உலகின் ஒவ்வொரு நாடும் மற்ற துறைகளை போல் விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் அளித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதில் ஒருசில நாடுகளில் குறிப்பிட்ட ஒரு விளையாட்டு போட்டி மட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும். அந்த வகையில் இந்தியாவில் ஹாக்கி தான் தேசிய விளையாட்டு என்றாலும் கூட ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுப்பது கிரிக்கெட் போட்டிக்குதான்.
அதே சமயம் உலகின் பல நாடுகளில் விளையாடப்படும் கால்பந்து போட்டியும் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. தற்போது இந்திய கால்பந்து அணியில் கேப்டன் சுனில் சேத்ரியை தவிர மற்ற வீரர்கள் யார் என்று கேட்டால் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். இந்த நிலை இந்திய கால்பந்து போட்டியில் காலடி வைத்ததில் இருந்து தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
துளசிதாஸ் பலராம்
கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா சாதிக்கும் முன்பே கால்பந்து போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. 1951 மற்றும் 1962-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளது. இதில் 1962-ம் ஆண்டு இந்திய அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் தான் துளசிதாஸ் பலராமன். இன்று (அக் 04) அவரது பிறந்த நாள்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஹைதராபாத்தில் செகந்தராபாத் அருகில் அம்முகுடா என்ற குக்கிராமத்தில் பிறந்த துளசிதாஸ் பலராமன், ஏழை குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறுவயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்துள்ளார். கிழிந்த பழைய போலீஸ் ஷூக்களை செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொடுத்து அதை சரி செய்து அதன்மூலம் கால்பந்து விளையாடியுள்ளார்.
முதல் கால்பந்து வாய்ப்பு
அவரது குடும்பம் செகந்தாராபாத்துக்கு குடிபெயர்ந்ததை தொடர்ந்து, லல்லகுடா பட்டறை மைதானத்தில் பலராமன் தனது கால்பந்து பயிற்சியை தொடங்கியுள்ளார். அப்போது சிவிலியன்ஸ் மற்றும் ஆர்மி லெவன் அணிகள் மோதிய க்ளப் ஆட்டத்தில் முதல் முறையாக விளையாடிய துளசிதாஸ், பின்னர் ரைடர்ஸ் க்ளப்பில் இணைந்தார். இந்த ஆட்டங்களில் இந்திய கால்பந்து பயிற்சியாளராக இருந்த சையத் அப்துல் ரஹீமை கவர்ந்த துளசிதாஸ் பலராமன், தனது 19-வயதில் 1956-ம் ஆண்டு நடைபெற்ற சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாட வாய்ப்பினை பெற்றுள்ளார்.
இந்த வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமாக இருந்த சையத் அப்துல் ரஹீம் பலராமுக்கு ஒரு சைக்கிளும் தனியாக ஊக்கத்தொகையும் கொடுத்துள்ளார். இதன் மூலம் பலராமன் தனது பயிற்சிக்காக கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்ல எளிமையாக இருந்துள்ளது. சந்தோஷ்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக பலராம் கோல் அடித்தார். அந்த போட்டியில் ஹைதராபாத் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
க்ளப் அணியின் கேப்டன்
தொடர்ந்து 1956 ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, கொல்கத்தாவை சேர்ந்த ஈஸ்ட் பெங்கால் அணியின் செயலாளர் ஜே.சி.குன்ஹா பலராமை தங்களது அணியில் ஒப்பந்தம் செய்தார். அந்த காலக்கடத்தில் கிளப் அணிகளில் அதிக சம்பளம் வாங்கும் (ரூ3500) முக்கிய வீரராக திகழ்ந்த துளசிதாஸ் பலராமன், விரைவில் அந்த அணியின் கேப்டனாகவும் உருவெடுத்தார்.
இவரது கேப்டன்சியில் ஈஸ்ட் பெங்கால் அணி 1958-ம் ஆண்டு ஐஎஃப்ஏ ஷீல்டு, 1959, 1960 மற்றும் 1962 உள்ளிட்ட சீசனிகளில் சந்தோஷ்கோப்பை வென்றது. இதில் 1959-ல் நடந்த சிஎஃப்எல் சீசனில் 23 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த 2-வது வீரர் என்ற சிறப்பினை பெற்றிருந்தார்.
சர்வதேச கால்பந்து போட்டி
1956-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் கால்பந்து போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த துளசிதாஸ் பலராமன், யூகோஸ்லாவியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்வதேச கால்பந்து போட்டியில் அறிமுகமானார். இந்த தொடரில் இந்திய அணி 4-வது இடத்தை பிடித்தது. தற்போதுவரை ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியில் சிறந்த நிலை இதுதான். தொடர்ந்து 1960-ல் ரோமில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, ஹங்கேரி, பிரான்ஸ், பெரு உள்ளிட்ட நாடுகளுடன் மோதியது.
இதில் ஹங்கேரிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும் 79-வது நிமிடத்தில் பலராமன் கோல் அடித்து அசத்தினார். அதேபோல் கடைசி லீக் போட்டியில் பெரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பலராமன் அடித்த கோல் காரணமாக இந்தியா முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும் இறுதியில் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம்
1958-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய கால்பந்து போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டம் ஒரு கட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது, வெற்றியை தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது காயத்தில் இருந்தாலும் களமிறங்கிய பலராமன் 2 கோல்கள் அடித்ததால் இந்தியா 5-2 என்ற கணக்கில் வெற்றியை பெற்றது.
அதேபோல் 1962-ம் ஆண்டு ஜாகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த பலராமன், தாய்லாந்து மற்றுமு் ஜப்பான் அணிக்கு எதிரான கோல் அடித்து இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தென்கொரியாக அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி முதல்முறையாக ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது.
ஓய்வுக்கு பின் பல்வேறு அணிக்கு பயிற்சியாளராகவும், விளையாட்டு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளிலும் இருந்த துளசிதாஸ் பலராமன் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி மரணமடைந்தார். 1956- முதல் 1962-வரை இந்தியாவுக்காக 36 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10 கோல்கள் அடித்துள்ளார். க்ளப் போட்டிகளில் 104 கோல்கள் அடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.