இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டு தோறும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் பல விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே.நாயுடு பெயரில் கிரிக்கெட போட்டியின் வாழ்நாள் சாதனையாளருக்கு மட்டுமே வழங்கப்படும். அந்த வகையில் இந்தியாவில் முதல் அர்ஜூனா விருது வென்ற விளையாட்டு வீரர் சலீம் துரானி. 2010-ம் ஆண்டு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதையும் வென்றுள்ளார்.
பிறப்பும் – கிரிக்கெட் ஆர்வமும்
1934-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு பஷ்டூன் குடும்பத்தில் பிறந்தவர் சலீம் துரானி. இவரது தந்தை அப்துல் அஜீஸ் துரானி ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர். சலீம் துரானி தனது 3 வயதில் இருந்தபோது அப்துல் அஜீஸ் துரானி குடும்பம் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து இந்தியாவில் குடியேறியது. 1935-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற, போட்டியில் நவநகர் அணிக்காக விளையாடிய அப்துல் துரானி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமறிங்கினார்.
இவரின் பேட்டிங் திறமையால் ஈர்க்ப்பட்ட அப்போதைய ஜாம் சாஹிப் திக்விஜய்சின்ஹ்ஜி ரஞ்சித்சின்ஹ்ஜி இவருக்கு சப்-இன்ஸ்பெக்டராக வேலை வாய்ப்பை வழங்கினார். அதன்பிறகு இவரது குடும்பம் குஜராத்தின் ஜாம் நகருக்கு குடியேறியது. தந்தையை போலவே கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் கொண்ட சலீம் துரானி, கடுமையான போராட்டத்திற்கு பின் முதல் தர போட்டிகளில் விளையாடினார்.
தொடர்ந்து 1961-62-ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றபோது அதில் துரானி முக்கிய பங்காற்றியுள்ளார். இதில் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் 8 மற்றும் சென்னையில் நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகள் டிராவான நிலையில், 4-வது மற்றும் 5-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டெஸ்ட் போட்டியில் சதம்
பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அசத்தியுள்ள சலீம் துரானி, 1962-ம் ஆண்டு வெஸ்ட் இணடீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சலீம் துரானி, முதல் இன்னிங்சில் 12 ரன்கள் எடுத்த நிலையில், 2-வது இன்னிங்சில் 3-வது வீரராக களமிறங்கி சதம் அடித்தார். இதுவே சலீம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அடித்த முதல் மற்றும் கடைசி சதமாகும். இந்த போட்டியில் 104 ரன்கள் குவித்திருந்தார். அதேபோல் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் வீழத்திய துரானி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள துரானி, ஒரு சதம் 7 அரைசதத்துடன் 1202 ரன்கள் குவித்துள்ள நிலையில், பந்துவீச்சில் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே இவரின் சிறந்த பந்துவீ்ச்சாகும். அதேபோல் 170 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ள சலீம் துரானி, 14 சதம் 45 அரைசதத்துடன் 8454 ரன்கள் குவித்துள்ளார். 484 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட் ஓய்வு – திரைப்பட அறிமுகம்
1973-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற சலீம் துரானி, இந்தியின் பர்வின் பாபியுடன் இணைந்து சரித்ரா என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்தியாவில் விளையாட்டு போட்டியில் உயரிய விருதான அர்ஜூனா விருதை வென்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமை பெற்ற சலீம் துரானி தான் விளையாடிய காலக்கட்டத்தில் ரசிகர்கள் சிக்சர் கேட்கும்போதெல்லாம் சிக்சர் அடித்ததாகவும் தகவல் உள்ளது. 2011-ம் ஆண்டு பிசிசிஐ அவருக்கு சி.கே.நாயுடுவின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.
குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் வசித்து வந்த சலீம் துரானி கடந்த ஏப்ரல் 2-ந் தேதி மரணமடைந்தார். ஆப்கானிஸ்தானில் பிறந்து இந்தியாவுக்காக விளையாடிய சலீம் துரானி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். இதில் சலீம் துரானிஆப்கானிஸ்தானில் பிறந்தவர் என்றாலும், அவர் கைபர் கனவாய் அருகே பிறந்ததாகவும் தகவல்கள் உள்ளது. அதே சமயம் 2018-ம் ஆண்டு இந்தியா ஆப்கானிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் சலீம் இரானி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.