Advertisment

ஆசியாவின் சிறந்த கோல் கீப்பர்... இந்திய கால்பந்தின் அடையாளம் : யார் இந்த பீட்டர் தங்கராஜ்?

இந்தியா கால்பந்து விளையாட்டில் சிறந்த கோல்கீப்பராக ஆல்டைம் இந்தியா அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தவர் பீட்டர் தங்கராஜ்

author-image
D. Elayaraja
New Update
Peter Thangaraj

இந்திய கால்பந்து வீரர் பீட்டர் தங்கராஜ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உலக அரங்கில் கிரிக்கெட் போட்டிகளை விட கால்பந்து போட்டிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடாத சிறிய நாடுகளில் கூட கால்பந்து விளையாட தேசிய அணி வைத்து அதில் முன்னணியிலும் இருந்து வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் இந்த நிலை அப்படியே தலைகீழாக உள்ளது. கிரிக்கெட் மட்டுமே இந்தியாவில் அனைவரும் விரும்பி பார்க்கும் ரசிக்கும் ஒரு விளையாட்டாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.

Advertisment

அதற்கு ஏற்றார்போல் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா ஒரு வெற்றி பெற்றாலும், அது பெரிய அளவில் பேசப்படுவதும், மற்ற விளையாட்டுகளில் இந்தியா பல சாதனைகள் படைத்தாலும், அது பெரிய அளவில் கொண்டாடப்படாததும் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளாக உள்ளது. ஆனால் ஒரு காலத்தில் உலக நாடுகளை போல் கால்பந்து விளையாட்டில் இந்தியாவும் சிறந்த அணியாக இருந்துள்ளது.

கால்பந்து விளையாட்டில் இந்திய சிறப்பாக செயல்பட்ட காலக்கட்டத்தில் அணியில் கோல் கீப்பராக முக்கிய பங்கு வகித்தவர் தான் பீட்டர் தங்கராஜ்.

1935-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த இவர், மார்னிங் ஸ்டார் க்ளப்பில் இருந்து தனது கால்பந்து பயிற்சியை தொடங்கியுள்ளார். அதன்பிறகு நண்பர்கள் யூனியன் க்ளப்பிற்கு மாறிய பீட்டர் தங்கராஜ், 1953-ம் ஆண்டு இந்தியா ராணுவத்தில் இணைந்து, மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் அணிக்காக விளையாட தொடங்கியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் கோல் கீப்பிங்கில் சிறந்த திறனை வளர்த்துக்கொண்ட இவர், தனது ஆட்டத்தின் மூலம் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

உள்ளூர் அணிகளில் பீட்டர் தங்கராஜ்

இவர் விளையாடிய காலக்கட்டத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் அணி 1955 மற்றும் 1958-ம் ஆண்டுகளில் டுராண்ட் கோப்பையை வென்றிருந்தது. இதன் மூலம் கவனிக்கப்படும் வீரராக மாறிய பீட்டர் தங்கராஜ், 1960-ம் ஆண்டு நடைபெற்ற சந்தோஷ் டிராபி தொடரில், சர்வீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கோல் கீப்பராக யாரும் அசைக்க முடியாத ஒரு வீரராக இருந்த பீட்டர் தங்கராஜ், தரையில் அடிப்பதில் பலவீனமானவராக இருந்தாலும், பந்தை மேலே தூக்கிய காற்றில் அடிப்பதில் சிறந்த திறனை பெற்றிருந்தார். அதேபோல் கார்னர் கிக், மற்றும் பெனால்டி வாய்ப்புகளை சமார்த்தியமாக தடுத்து எதிரணி வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் என்று, கௌதம்ராய் என்ற வரலாற்று ஆசிரியர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் சர்வீஸ் அணியில் இருந்து வெளியேறிய பீட்டர் தங்கராஜ், மோகன் பஹான், ஈஸ்ட் பெங்கால் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். இதில் 1963-ம் ஆண்டு சந்தோஷ் டிராபியை வென்ற ஈஸ்ட் பெங்கால் அணியில் முக்கிய வீரராக இடம் பெற்றிருந்த பீட்டர் தங்கராஜ், 1965-ல் ரயில்வே அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அந்த ஆண்டு சந்தோஷ் கோப்பையை அந்த அணிக்காக பெற்று தந்தார்.

சர்வதேச கால்பந்து அணியில் வாய்ப்பு

1960-70-களில் இந்திய கால்பந்து அணியின் முக்கிய வீரராக இருந்த பீட்டர் தங்கராஜ், ஒரு சிறந்த கால்பந்து வீரராக முத்திரை பதித்திருந்தார். 1955-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற 4 நாடுகள் பங்கேற்கும் கால்பந்து போட்டியில் இந்திய அணிக்காக முதல் முறையாக களகமிறங்கினார். அதனைத் தொடர்ந்து சையத் அப்துல் ரஹீமின் பயிற்றிசியின் கீழ் 1956 மற்றும் 1960-களில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

1958- டோக்கியோ, 1962 ஜாக்கர்தா ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஆசிய கால்பந்து தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். இதில் 1962-ல் இந்திய அணி ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் தங்கம் வென்று அசத்தியது.1966-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசியகோப்பை கால்பந்து தொடரிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஆசியாவின் சிறந்த கோல் கீப்பர்

1958-62 வரை கோலாலம்பூரில் நடைபெற்ற மெர்டேகா கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடிய பீட்டர் தங்கராஜ், 1964-66 ஆண்டுகளில் ஆசியகோப்பை தொடரிலும் பங்கேற்றுள்ளார். இதில் 1958-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு, 1967-ம் ஆண்டு கால்பந்து விளையாட்டில், இவரின் பங்களிப்பை பாராட்டி இந்திய அரசின் சார்பில் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

ஆசியாவின் ஆல்ஸ்டார் அணிக்காக விளையாடி 1967-ல் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட பீட்டர் தங்கராஜ், 1971-ம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின் கால்பந்து பயிற்சியாளராக மாறிய இவர், அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம், கோவாவின் வாஸ்கோ எஸ்.சி, பொகாரோ ஸ்டீல் ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரின் பயிற்சியின் கீழ் வாஸ்கோ அணி 1973-ல், போர்ட்டேர்லொய் டிராபி கே.எஃப்.ஏ மற்றும் சாகோலா தங்கப்பதக்கத்தை வென்றிருந்தது.

இந்தியா கால்பந்து விளையாட்டில் சிறந்த கோல்கீப்பராக ஆல்டைம் இந்தியா அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த பீட்டர் தங்கராஜ், கடந்த 2008-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இன்று (டிசம்பர் 24-ந் தேதி) அவரின் பிறந்த நாள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Football
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment