ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்க பதக்கத்தை வென்ற துப்பாக்கிச்சுடும் வீரர் அபினாவ் பிந்த்ரா இன்று (செப் 28) தனது 42-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
ஒலிம்பிக் வரலாறு – இந்தியாவின் பதக்கம்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 1894-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விளையாட்டு போட்டியின் மூலம் சர்வதேச அளவில் சமத்துவத்தை ஏற்படுத்த முயன்ற பிரஞ்ச் கல்வியாளர் மற்றும் வரலாற்று ஆசிரியர் பெய்ரி டி கர்ப்பர்டின் முயற்சியின் காரணமாக தொடங்கப்பட்ட ஒலிம்பிக் தொடரின் முதல் போட்டி கடந்த 1896-ல் ஏத்தன்ஸில் நடைபெற்றது. மொத்தம் 245 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 200-க்கு மேற்பட்ட கிரேக்கர்களும், வெளியில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்றனர்.
இந்தியா 1900-ம் ஆண்டு தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஓட்டப்பந்தைய வீரர் நார்மன் பிரிட்சார்ட் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் தடை ஓட்டம் பிரிவில் 2 வெள்ளிப்பதங்கங்களை வென்றார். பிரிட்டீஷ் ஆட்சியில் இருந்ததால் 1920-ம் ஆண்டு வரை இந்தியாவின் ஒரு தேசிய அணி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து 1920-ல் இந்திய ஒலிம்பிக் கமிட்டி நிறுவப்பட்டு இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினர்.
சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் முதல் பதக்கம்
இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின், 1952-ம் ஆண்டு ஹெல்சினிக்கில் நடைபெற்ற ஒலிம்பிக்போட்டியில் இந்தியாவின் கே.டி.ஜாதவ், மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். இதுவே சுதந்திரத்திற்கு பின் இந்தியா ஒலிம்பிக் போட்டியில் பெற்ற முதல் பதக்கம் ஆகும். அதன்பிறகு நடந்த போட்டிகளில் இந்திய ஆக்கி அணி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தாலும் தனிநபர் தங்கம் என்பது இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.
இந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அபினாவ் பிந்த்ரா. கடந்த 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இவர், ஆண்களுக்காக 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்த அபினாவ் பிந்த்ரா, கொலாராடா போல்டர் பல்கலைகழகத்தில் வணிக பிரிவில் பட்டம் பெற்றவர். ஜெர்மனியில் பயிற்சி பெற்ற அபினாவ் பிந்த்ரா தனது 15-வயதில் கடந்த 1998-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றார். குறைந்த வயதில் இந்த போட்டியில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் வரலாறு
அதேபோல் 2000-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று மிக குறைந்த வயதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த போட்டியில் 590 புள்ளிகளை பெற்று 11-வது இடத்தை பிடித்ததால் அபினாவ் பிந்த்ரா இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து 2001-ம் ஆண்டு முனிச் உலககோப்பை தொடரில் 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்று தனது முதல் சர்வதேச பதக்கத்தை வென்றார்.
அடுத்து 2002-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற அபினாவ் பிந்த்ரா, 2004-ல் ஏத்தன்ஸில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும் 597 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிந்த்ரா, இறுதிப்போட்டியில் 97.6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை பிடித்தார். 100 புள்ளிகளுக்கும் குறைவாக எடுத்திருந்தாலும் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டடார்.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் தங்கம்
2006-ல் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 699.1 புள்ளிகள் பெற்று பதக்கம் வென்றதால், 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற பிந்த்ரா, தகுதிச்சுற்றில் 596 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்திருந்தாலும், இறுதிப்போட்டியில் 104.5 புள்ளிகள் பெற்று தன்னுடன் போட்டியிட்ட அனைத்து வீரர்களையும் பின்னுக்கு தள்ளினார். இதன் மூலம் ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபில் போட்டியில் 700.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
ஓய்வுக்கு பின் அபினாவ் பிந்த்ரா
2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கின் நல்லெண்ண தூதராக இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட அபினாவ் பிந்த்ரா அதே ஆண்டு விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது பிந்த்ரா அபினவ் ஃபியூச்சரிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அபினாவ் பிந்த்ரா, தனது அறக்கட்டளை மூலம் விளையாட்டு வீரர்களளை ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும் பிந்த்ரா தற்போது ஐஓசி தடகள ஆணையத்தின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.