இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேன், சுழற்பந்துவீச்சாளர், 1983 உலககோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் முதல் கேப்டன் என இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வீரர்களில் முக்கியமானவர் தமிழகத்தின் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
சென்னையில் பிறந்தவர்
1959-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி சென்னை மைலாப்பூரில் பிறந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கு ஸ்ரீநாத் என்ற ஒரு சகோதரரும், ஸ்ரீகலா பரத் என்ற சகோரியும் உண்டு. வித்யா பாலமந்தர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த ஸ்ரீகாந்த், ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் கல்லூரிக்கு முந்தைய படிப்பை முடித்துள்ளார். தொடர்ந்து கண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியாளராக பட்டம் பெற்றுள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கிய ஸ்ரீகாந்த், 1978-79 சீசனிகளில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். தமிழ்நாடு மற்றும் தென்மண்டல அணிக்காக விளையாடிய ஸ்ரீகாந்த், அதே 1978-79 ஆண்டு சீசன்களில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் முதல் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம்
1981-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி, அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்ரீகாந்த் முதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்கினார். சுனில் கவாஸ்கர் கேப்டனாக இருந்த இந்த போட்டியில் அவருடன் சேர்ந்து தொடங்க வீரராக களமிறங்கிய ஸ்ரீகாந்த், 10 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அடுத்து ஒருநாள் இடைவெளியில் நவம்பர் 27-ந் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 10 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனா ஸ்ரீகாந்த் 2-வது இன்னிங்சில், 31 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இந்திய அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற ஸ்ரீகாந்த், கபில்தேவ் தலைமையிலான 1983-ம் ஆண்டு உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.
1983- உலககோப்பை கிரிக்கெட் தொடர்
இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 14 ரன்கள் எடுத்த ஸ்ரீகாந்த், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது போட்டியில் 20 ரன்கள் எடுத்தார். இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்து 3-வது போட்டியில் 321 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணி 158 ரன்களில் சுருண்டாலும், ஸ்ரீகாந்த் 39 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் கபில்தேவ் 40 ரன்கள் குவித்ததே இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்.
அடுத்து 4-வது போட்டியில் இந்திய அணி மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியில் ஸ்ரீகாந்த் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டக் அவுட் ஆன ஸ்ரீகாந்த், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 24 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அரையிறுதிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த இங்கிலந்து அணி 213 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணி 32 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 44 பந்துகளில் 19 ரன்கள் குவித்தார்.
உலககோப்பை இறுதிப்போட்டி
1983-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்ரீகாந்த், 57 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சிக்சரும் 7 பவுண்டரியும் அடங்கும். 184 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல்முறையாக உலக கோப்பை வென்றது.
இந்த போட்டியில் இரு அணிகளையும் சேர்த்து அதிக ஸ்கோர் அடித்தவர் ஸ்ரீகாந்த் (38) தான். அதேபோல் இந்த உலககோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 156 ரன்கள் எடுத்திருந்தார்.
1985 கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்
8 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்திய அணி தொடரை வென்றது. இதில் 5 போட்டிகளில் விளையாடிய ஸ்ரீகாந்த், 238 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 115 பந்துகளில் 93 ரன்கள் குவத்த ஸ்ரீகாந்த், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 77 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.
1986-88 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஸ்ரீகாந்த், 1983-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதில் 117 பந்துகளை சந்தித்த ஸ்ரீகாந்த் அதிரடியாக 19 பவுண்டரிகள் ஒரு சிக்சர் விளாசி 116 ரன்கள் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து 1987-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 149 பந்துகளை சந்தித்த ஸ்ரீகாந்த் 18 பவுண்டரி 2 சிக்சருடன் 123 ரன்கள் குவித்தார். இதுவே டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் மற்றும் அவரின் கடைசி டெஸ்ட் சதமாகும். இந்த போட்டி டிராவில் முடிந்தது.
இந்திய அணியின் கேப்டன்
1986-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 251 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரராக 104 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி ஒரு சிக்சருடன் 102 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார் ஸ்ரீகாந்த். தொடர்ந்து 1987-ல் இந்தியாவில் நடந்த உலககோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
1988-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்ரீகாந்த், பேட்டிங்கில் 87 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 70 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் ஒரு போட்டியில் அரைசதம் கடந்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். உலகளவில் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிறகு இந்த சாதனையை செய்தவர் ஸ்ரீகாந்த்.
1989-ல் ஸ்ரீகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதே ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான நடந்த டெஸ்ட் தொடரில் ஸ்ரீகாந்த் தலைமையின் கீழ் சச்சின் டெண்டுல்கர் அறிமுக வீரராக களமிறங்கினார். 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரீகாந்த் இந்த 4 போட்டிகளையும் டிரா செய்தார். அதேபோல் 13 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி 4 வெற்றி 8 தோல்விகளை சந்தித்துள்ளார்.
கடைசியாக ஸ்ரீகாந்த் 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலயாவுக்கு எதிரான பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 34 ரன்களும், 2-வது இன்னிங்சில் 38 ரன்களும் எடுத்தார். இந்த போட்டியில் 5 கேட்சுகள் பிடித்து டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் அல்லாமல் 5 கேட்சுகளை பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 1992-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உலககோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தனது கடைசி ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனார் ஸ்ரீகாந்த்.
ஓய்வுக்கு பின்
ஓய்வுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக பணியாற்றிய ஸ்ரீகாந்த், 2011-ம் ஆண்டு உலககோப்பை அணியை தேர்வு செய்திருந்தார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஸ்ரீகாந்த் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சன்ரைசஸ் அணியின் தூரராக இருக்கிறார்.
இந்திய அணிக்காக, 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம், 12 அரைசதத்துடன், 2062 ரன்கள் குவித்துள்ளார். 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடி,4 சதம், 27 அரைசதத்துடன் 4091 ரன்கள் குவித்துள்ள ஸ்ரீகாந்த் அதிகபட்சமாக 123 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் ஆட்டத்திற்கு பெயர் பெற்ற ஸ்ரீகாந்த், தனது தொடக்க இணை வீரரான சுனில் கவாஸ்கரை விட முற்றிலும் மாறுபட்ட ஒருவராக இருந்துள்ளார்.
1983 உலககோப்பை வென்ற இந்திய அணி குறித்து திரைப்படம் எடுக்கப்பட்டபோது ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடித்திருந்தார். அதேபோல் 2019-ம் ஆண்டு பிசிசிஐ சார்பில் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது ஸ்ரீகாந்துக்கு வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.