Advertisment

HBD Ajith Agarkar : 15 வயதில் முச்சதம்... இந்தியாவுக்காக அதிவேக அரைசதம் : ஆல்ரவுண்டராக ஜொலித்த அஜித்

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக திகழ்ந்த அஜித் அகார்கர் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக உள்ளார்

author-image
D. Elayaraja
New Update
Ajith Agarkar

அஜித் அகார்கர் பிறந்த தினம் டிசம்பர் 04

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனாக வாழ்க்கையை தொடங்கி பின்னாளில் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய வீரராக திகழும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

Advertisment

பிறப்பும் – கிரிக்கெட் ஆர்வமும்

1976-ம் ஆண்டு டிசம்பர் 04-ந் தேதி மும்பையில் பாலச்சந்தர் அகார்கர் மீனா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அஜித் அகார்கர். இவருக்கு மாணிக் அகார்கர் என்ற ஒரு சகோதரி இருக்கிறார். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட அகார்கர், ஒரு பேஸ்ட்மேனாக தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். மகனின் கிரிக்கெட் ஆர்வத்தை புரிந்துகொண்ட அவரது தந்தை, கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்காரிடம் சேர்த்துவிட்டுள்ளார்.

Ajith Agarkar

அவரின் பயிற்சியின் கீழ், கிரிக்கெட் விளையாட தொடங்கிய அகார்கர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் பந்துவீச்சு திறனையும் வளர்த்துக்கொண்டார். தனது 15-வயதில் 16 வயதுக்குட்பட்டோருக்கான கில்ஸ் ஷீல்ட் போட்டியில் தனது முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒரு பேட்ஸ்மேனாக மும்பை அணியில் இடம்பெறுவது கடினம், என்பதை உணர்ந்த அகார்கர், ஆல்ரவுண்டராக தனது திறனை வளர்த்துக்கொண்டுள்ளார்.

மும்பையில் இருந்து மற்றொரு டெண்டுல்கராக இருக்க வேண்டும் என்று விரும்பிய அகார்கர், கபில்தேவ், மைக்கேல் ஹோல்டிங், இயான் போத்தம் ஆகியோர் வரிசையில் தன்னையும் ஒரு சிறந்த வீரராக மாற்றிக்கொள்ள முயற்சி செய்துள்ளார். இந்த முயற்சிக்கு அவருக்கு வெற்றியும் கிடைத்தது.

சர்வதேச கிரி்க்கெட் வாழ்க்கை

1998-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி கொச்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஜித் அகார்கர் அறிமுகமானார். முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணியில் களமிறங்கிய அகார்கர், பேட்டிங்களில் களமிறங்கவில்லை என்றாலும், பந்துவீச்சில் 5 ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அதே ஆண்டு கோக் கோலா கப் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கினார்.

Ajith Agarkar

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் சவுரவ் கங்குலி 105 ரன்கள் குவித்தாலும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் 220 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனாலும் பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி நியூசிலாந்தை 205 ரன்களில் சுருட்டி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், 10 ஓவர்கள் வீசிய அகார்கர் 2 மெய்டன் ஓவருடன் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து ஸ்டீபன் பிளமிங், கிரேக் மேக்மில்லன் உட்பட 4 வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்

அகார்கர் அறிமுகமான காலக்கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்த ஜவஹல் ஸ்ரீநாத்துடன் இணைந்து வலுவான வேகப்பந்துவீச்சு கூட்டணியை உருவாக்குவார் என்று பலரும் நம்பினர். ஆனால் அகார்கர் அறிமுகமான முதல் சீசனில் காயம் காரணமாக ஸ்ரீநாத் விலகினார். அதன்பிறகு 1999-ல் நெஹ்ரா, 2000-ம் ஆண்டில் ஜாகீர்கான் ஆகியோரின் வருகையால், இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு வீரர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டது.

இதில் ஸ்ரீநாத், நெஹ்ரா அகார்கர் ஆகியோர் அடிக்கடி காயத்தால் சிக்கியதால் இந்திய அணி ஒரு நிலையான வேகப்பந்துவீச்சு கூட்டணி இல்லாமல் தடுமாறியது. இந்த சமயத்தில் காயம் காரணமாக அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வந்த அகார்கர் 2002-03 காலக்கட்டத்தில் இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சில மறக்க முடியாத நிகழ்வுகளை செய்து காட்டியுள்ளார்.

Ajith Agarkar

2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து 2-வது இடம் பிடித்தது. இந்த தொடரில் முழு போட்டிகளிலும் விளையாடவில்லை என்றாலும், இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக அஜித் அகார்கர் இடம் பெற்றிருந்தார். அதன்பிறகு 1999 மற்றும் 2003-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.

டெஸ்ட் போட்டி அறிமுகம்

1998-ம் ஆண்டு இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அகார்கர், முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்திய நிலையில், பேட்டிங்கில் 4 ரன்கள் எடுத்திருந்தார். 2-வது இன்னிங்சிலும் ஒரு விக்கெட், 5 ரன்கள் எடுத்தார். 1999-ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தொடரில் அகார்கர் இடம்பெற்றிருந்தார்.

இதில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்திய அகார்கர், பேட்டிங்கில், 12 ரன்களும் எடுத்தார். அடுத்து 2-வது இன்னிங்சில், ஒரு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், பேட்டிங்கில் 11 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியை அலறவிட்ட அகார்கர் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Ajith Agarkar

அதன்பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முக்கிய வீரராக திகழ்ந்த அகார்கர், தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவரது எக்கானமி அதிகமாக உள்ளது என விமர்சனங்களும் எழுந்தது. ஆனாலும் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். 2006-ம் ஆண்டு இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 5 இன்னிங்ஸ்களில் 9 விக்கெட் வீழ்த்தி அசத்தியவர் அகார்கர்.

டெஸ்ட் போட்டியில் சதம்

பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட அகார்கர், கடைசி கட்டத்தில் பல போட்டிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளார். அதேபோல் உலக புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த வீரர்களின் பட்டியலில் அகார்கருக்கும் இடம் உண்டு. 2002-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இதில் முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அகார்கர், பேட்டிங்கில் 9 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து 2-வது இன்னிங்சில், ஒரு விக்கெட் மட்டுமே வீழ்தினாலும், பேட்டிங்கில், 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சதமடித்து அசத்தினார். இந்த போட்டியில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், அகார்கர் 190 பந்துகளில் 16 பவுண்டரியுடன் 109 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

Ajith Agarkar

ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம்

இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றவர் அஜித் அகார்கர். கடந்த 2000-ம் ஆண்டு ஜிம்பாப்வே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 301 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியில் 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அகார்கர் 21 பந்துகளில் அரைசதம் கடந்து ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார், மேலும் கடைசி வரை களத்தில் இருந்த இவர் 25 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 67 ரன்கள் குவித்த நிலையில், பந்துவீச்சில், 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒன்றில் தொடர்ந்து 5 முறை டக் அவுட் என்ற மோசமான சாதனையை படைத்த அஜித்த அகார்கர், இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், கும்ளே (337) ஸ்ரீநாத் (315) ஆகியோருக்கு அடுத்தபடியாக 288 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். அக்டோபர் 13 2013-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து அகார்கர் ஓய்வு பெற்றார்.

Ajith Agarkar

கிரிக்கெட் புள்ளி விபரங்கள்

இந்தியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதத்துடன் 571 ரன்கள் 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அகார்கர், ஒருநாள் போட்டிகளில், 3 அரைசதங்களுடன், 1269 ரன்களும், 288 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடர்களில் டெல்லி, மற்றும் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ள அகார்கர், 23 ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.

அதேபோல் ஒருநாள் போட்டிகளில் 133 போட்டிகளில் 200 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தென்ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் 138 போட்டிகளில் இந்த சாதனையை செய்திருந்தார். 2013-ல் ரஞ்சிக்கோப்பை தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த அகார்கர், சர்வீஸ் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 145 ரன்களை எடுத்தார்.

இந்த போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு ஆதித்யா தரேவுடன் இணைந்து 169/6 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த மும்பை அணியை 458/8 டிக்ளர் என்ற நிலைக்கு அழைத்து சென்றார். இந்த தொடரில் அகார்கர் தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது அகார்கர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்காக 1999, 2003, 2007 மற்றும் 2007-ம் ஆண்டு டி20 உலககோப்பை தொடர் என 4 உலககோப்பை தொடர்களில் விளையாயுள்ள அகார்கர், 2002-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் முக்கிய இடம் பெற்றிருந்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment