இந்திய கிரிக்கெட் அணியில் தனது சுழற்பந்துவீச்சின் மூலம் எதிரணி வீரர்களை திணறடித்த ஜாம்பவான் அனில் கும்ளே பிறந்த தினம் இன்று (அக்டோபர் 17). கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்த இவர், இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார். அதேபோல் இந்திய டெஸ்ட் அணிக்கு பந்துவீச்சாளர் கேப்டன் பொறுப்பேற்றது கும்ளே மட்டும் தான்.
பிறப்பும் – கிரிக்கெட் தொடக்கமும்
கர்நாடக மாநிலம் மைசூரில் 1970-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி பிறந்தவர் அனில் கும்ளே. சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், தனது 13 வயதில் யங் கிரிக்கெட்டர்ஸ் க்ளப்பில் இணைந்தார். அதன்பிறகு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பி.எஸ்.சந்திரசேகர் போன்ற வீரர்களை பார்த்து தனது கிரிக்கெட் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். தனது 19-வது வயதில்(1989) கர்நாடக அணிக்காக முதல்தர போட்டிகளில் பங்கேற்ற அனில் கும்ளே அடுத்த ஆண்டு (1990) ஆஸ்ட்ரல் – ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
இந்த போட்டியில் குருப் பி-ல் இடம் பெற்றிருந்த அசாருதீன் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதில் பாகிஸ்தானுக்கு முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் கும்ளே. சர்வதேச போட்டிகளில் அவரின் முதல் விக்கெட் பாகிஸ்தான் அணியின் சலாம் யூசப். அடுத்து இலங்கை அணிக்கு எதிரான 2-வது போட்டியில், 10 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம்
முதல் தொடரில் பெரிதாக விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் கும்ளேவின் சுழற்பந்துவீச்சு எதிரணி வீரர்கள் திணறும் அளவுக்கு சிறப்பாக இருந்தது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு பெற்ற கும்ளே அதே ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2வது போட்டிளில் கும்ளேவுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ளே, 2-வது இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தவில்லை. இதனால் 3-வது மற்றும் கடைசி போட்டியில் கும்ளேவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான 1990-ம் ஆண்டுக்கு பின் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்த அணில் கும்ளே, ஹீரோ கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 6.1 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதில் 4 விக்கெட்டுகள் போல்ட் முறையில் வீழந்தது.
1996 உலககோப்பை தொடர்
இந்தியா இலங்கை பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய உலககோப்பை தொடரில் இந்திய அணியில் கும்ளேவுக்கு இடம் கிடைத்தது. இந்த தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும் (7 போட்டி 523 ரன்கள்), அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ளேவும் (7 போட்டி 15 விக்கெட்டுகள்)முதலிடம் பிடித்தனர்.
கும்ளேவின் சுழற்பந்து வீச்சு ஜம்போ ஜெட் போல் வேகமானவை என்பதால் அவரை பலரும் ஜம்போ என்றே அழைத்தனர். 1990-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போடடியில் அறிமுகமாகி இருந்தாலும் அதன்பிறகு 2 ஆண்டுகள் 1992-வரை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காத கும்ளே, இராணிக்கோப்பை தொடரில் ரெஸ்ட் ஆஃப இந்திய அணிக்காக டெல்லி அணிக்கு எதிரான களமிறங்கிய 138 ரன்கள் விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
இந்த சிறப்பான ஆட்டத்தின் காரணமாக அடுத்து இந்திய அணி தென்ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்தபோது கும்ளேவுக்கு வாய்பு கிடைத்தது. இதில் 1992-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் என மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்கிய கும்ளே மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதே ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்த கும்ளே 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் மும்பையில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிச்சில் 3 மற்றும் 2-வது இன்னிங்சில் 4 என மொத்தம் 7 விக்கெட்டுகளை கும்ளே கைப்பற்றினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள்
டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய கும்ளே 10 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்த சாதனை பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 9 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனையை முறியடித்தார். அதேபோல் 21 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய கும்ளே இந்த சாதனையை படைத்த 2-வது வீரரானார். முதலிடத்தில் எடப்பள்ளி பிரசன்னா 20 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ளார்.
1994-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் மற்றும் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்திய கும்ளே, இந்த போட்டியில் 128 ரன்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
1999-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய கும்ளே, 2-வது இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் கும்ளே தான். 1956-ல் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர், 2021-ம் ஆண்டு நியூசிலாந்தின் அஜாஸ் படேல் இந்த சாதனையை செய்துள்ளனர்.
முதல் டெஸ்ட் சதம்
பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இக்கட்டான சூழ்நிலையில் கை கொடுத்துள்ள கும்ளே, 2007-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 110 ரன்கள் விளாசினார். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் கும்ளே மட்டுமே சதமடித்திருந்தார். 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு கும்ளே கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்கிய இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கும்ளே 619 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் 5 அரைசதமும் ஒரு சதமும் அடித்துள்ளார். அதேபோல் 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 337 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கும்ளே தனது டெஸ்ட் போட்டி வாழ்க்கையில் இதுவரை 40,850 பந்துகளை வீசி அதிக பந்துகள் வீசிய வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 44039 பந்துகள் வீசி முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள கும்ளே, முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை செய்த 3-வது வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். 2008-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற கும்ளே அடுத்து ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார்.
ஐபிஎல் கிரக்கெட் – தலைமை பயிற்சியாளர்
2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட கும்ளே, 2009-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான 3.1 ஓவர்கள் பந்து வீசி, 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 2009-ம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த கும்ளே தனது அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்று 2-வது இடம் பிடித்தார். ஐபிஎல் தொடரில் இன்று வரை பெங்களூர் அணியின் அதிகபட்ச முன்னேற்றம் இதுதான்.
2010-ம் ஆண்டு அரையிறுதி வரை கொண்டு சென்ற கும்ளே 2011-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று அணியின் வழிகாட்டியாக இருந்தார். அதன்பிறகு மும்பை அணியின் வழிகாட்டியாக இருந்த கும்ளே தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் பணியாற்றி வருகிறார்.
2016-ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கும்ளே, அப்போது கேப்டனாக இருந்த விராட்கோலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். இந்திய அரசின் அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் கும்ளே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.