இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனாக பல வெற்றிகளை குறித்துள்ள ஐ.எம்.விஜயன், தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருகிறார். 2000-ம் ஆண்டிக்கு பிற்பகுதியில் பைச்சூங் பூட்டியாவுடன் இணைந்து வெற்றி கூட்டணியை உருவாகி சாதனை படைத்துள்ள ஐ.எம்.விஜயன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
சோடா பாட்டில் விற்ற ஐ.எம்.விஜயன்
1969-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் பிறந்தவர் ஐ.எம்.விஜயன் (இனிவளப்பில் மணி விஜயன்). ஏழை குடும்பத்தில் பிறந்த இவர், மிகவும் மோசனமான சூழலில் தனது வாழ்க்கையும் குடும்பத்தின் நிலையை முன்னேற்றவும், திருச்சூர் மாநகராட்சி ஸ்டேடியத்தில் ஒரு சோடா விற்பனையாளராக தொடங்கியுள்ளார். அப்போது ஒரு பாட்டில் விற்றால் அவருக்கு ரூ10 பைசா கிடைக்கும்.
சோடா பாட்டில் விற்பனை செய்த பணத்தில் திருச்சூர் சர்ச் மிஷன் சொசைட்டி உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ஐ.எம்.விஜயன், சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்துள்ளார். இவரின் கால்பந்து ஆட்டத்தை பார்த்த அப்போதைய கேரளா மாநில டி.ஜி.பி, எம்.கே.ஜோசப், அவரது திறமையை போற்றும் வகையில், கேரளா மாநில போலீஸ் க்ளப் அணியில் சேர்த்து விட்டுள்ளார்.
கேரளா போலீஸ் அணியில் முதல் போட்டி – க்ளப் கால்பந்து வாழ்க்கை
டி.ஜி.பி, எம்.கே.ஜோசப் முயற்சியின் காரணமாக கடந்த 1987-ம் ஆண்டு நடைபெற்ற குயிலான் நேஷ்னல்ஸ் போட்டியில் கேரளா மாநில போலீஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஐ.எம்.விஜயன், சிறப்பாக விளையாடி அசத்திய நிலையில், அவரின் ஆக்ரோஷமான ஆட்டமும், அசாத்திய திறமையும் தேசிய கால்பந்து அணியின் கவனத்தை ஈர்த்தது. 1991-ம் ஆண்டு வரை கேரளா மாநில போலீஸ் அணிக்காக விளையாடிய ஐ.எம்.விஜயன் அதன்பிறகு கொல்கத்தா மோகன்பகான் அணியில் இணைந்தார்.
தொடர்ந்து 1992-ம் ஆண்டு மீண்டும் கேரளா போலீஸ் அணிக்கு திரும்பிய ஐ.எம்.விஜயன், அடுத்த ஆண்டே, மீண்டும் மோகன்பகான் அணிக்கு திரும்பிய நிலையில், 1994-ம் ஆண்டு ஜேசிடி மில்ஸ் அணிக்காக களமிறங்கினார். 3 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய ஐ.எம்.விஜயன் 1997-ம் ஆண்டு அந்த அணியில் இருந்து விலகி எஃப்சி கொச்சி அணியில் இணைந்தார். 98-ல் மீண்டும் மோகன்பகான் அணிக்கு திரும்பிய விஜயன் 99-ல் மீண்டும் எஃப் சி கொச்சி அணியில் களமிறங்கினார்.
டாக்கா பிரீமியர் டிவிஷன் லீக் போட்டியில் சர்ச்சை
கடந்த 2000-ம் ஆண்டு ஆஃப் சீசனின்போது, வங்கதேசத்தின் டாக்கா பிரீமியர் டிவிஷன் லீக் போட்டியில் முக்திஜோதா சங்சாத் அணியில் இடம்பெற்றிருந்த விஜயன் 5 போட்டிகளில் விளையாடிய நிலையில், விளையாட ஒப்பந்தம் கையெழுத்தானத்தற்கு பின், அவருக்கு கால்பந்து கழகம் வீரர் பரிமாற்ற சான்றிதழ் இல்லாததால் ரூ50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் போட்டியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு மீண்டும் எஃப்சி கொச்சி அணியில் இணைந்த ஐ.எம்.விஜயன், அடுத்து கிழக்கு வங்காள அணியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு ஜேசிடி மில்ஸ் அணியில் விளையாடிய நிலையில், 2 ஆண்டுகள் கழித்து அந்த அணியில் இருந்து வெளியேறி சர்ச்சில் பிரதர்ஸ் அணியில் இணைந்தார். 2005-ல் கிழக்கு வங்காளம் அணியில் இணைந்து விளையாடினர். இதுவே அவர் விளையாடிய கடைசி க்ளப் அணியாகும். 2006-ம் ஆண்டு இந்த அணியில் இருந்து விலகினார்.
சர்வதேச கால்பந்து வாழ்க்கை
1992-ம் ஆண்டு இந்திய கால்பந்து அணியில் அறிமுகமான ஐ.எம்.விஜயன், நேரு கோப்பை, ஒலிம்பிக் போட்டிக்கு முந்தைய சுற்று போட்டிகள், பிபா தகுதிச்சுற்று போட்டிகள், ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தான் இந்திய அணியில் விளையாடிய காலக்கட்டத்தில், சக வீரர் பைச்சுங் பூட்டியாவுடன் இணைந்து வலுவான கூட்டணியை உருவாக்கி வெற்றியை தேடி கொடுத்துள்ளார். பல சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக கோல் அடித்து அசத்தியுள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளன கோப்பை தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணியில் ஐ.எம்.விஜயன் முக்கிய வீரராக இடம்பெற்றிருந்தார். போட்டியின்போது விளையாட்டு வரலாற்றில் அதிகவேக கோல் அடித்து சாதனை படைத்த ஐ.எம்.விஜயன், 2003-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆப்ரோ ஆசிய விளையாட்டு போட்டியில் 4 கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராக உருவான ஐ.எம்.விஜயன் அந்த தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்திய அணிக்காக 72 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஐ.எம்.விஜயன் 29 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 1993-97-99 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் தான் ஐ.எம்.விஜயன். இதில் 1997 மற்றும் 1999-ல் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2003-ம் ஆண்டு அவரின் கடைசி ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3-வது இடத்தை பிடித்திருந்தது.
அதேபோல் 1992-93 ஆண்டுகளில் சந்தோஷ் கோப்பை வென்ற கேரளா அணியில் இடம்பெற்றிருந்தார். 1993-94 ஆண்டு சந்தோஷ் கோப்பையை வென்ற, வங்காளம் அணியில் இடம் பெற்றிருந்த ஐ.எம்.விஜயன், 2 முறை கேரளா போலீஸ், 3 முறை மோகன் பகான், 3 முறை ஜேசிடி மில்ஸ் அணிகள் ஃபெடரேஷன் கோப்பை வென்ற அணியிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
தனிப்பட்ட விருதுகள்
2003-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்த நிலையில், 1992, 1997 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளில் ஆசிய சர்வதேச கால்பந்து வீரருக்கான விருதையும் வென்றுள்ளார். 1993-ம் ஆண்டு நேரு கோப்பைக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சினிமா வாழ்க்கை
கால்பந்து போட்டியில் உச்சத்தில் இருந்த காலக்கட்டமான 2000-ம் ஆண்டு பிற்பகுதியில் சினிமாவில் அடியெடுத்து வைத்த ஐ.எம்.விஜயன், 2001-ம் ஆண்டு மலையாளத்தில வெளியான சாந்தம் என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர், 2006-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லனாக கலக்கியிருப்பார். அதன்பிறகு கொம்பன், கெத்து, கணேஷா மீண்டும் சந்திப்போம் ஆகிய தமிழ் படங்களில் நடித்த ஐ.எம்.விஜயன், கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான விஜயின் பிகில் படத்தில் நடித்திருந்தார்.
இந்திய கால்பந்து அணியில் ஹீரோவாகவும், சினிமாவில் வில்லனாகவும் கலக்கி வரும் ஐ.எம்.விஜயன், மொத்தமாக 284 உள்ளூர் க்ளப் போட்டிகளில் விளையாடி 142 கோல்கள் அடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.