இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் வீரர் என்ற அடையாளத்துடன் வலம் வரும் விராட்கோலி இன்று தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில், கடந்த 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி, குறுகிய காலத்தில் இந்திய அணியில் முன்னணி வீரராக உருவெடுத்தார். தொடர்ந்து 2010-ம் ஆண்டு டி20 போட்டிகளிலும், 2011-ம் ஆண்டு இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார். 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய விராட்கோலி குறுகிய காலத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார்.
பிறப்பும் – கிரிக்கெட் வாழ்க்கையும்
1988-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த விராட்கோலி, தனது 3 வயது முதல் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். 1998-ம் ஆண்டு மேற்கு டெல்லி கிரிக்கெட் அகாமமி உருவாக்கப்பட்டபோது, அதே ஆண்டு மே மாதம் விராட்கோலியின் தந்தை பிரேம் கோலி, மகனின் கிரிக்கெட் ஆர்வத்தை புரிந்துகொண்டு அவருக்காக ராஜ்குமார் சர்மா என்ற பயிற்சியாளரை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த பயிற்சியில் விராட்டின் திறமையை தெரிந்துகொண்ட பயிற்சியாளர் அதற்கு ஏற்றபடி அவருக்கு பயிற்சியை கொடுத்துள்ளார். திறமைகள் இருந்தாலும் 14 வயதுக்குட்பட்ட டெல்லி அணியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்த சந்தித்த விராட்கோலி, தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு அடுத்த ஆண்டு 15 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு உள்ளூர் ஜூனியர் அணியில் இடம் பெற்றார் விராட்கோலி.
முதல் போட்டியில் 15 ரன்கள் எடுத்திருந்தாலும், அடுத்து ஹிமாச்சல பிரதேச அணிக்கு எதிராக 70 ரன்கள் எடுத்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து 2003-04 உள்ளூர் சீசனில் 15 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்ட கோலி, முதல் போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணிக்கு எதிராக 54 ரன்களும், 2-வது போட்டியில் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக 119 ரன்களும் குவித்தார். இதன் மூலம் உள்ளூர் போட்டிகளில் முதல் சதம் அடித்தார். இந்த சீசன் முடிவில் 390 ரன்கள் குவித்திருந்தார் விராட்கோலி.
உள்ளூர் போட்டிகளில் அதிரடி
2004-05-ம் ஆண்டு நடைபெற்ற விஜய் மெர்ச்சன்ட் தொடருக்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியில் இடம் பெற்ற விராட்கோலி, அதிகபட்சமாக 251 ரன்கள் குவித்து 4 போட்டிகளில் 470 ரன்கள் எடுத்து அசத்தினார். 2005-06 சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான 227 ரன்களும், அரையிறுதியில் பரோடா அணிக்கு எதிராக 228 ரன்களும் குவித்து டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிரான கோலி அரைசதம் அடித்ததை தொடர்ந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி சாம்பியன் பட்டம் பெற்றது.
தொடர்ந்து 2006-ம் ஆண்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானலும் அவருக்கு சரியான பேட்டிங் கிடைக்கவில்லை. 2006-ல் தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி விரைவில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதியில் களமிறங்கிய விராட் 40 ரன்கள் எடுத்திருந்தார். அன்று இரவு அவரது தந்தை இறந்துவிட்ட செய்தி கிடைத்தபோதும், அடுத்த நாள் களமிறங்கிய விராட்கோலி 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் முக்கிய நேரத்தில் கை கொடுத்த விராட்கோலியின் ஆட்டம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.
2007-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான டி20 சாம்பியன்ஷிப்பில் 179 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்த விராட்கோலி, 2008-ம் ஆண்டு எஸ்என்.ஜி.பி.எல் அணிக்கு எதிரான நிசார் டிராபியில்,முதல் இன்னிங்சில் 52 ரன்களும், 2-வது இன்னிங்சில் 197 ரன்களும் குவித்து அசத்தினார். இந்த போட்டி டிராவில் முடிந்தாலும், பேட்டிங்கில் அசத்திய விராட்கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
இளம் இந்திய அணியில் வாய்ப்பு
2006-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற 19-வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட்கோலி, சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் தனது திறமையை நிரூபித்திருந்தார். மேலும் இந்த தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய விராட்கோலிக்கு அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 63 ரன்களும், 2-வது இன்னிங்சில் 28 ரன்களும் எடுத்தார். 2-வது போட்டியில் விராட்கோலி 83 ரன்களும், 3-வது போட்டியில், 80 ரன்களும் குவித்து அசத்தினார். தொடர்ந்து 2007-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 113 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை
2008-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்த விராட்கோலி, அப்போது தொடக்க ஆட்டக்காரர் சேவாக் மற்றும் சச்சின் இருவரும் காயமடைந்ததால், தற்காலிக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இதில் முதல் போட்டியில் 12 ரன்களுக்கு ஆட்மிழந்த கோலி, 2-வது போட்டியில் 37 ரன்களும், 3-வது போட்டியில் 25 ரன்களும், 4-வது போட்டியில் 54 ரன்கள் குவித்து தனது முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்தார். கடைசி போட்டியில் 31 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 அணிகளுக்கு இடையிலான வளர்ந்து வரும் வீரர்கள் பங்கேற்ற போட்டியில் களமிறங்கிய விராட்கோலி, 7 போட்டிகளில் 398 ரன்கள் குவித்து அசத்தினார். பிரிஸ்பேனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சதமடித்து 104 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் ஆனது. விராட் கோலிக்கும் மீண்டும் தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இடம்பெற்ற கவுதம் கம்பீர் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற விராட்கோலி, இறுதிப்போட்டியில் மட்டும் களமிறங்கினார். அதே ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு பெற்ற விராட்கோலி, 4-வது போட்டியில் கவுதம் கம்பீருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 227 ரன்கள் குவித்திருந்தார்.
இந்த தொடரின் தனது முதல் சர்வதேக ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்த விராட்கோலி, 114 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். 2010-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இடம்பெற்ற விராட்கோலி, 2-வது போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக 91 ரன்களும், இலங்கை அணிக்கு எதிராக 71 ரன்களும், மீண்டும் வங்கதேச அணிக்கு எதிரான சதமடித்து 102 ரன்களும் எடுத்து இந்த மொத்தம் 275 ரன்கள் குவித்திருந்தார்.
மேலும் இந்த தொடரில் சதமடித்ததன் மூலம் 22 வயதில் ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார் விராட்கோலி. தொடர்ந்து 26 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்த விராட்கோலி, 2010-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அறிமுகமானார்.
இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார், இந்த உலககோப்பை தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய விராட்கோலி 1 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 282 ரன்கள் குவித்தார்.
இந்திய அணியின் கேப்டன்
2014-ம் ஆண்டு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின்போது தோனி வெளியேறியதால, விராட்கோலி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு இந்திய அணி ஆசியகோப்பை மற்றும் டி20 உலககோப்பை தொடருக்கான வங்கதேசம் சென்றது. இதில் வங்கதேச அணிக்கு எதிரான 136 ரன்கள் குவித்த விராட்கோலி வங்கதேசத்தில் 5 சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார், அதன்பிறகு நடந்த டி20 உலககோப்பை தொடரில் தோனி கேப்டனாக திரும்பிய நிலையில், விராட்கோலி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 130 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் விராட்கோலி 58 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் 319 ரன்கள் குவித்த விராட்கோலி டி20 உலககோப்பை தொடரில் தனி நபராக அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த தோனி திடீர் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து விராட்கோலி கேப்டன் பொறுப்பேற்றார். முதல் இன்னிங்சில் சதம் அடித்தன் மூலம் கேப்டனாக அறிமுக போட்டியில் சதமடித்த 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்,
4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் விராட்கோலி 692 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரில் அதிகட்பச ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார், அதேபோல் கேப்டனாக 3 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்த விராட்கோலி, தலைமையில் இந்திய அணி 2015-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் களமிறங்கியது. இந்த தொடரில் அரையிறுதி வரை சென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டது.
அதேபோல் 2019 உலககோப்பை தொடரிலும், இந்திய அணி விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து இறுதிப்போட்டி வாய்ப்பை தவறிவிட்டது. இந்த தொடரில் விராட்கோலி 9 போட்டிகளில் 443 ரன்கள் குவத்திருந்தார். அதன்பிறகு முதல் டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் விராட்கோலி தலைமையில் களமிற்கிய இந்திய அணி இதிலும் தோல்வியை சந்தித்து 2-வது இடம் பிடித்தது. அதன்பிறகு கேப்டன் பதவியை ராஜினாமா செய்த விராட்கோலி தற்போது அணியில் ஒரு வீரராக விளையாடி வருகிறார்.
விராட்கோலி புள்ளி விபரங்கள்
இந்திய அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட்கோலி, அதிகபட்சமாக 254 ரன்களுடன் 8676 ரன்கள் குவித்துள்ளார். இதில் 29 சதம் மற்றும் 29 அரைசதங்கள் அடங்கும். 286 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட், 13525 ரன்கள் குவித்துள்ளார். இதில் 48 சதங்களும், 70 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 183 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 4 விக்கெட் எடுத்துள்ளார். 115 டி20 போட்டிகளில், ஒரு சதம் மற்றும் 37 அரைசதத்துடன் 4008 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ரன்கள் 122 ஆகும்.
இந்தியாவின் உயரிய விருதான அர்ஜூனா, பத்மஸ்ரீ, கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ள விராட்கோலி, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை பலமுறை வென்றுள்ளார். 2016-17-18 உள்ளிட்ட 3 ஆண்டுகளில் முன்னணி கிரிக்கெட் வீரரான விஸ்டன் தேர்வு செய்துள்ளது. சிறந்த அணி சிறந்த கேப்டன் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
சாதனைகள்
டி20 போட்டிகளில் 4008 ரன்கள் குவித்துள்ள விராட்கோலி, சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளுடன் அதிக வெற்றி பெற்ற டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள விராட்கோலி, 4 டெஸ்ட் தொடர்களில் 4 இரட்டை சதங்கள் அடித்துள்ளார்.
ஒருநாள் தொடரில் ரன் சேஸிங்கின்போது 27 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் 22 சதங்கள் அடித்து உள்ளூரில் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 175இன்னிங்ஸ்களில் 8 ஆயிரம் ரன்கள், 194 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்கள், 267 இன்னிங்ஸ்களில் 13 ஆயிரம் ரன்கள் என சாதனை படைத்துள்ளார்.
டி20 போட்டிளில் அதிக அரைசதம் (37) கடந்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ள விராட்கோலி, 7 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியில் கேப்னாக இருந்த விராட்கோலி, 7263 ரன்கள் குவித்துள்ளார். இதில் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு வீரராக 916 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் பெங்களூர் அணி இறுதிப்போட்டி வரை சென்றது.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட்கோலி, 13437 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். இதில் முதலிடத்தில் சச்சின்()18426, 2-வது இடத்தில் சங்ககாரா(13234), 3-வது இடத்தில் ரிக்கி பாண்டிங் (13704) உள்ளனர். இவர்கள் முவருமே ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த பட்டியலில் விராட்கோலி முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதில் ரிக்கி பாண்டிய் சாதனையை சமன் செய்ய விராட்கோலிக்கு இன்னும் 267 ரன்கள் தேவை.
ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 48 சதங்களுடன் விராட்கோலி 2-வது இடத்திலும் உள்ளனர். இன்னும் ஒரு சதம் கடந்தால் சச்சின் சாதனையை விராட்கோலி சமன் செய்யலாம். 2023 உலககோப்பை தொடரில் கடந்த நவம்பர் 2-ந் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிராக சதத்தை நெருங்கிய விராட்கோலி 88 ரன்களில் வெளியேறினார். இதனிடையே இன்று தனது பிறந்த நாளில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கும் விராட்கோலி சதமடித்து சச்சின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.