இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் முதல் சதம் அடித்த வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றுள்ள முன்னாள் வீரர் சேத்தன் சர்மா, இந்திய அணியின் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவரும் கூட.
1983-ம் ஆண்டு தனது 17-வயதில் பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல் தர போட்டிகளில் களமிறங்கிய சேத்தன் சர்மா, அடுத்து 1984-ம் ஆண்டு, லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்த போட்டியில் தான் வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் பாகிஸ்தான் அணியின், மோஷின் கான் விக்கெட்டை வீழ்த்திய சேத்தன் சர்மா, அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
1986-ம் ஆண்டு இங்கிலாந்தில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில், 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய சேத்தன் சர்மா 16 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், பார்மிஹமில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 2-வது இன்னிங்சில் 6 என மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இடம் பிடித்த சேத்தன் சர்மா, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஹால் ஆஃப் ஃபேம் குழுவில் ஒருவராக இடம் பெற்றார்.
கபில்தேவ்க்கு அடுத்தபடியாக வேகப்பந்துவீச்சில் அசத்திய சேத்தன் சாமூ அடிக்கடி காயத்தில் சிக்கியதால், பல போட்டிகள் விளையாடி முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், இவர் விளையாடிய காலக்கட்டத்தில், கபில்தேவ்வுடன் இணைந்து தொடக்க வேகப்பந்துவீச்சாளராக பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டியில் சதமடித்த வேகப்பந்துவீச்சாளர்
கபில்தேவ்-க்கு அடுத்து இந்திய அணியின் பவுலிங் ஆல்ரவுண்டர் என்று அழைக்கப்பட்ட சேத்தன் சர்மா, இந்தியா உலககோப்பை தொடரை வென்ற 1983-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் தொடரில் அறிமுகமானார். 1989-ம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிராக, 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சதமடித்து அசத்தினார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 255 ரன்கள் குவித்தது. 256 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 65 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சேத்தன் சர்மா, சிறப்பாக விளையாடி 96 பந்துகளை சந்தித்த அவர், 8 பவுண்டரி 1 சிக்சருடன் 101 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்த போட்டியில் அவர் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் சதமடித்த வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.
உலககோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட்
1987-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை தொடரில், நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டியில், கேன் ரூதர்ஃபோர்டு, இயான் ஸ்மித், சேட்ஃபீல்ட் ஆகிய 3 வீரர்களையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சேத்தன் சர்மா, உலககோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
ஒரு கட்டத்தில், தனது பந்துவீச்சில் வலிமையை இழந்த சேத்தன் சர்மா, கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், 1994-ல் நவம்பர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போட்டியே இவரின் கடைசி போட்டியான அமைந்தது. அந்த போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். ஓய்வுக்கு பின் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறிய சேத்தன் சர்மா, 2020-ல் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தார், 2022-ல் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்வி எதிரொலியாக அந்த பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு மீண்டும் அந்த பதவிக்கு விண்ணப்பித்தவுடன் தேர்வு செய்யப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.