2000-ம் காலக்கட்டத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டலை வலுப்படுத்திய முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். டி20 போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்சர், 12 பந்துகளில் அரைசதம் என பல சாதனைகளை படைத்துள்ள யுவராஜ் சிங், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராகவும் இருக்கிறார்.
1981-ம் ஆண்டு பஞ்சாபி சீக்கிய குடும்பத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யோக்ராஜ சிங், ஷப்னம் சிங் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் யுவராஜ் சிங். குழந்தை பருவத்தில் டென்னிஸ் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டுகளில் ஆர்வம் மிகுந்த யுவராஜ், இந்த 2 விளையாட்டுகளிலும் சிறந்த திறனை கொண்டவராக இருந்துள்ளார். குறிப்பாக 14 வயதுக்குட்பட்டோருக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யுவராஜ் சிங்.
கிரிக்கெட் ஆர்வம்
அடுத்த சில மாதங்களில் ரோலர் ஸ்கேட்டிங் பதக்கத்தை மறந்துவிட்டு கிரி்கெட் போட்டிகளில் கவனம் செலுத்துமாறு அவரது தந்தை சொன்னதை தொடர்ந்து யுவராஜ் தனது கவனத்தை கிரிக்கெட் பக்கம் திருப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது தந்தையே யுவராஜ் சிங்கை தினமும் கிரி்க்கெட் பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளார். கிரிக்கெட் போட்டியில் தனது திறமையை வளர்த்துக்கொண்ட யுவராஜ், 1995-96 சீசன்களில் 16-வயதுக்குட்பட்டோருக்கான பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார்.
அடுத்து 1996-97 சீசனிகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்ற யுவராஜ், தனது பேட்டிங்கின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில், இமாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து 1997-ன் பிற்பகுதியில் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற யுவராஜ் தனது முதல் தர போட்டிகளில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்த தொடரில் பீகார் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 3 ரன்கள் எடுத்திருந்தபோது பேட்டிங் செய்ய வந்த யுவராஜ் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 358 ரன்கள் எடுக்க வைத்தார். யுவராஜ் சிங்கின் இந்த ஆட்டம் காரணமாக அவருக்கு 19 வயதுக்குட்டோருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. இலங்கை அணிக்கு எதிரான முதல் தொடரின் 3-வது போட்டியில் 55 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்தினார். 2000-ம் ரஞ்சி டிராபியிலும் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்திய யுவராஜ், ஹரியானாவுக்கு எதிராக 149 ரன்கள் குவித்திருந்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரி்க்கெட்
2000-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலககோப்பை தொடரில் இந்திய அணி முகமது கைப் தலைமையில் களமிறங்கியது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங், ஆல்ரவுண்டராக அசத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிராக 62 பந்துகளில் 68 ரன்கள் குவித்ததுடன் பந்துவீச்சில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 25 பந்துகளில் 58 ரன்கள் விளாசியிருந்தார்.
இதன் மூலம் ஜூனியர் உலககோப்பை தொடரின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட யுவராஜ் சிங், 2000-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள தேசிய கிரி்க்கெட் அகாடமியில் பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் டிராபிக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் கென்யாவுக்கு எதிரான முதல் போட்டியில் யுவராஜ் களமிறங்கவில்லை.
தொடர்ந்து ஆஸ்திரேலியா உடனான இந்தியாவின் 2-வது போட்டியில், 5-வது வீரராக களமிறங்கிய யுவராஜ், 80 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 84 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். அடுத்து தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் குவித்ததுடன் ஒரு விக்கெட் வீழ்த்திய யுவராஜ், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்து.
ஒருநாள் போட்டியில் முதல் சதம் – 2003 உலககோப்பை
2003-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் யுவராஜ் சிங் தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில், 85 பந்துகளை சந்தித்த யுவராஜ் 9 பவுண்டரி 4 சிக்சருடன் 102 ரன்கள் குவித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டரின் முக்கிய வீரராக திகழ்ந்த யுவராஜ், 2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் பங்கேற்றிருந்தார்.
2003 உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்திருந்த யவராஜ், இங்கிலாந்து அணிக்கு எதிரான 42 ரன்களும், கென்னியாவுக்கு எதிராக 58 ரன்களும் எடுத்தார். மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த யுவராஜ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பிறகு டிவிஎஸ் முத்தரப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
2003-ம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போடடடியில் அறிமுகமான யுவராஜ், முதல் இன்னிங்சில் 20 ரன்களும், 2-வது இன்னிங்சில், 5 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். தொடர்ந்து 2003-ம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி அணியான யார்க்ஷீர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு கவுண்டி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 2-வது வீரர் யுவராஜ் சிங்.
டி20 உலககோப்பை கிரிக்கெட்
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முக்கிய வீரராக மாறிய யுவராஜ் சிங், டி20 போட்டிகளில் அதிரடி பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். 2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலககோப்பை தொடரில் தோனி கேப்டனாக களமிறங்கினார். இதில் துணைக்கேப்டனாக களமிறங்கிய யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டுவார்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டி அசத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்சர் அடிப்பது 4-வது முறையாக இருந்தாலும், டி20 போட்டிகளில் முதல்முறையாகும். மேலும் இந்த போட்டிகளில் 12 பந்துகளில் அரைசதம் கடந்து புதிய சாதனை படைத்த யுவராஜ் இந்த போட்டியில் 16 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 30 பந்துகளில் 70 ரன்கள் குவித்த யுவராஜ் பிரெட்லீ பந்துவீச்சில் 119 மீட்டர் சிக்சர் அடித்தார்.
டி20 உலககோப்பை தொடரில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடிய யுவராஜ் 148 ரன்கள் எடுத்த நிலையில், பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தார். தொடர்ந்து 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கு தோனி கேப்டனாகவும், யுவராஜ் சிங் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். தனது பேட்டிங்கில் அசத்திய யுவராஜ் 2011 உலககோப்பை தொடரை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார்.
இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய யுவராஜ் 4 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 362 ரன்கள் குவித்த நிலையில், பந்துவீச்சில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இந்திய அணி உலககோப்பை தொரை வெல்ல தோனியின் கேப்டன்சி முக்கிய காரணம் என்றாலும், யுவராஜ் சிங்கின் ஆல்ரவுண்டர் ஃபர்பாமன்ஸ் மற்றொஐ முக்கிய காரணம் என்று சொல்லலாம்
புற்றுநோய் பாதிப்பை வென்ற யுவராஜ்
2011 உலககோப்பை தொடர் முடிந்த பின் யுவராஜ் சிங்க்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பறெ்ற யுவராஜ், 2012-ல் இந்தியா திரும்பினார். மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கிய யுவராஜ் சிங் முன்புபோல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தார். ஒரு சில டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 2014-ம் ஆண்டு டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கின் மந்தமான ஆட்டத்தால் தான் இந்தியா தோல்வியடைந்தாக பலரும் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்ற யுவராஜ் சிங், ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட (16 கோடி) வீரர் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். பல அணிகள் விளையாடி இருந்தாலும், யுவராஜ் சிங் ஒரு சில ஆட்டங்களை தவிர தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு யுவராஜ் கிரி்க்கெட் போட்டிகளில்இருந்து ஓய்வு பெற்றார்.
இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 3 சதம் 11 அரைசதத்துடன் 1900 ரன்கள் குவித்துள்ளார். 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 304 ஒருநாள் போட்டிகளில் 14 சதம் 52 அரைசதம் உட்பட, 8701 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 150 ரன்கள் எடுத்துள்ளார். 58 டி20 போட்டிகளில் விளையாடி 8 அரைசதத்துடன் 1177 ரன்கள் குவித்துள்ளார்.
ஓய்வுக்கு பின் யுவராஜ்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள யுவராஜ் தற்போது டி10 லீக் போட்டிகளில் மாரத்தா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2012-ல் அர்ஜூனா விருது பெற்ற யுவராஜ் சிங், 2014-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். மேலும் புற்றுநோய் விழிப்புணவு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.