் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் ஆண்களை விட பெண்கள் ஒரு படி மேலே சென்று சாதித்து வருவது அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கான முதல் சர்வதேச சதம், முதல் சர்வதே டெஸ்ட் வெற்றி, முதல் அர்ஜூனா விருது வென்ற வீராங்கனை சாந்தா ரங்கசாமியின் பிறந்த தினம்.
1954-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சென்னையில் பிறந்தவர் சாந்தா ரங்கசாமி. பெண்களுக்கு சம உரிமை என்ற போராட்டங்கள் இருந்த காலக்கட்டத்தில் பிறந்த இவர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆல்ரவுண்டாக ஜொலித்த சாந்தா ரங்கசாமி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில், இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக இருந்துள்ளார்.
சர்வதேச போட்டியில் அறிமுகம்
1976-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரில் அறிமுகமான சாந்தா ரங்கசாமி அறிமுக போட்டியிலேயே கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த சாந்தா ரங்கசாமி 74 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.
அதனைத் தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், பாட்னாவில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் சாந்தா ரங்கசாமி தலைமையிலான இந்திய அணி தனது முதல் சர்வதேச டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதல் இன்னிங்சில் 127 ரன்கள் எடுத்தது. சாந்தா ரங்கசாமி பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து இந்திய அணி, முதல் இன்னிங்சில் 161 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. சாந்தா ரங்கசாமி 31 ரன்கள் எடுத்தார். அடுத்து 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 88 ரன்களில் சுருண்டது. இதில் சாந்தா ஒரு விக்கெட் வீழ்த்திய நிலையில், 55 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சாந்தா ரங்கசாமி தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஒருநாள் போட்டிகளில் அறிமுகம்
1982-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலககோப்பை தொடரில் பங்கேற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-வது போட்டியில் வெற்றி பெற்றது. அடுத்து சர்வதேச அணி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய 4 வெற்றிகள் மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த உலககோப்பை தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய சாந்தா ரங்கசாமி தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 4 வெற்றிகள் மட்டுமே பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. இந்த போட்டித் தொடரில் 12 போட்டிகளில் களமிறங்கிய கேப்டன் சாந்தா ரங்கசாமி, ஒரு அரைசதத்துடன் 172 ரன்கள் குவித்திருந்தார். பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் சதம்
1977-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 200 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சதமடித்த சாந்தா ரங்கசாமி 108 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதல் சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடிந்தது
சாந்தா ரங்கசாமி புள்ளிவிபரங்கள்
இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சாந்தா ரங்கசாமி, 1 சதம் மற்றும் 6 அரைசதத்துடன், 750 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஒரு அரைசதத்துடன் 287 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சாதனைகள்
இந்திய அணிக்காக 12 போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக பணியாற்றிய சாந்தா ரங்கசாமி, தொடர்ச்சியாக கேப்டன் பொறுப்பேற்ற வீராங்கனைகள் வரிகையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 1976-77 சீசனிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 6 போட்டிகளில் 381 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 அரைசதம் கடந்த வீராங்கனை பட்டியலில் 6-வது இடத்தை பிடித்துள்ள சாந்தா ரங்கசாமி, ஒரு டெஸ்ட் தொடரில் 7 கேட்சுகள் பிடித்து 6-வது இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக 1981-முதல் 1984 வரை 16 டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பணியாற்றியுள்ளார். 1976-ம் ஆண்டு சாந்தா ரங்கசாமி இந்திய அரசின் அர்ஜூனா விருதை வென்றிருந்தார். மகளிர் விளையாட்டு வீராங்கனை அர்ஜூனா விருதை வென்றது இதுவே முதல்முறையாகும்.
அக்டோபர் 2019-ல், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் மற்றும் பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சில் ஆகியவற்றில் இடம் பெற்ற முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை சாந்தா ரங்கசாமி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வென்றுள்ள சாந்தா ரங்கசாமி, தற்போது கிரிக்கெட் எழுத்தளராக இருக்கும் நிலையில், பெங்களூருவில் கனரா வங்கியின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.