20-களின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டரை வலுப்படுத்தியவர் சுரேஷ் ரெய்னா. டெஸ்ட், ஒருநாள் மற்றும் வ20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் பல சாதனைகளை படைத்துள்ள சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று பிறந்த நாள்.
1986-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி உத்திரபிரதேச மாநிலத்தின், முரட்நகர் என்ற பகுதியில் பிறந்த சுரேஷ் ரெய்னா அங்கேயே தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். தொடர்ந்து 2000-ம் ஆண்டு கிரிக்கெட் மீதான ஆர்வத்தின் காரணமாக, லக்னோவில் உள்ள குரு கோபின்ந் சிங் விளையாட்டு கல்லூரியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு சிறப்பாக விளையாடி பாராட்டுக்களை பெற்ற ரெய்னா, உத்திரபிரதேச அணியின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா
இளம் உத்திரபிரதேச அணியில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து 2002-ம் ஆண்டு 19 வயதுக்குட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்து. அப்போது அவருக்கு 15 வயது. இங்கிலாந்து அணிக்கு எதிராக சில அரைசதங்களுடன் ரன்கள் குவித்த ரெய்னா அடுத்து இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியிலும் இடம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 16-வயதில் 2003-ம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரெய்னா, அடுத்த ஆண்டு அணியில் இடம் பெறவில்லை. இதன் பிறகு 2005-ம் ஆண்டு லிஸ்ட் ஏ அணியில் அறிமுகமாகி மத்தியபிரதேச அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடர்ந்து இந்தியாவிப் பல்வேறு உள்ளூர் அணிகளில் விளையாடியுள்ள ரெய்னா 2005-06 ரஞ்சி சீசனில் 600 ரன்களுக்கு மேல் குறித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2004-ல் பாகிஸ்தானில் நடைபெற்ற யூ19 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், ஒரு ஆட்டத்தில் 38 பந்துகளில் 90 ரன்கள் குவித்து அசத்திய நிலையில், இந்த தொடரில் 3 அரைசதங்கள் அடித்து பாராட்டுக்களை பெற்றார். இவரின் ஆட்டத்திறனை பார்த்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற பார்டர் – கவாஸ்கர் உதவித்தொகை வழங்கப்பட்டது. 2005-ம் ஆண்டு முதல்தர போட்டிகளில் அறிமுகமான ரெய்னா, அந்த தொடரில் 645 ரன்கள் குவித்து அசத்தினார்.
மிடில் ஆர்டரை வலுப்படுத்திய ரெய்னா
இந்திய அணியின் சிறந்த பீல்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா, 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 36 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 260 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரெய்னா தனது முதல் போட்டியிலேயே சதம் (120) கடந்து அசத்தினார்.
அதே சமயம் அந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரெய்னா 29 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். இதுவே இந்தியர் ஒருவர் அதிக பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆன முதல் நிகழ்வு. அடுத்து 2012-ம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் இடம்பெற்ற ரெய்னா, முதல் 2 போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் 3 வது போட்டியில் 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதன் பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்பியதை தொடர்ந்து ரெய்னாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு 2014-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரெய்னா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தார். இதில் 2-வது போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், வங்கதேச அணியை 47 ரன்களில் சுருட்டியது.
ஐபிஎல் கிரிக்கெட்
2008-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, 2016 மற்றும் 2017-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டபோது குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதன்பிறகுப சென்னை அணி 2018-ல் ரீ என்டரி கொடுத்த போது மீண்டும் சென்னை அணிக்கு வந்த ரெய்னா, 2020-ம் ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இந்த தொடரில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது.
2021-ம் ஆண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய அவர் ஐபிஎல் தொடரில் தனது 200 போட்டிகளை நிறைவு செய்த நிலையில், 2022-ம் ஆண்டு அவரை சென்னை அணி விடுவித்தது. ஆனால் ஏலத்தில் அவரை வாங்க எந்த அணியும் முன்வராததால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு ரெய்னா வர்ணனையாளமாக மாறிவிட்டார்.
தோனியை பின் தொடர்ந்த ரெய்னா
சென்னை அணியில் தல தோனி என்றால் சின்னத்தல ரெய்னா என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார். அதை நிரூபிக்கும் வகையில் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் தவிர மற்ற அனைத்து சர்வதேச போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதில் என் இதயம் நிறைந்த பெருமையுடன் உங்கள் பயணத்தில் உங்களுடன் சேர முடிவு செய்துள்ளேன். ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்ட ரெய்னா, தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து போட்டிகளில் இருந்தும் ரெய்னா ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் லெஜண்ட் பிரீமியர் லீக், மற்றும் ரோடு சேப்டி கிரிக்கெட் லீக் உள்ளிட்ட போட்டிகளில் ரெய்னா விளையாடி வருகிறார்.
இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதே போல் பீல்டிங்கிலும் தனது தனித்தன்மையுடன் விளையாடிய ரெய்னாவை தென்ஆப்பிரிக்க அணியின் ஜான்டி ரோட்ஸ் தனது டாப் 10 பீல்டர்களின் பட்டியலில் முதலிடத்தை கொடுத்துள்ளார்.
சாதனைகள்
சர்வதேச டி20 மற்றும் சாம்பியன் லீக் டி20 போட்டிகளில் சதம் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ள ரெய்னா, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5000 ரன்களை எடுத்த முதல் வீரரும் ஆவார். அதேபோல் ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளை கடந்த 4-வது வீரராக இவர், 107 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தப்படியாக 100 சிக்சர்கள் விளாசியவர் ரெய்னா.
சாம்பியன் லீக் டி20 தொடரில் இதுவரை 842 ரன்கள் கடந்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் சாம்பியன் லீக் டி20 தொடரில் 6 அரைசதங்கள் கடந்து அதிக அரைசதங்கள் கடந்த வீரர் என்ற பெருமைய பெற்றுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் பவர்ப்ளேயில் அதிக ரன்கள் குவித்தவரும் இவர் தான்.
கடந்த 2009-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், 8-வது விக்கெட்டுக்கு ரெய்னா - ஹர்பஜன் சிங் ஜோடி 61 ரன்கள் குவித்தது. இது டி20 போட்டிகளில் 8-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அரைசதம் கடந்த ரெய்னா 43 பந்துகளில் 5 சிக்சர் 2 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்தியாவுக்காக இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 768 ரன்களும், ஒரு சதம், 7 அரைசதம் அடித்துள்ளார். 13 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 226 ஒருநாள் போட்டிகளில் 5 சதம் 36 அரைசதத்துடன் 5615 ரன்கள் குவித்துள்ளார், 36 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில், 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்துவீச்சாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.