Advertisment

சுதந்திர இந்தியாவின் முதல் தங்கம்... ஹாக்கியில் சாதித்த இரட்டையர்கள் : யார் இந்த கிஷான் லால், கே.டி.சிங்?

1928-ம் ஆண்டு தொடங்கி 1956-வரை ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா தொடர்ச்சியாக தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

author-image
D. Elayaraja
New Update
Hockey Indian Captain Kishan Lal KD Singh

இந்திய ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் தங்கம் கொடுத்த கேப்டன்கள் கிஷான் லால் - கே.டி.சிங்

இந்தியாவில் அதிகப்படியான ரசிகர்கள் கொண்ட விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால் அது கிரிக்கெட் போட்டி தான். ஆனால் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி போட்டி. அதே சமயம் இந்தியா சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட தொடங்கும் முன்பே இந்திய ஹாக்கி அணி சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Advertisment

1928-ம் ஆண்டு தொடங்கி 1956-வரை ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சுதந்திரத்திற்கு பின், 1948-ம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிய கிஷான் லால், சுதந்திரத்திற்கு பின் ஒலிம்பிக் ஹாக்கியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த போட்டியில் துணை கேப்டனாக விளையாடியவர் கே.டி.சிங்.

கிஷான் லால் பிறப்பும் – ஹாக்கி விளையாட்டும்

1917-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி ஆங்கில இந்தியாவில் பிறந்தவர் தான் கிஷான் லால். தனது 14 வயதில் ஹாக்கி விளையாட தொடங்கிய இவர், தனது பிறந்த ஊரான மேஹவ் ஹீரோஸ், மேஹவ் கிரீன் வெல்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி பிரபலமாகியுள்ளார். இந்தூரில் கல்யாண்மால் மில்ஸ் அணிக்காக விளையாடிய கிஷான் லால், 1937-ல் திகம்கர் பகவந்த் க்ளப்பில் இணைந்தார்.

தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த கிஷான் லால் 1940-ம் ஆண்டு நடைபெற இருந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த இந்த போட்டி, 2-ம் உலகப்போரில் ஜப்பான் பேரரசு வீழ்ச்சியை சந்தித்ததால், இந்த ஒலிம்பிக் போட்டி துரதிஷ்வசமாக ரத்து செய்யப்பட்டது.

1948 Hockey

இதனைத் தொடர்ந்து மும்பை, பரோடா, மத்திய இந்திய ரயில்வே அணிக்காக விளையாடி தனது திறமையை வளர்த்துக்கொண்ட கிஷான் லால், தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில், மத்திய இந்தியா அணிக்காக விளையாடியிருந்தார். மேலும் இவரது தலைமையின் கீழ், மத்திய இந்திய அணி தொடர்ச்சியாக 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

1948 லண்டன் ஒலிம்பிக் போட்டி

2-ம் உலகப்போர் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து 1948-ம் ஆண்டு லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது. இதில் கிஷான் லால் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. 13 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்திய அணி, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஸ்பெயின் ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தது.

இந்த தொடரில் முதல் போட்டியில் 8-0 என்ற கணக்கில் ஆஸ்திரியா அணியை வீழ்த்திய இந்திய அணி, 2-வது போட்டியில் 9-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணியும், 3-வது போட்டியில் 2-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியும் வீ்ழ்த்தி லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. தொடர்ந்து நடந்த அரையிறுதி போட்டியில், 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் கிரேட் பேரிட்டைன் அணியை சந்தித்த இந்திய அணி, சிறப்பாக விளையாடி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியது. இந்த போட்டியில் நடுக்கள வீரராக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழி செய்த கேப்டன் கிஷான் லால் சிறந்த முன்னோடி வீரர் என்ற பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

ஓய்வுக்கு பின் கிஷான் லால்

28 வருடங்கள் ஹாக்கி போட்டியில் சிறந்த பங்களிப்பை கொடுத்த, கிஷான் லால் அதன்பிறகு ஓய்வு பெற்றிருந்தாலும் 1976-ம் ஆண்டு வரை ஹாக்கி விளையாட்டில் இணைந்திருந்தார். ரயில்வே விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் பயிற்சியாளராக இருந்த கிஷான் லால், அந்த அணி தேசிய அளவில் 14 முறை சாம்பியன் பட்டம் பெற உதவியுள்ளார். 1964-ல் மலோசியா அணிக்கும், 1968-ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி அணிக்கும் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

1966-ம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார். 1980-ம் ஆண்டு கிஷான் லால் மரணமடைந்தார்.  அவரது உடல் மும்பை சியோன் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.

இந்திய ஹாக்கி அணியின் 5-வது கேப்டன் கே.டி. சிங்

ஆங்கில இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் பராபங்கி என்ற இடத்தில் 1922-ம் ஆண்டு பிப்ரவரி 02-ந் தேதி பிறந்தவர் கே.டி.சிங். அவரின் முழுபெயர் குன்வர் திக்விஜய் சிங். பராபங்கி அரசு உயர்நிலை பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், லக்னோ கன்யாகுப்ஜ் இன்டர் கல்லூரியில் தனது பட்டபடிப்பை முடித்துள்ளார். சிறுவயது முதலே ஹாக்கியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர், 1937-ல் தனது 15 வயதில், டெல்லியில் நடந்த டிரேட்ஸ் கோப்பைக்கான போட்டியில் லக்னோ க்ளப் அணிக்காக களமிறங்கினார்.

இந்த தொடரில், ஒலிம்பிக் வீரர் முகமது ஹைசனுடன் இணைந்து விளையாடிய கே.டி.சிங், அந்த போட்டி முழுவதிலும் ஹைசனுக்கு ஈடுகொடுத்து சில சமயங்களில் அவரையே ஏமாற்றி பந்தை எடுத்து சென்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதை பார்த்து ஆச்சரியடைந்த ஹைசன், இவர் ஒருநாள் சிறந்த ஹாக்கி வீரராக வருவார் என்று கணித்துள்ளார். 1939-ல் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற கே.டி.சிங், 1959-வரை அனைத்து தேசிய போட்டிகள் மற்றும் உள்ளூரில் உத்திரபிரதேச அணிக்காக விளையாடியுள்ளார்.

ஹாக்கி வீரர்கள் உலகளவில் முக்கிய வீரராக உருவெடுத்த கே.டி.சிங், 1947-ல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தியான் சந்த்துடன் விளையாடும்போது, தியான் சந்த் 62 கோல் அடித்தபோதிலும், அவரை முந்தி சென்று 70 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். அதன்பிறகு இந்திய ஹாக்கி அணியின் முக்கிய வீரராக உருவெடுத்த கே.டி.சிங், 1948-ல் கிஷான் லால் தலைமையில் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கிய இந்திய ஹாக்கி அணியின் துணைக்கேப்டனாக பொறுப்பேற்றார்.

1952 Hockey

கிஷான் லால் – கே.டி.சிங் கூட்டணியில் களம் கண்ட இந்திய அணி 1948-ல் ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்று அசத்தியது. சுதந்திரத்திற்கு பின் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது இதுவே முதல் முறை. இது குறித்து பிரிட்டீஷ் பத்திரிக்கையில் பல செய்திகள் வெளியாகி இருந்தது. தொடர்ந்து 1949-ல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.டி.சிங், இந்த ஆண்டு இந்திய அணி அடித்த 236 கோல்களில் 99 கோல்களை இவர் அடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1952 ஒலிம்பிக் தொடரில் கே.டி.சிங் தலைமையில் இந்திய ஹாக்கி அணி களமிறங்கியது.

1952- ஹெல்சின்கி ஒலிம்பிக் ஹாக்கி

பின்லாந்தில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியில், நேரடியாக காலிறுதி சுற்றில் பங்கேற்ற இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரியா அணியை 4-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இந்த போட்டியில், 55-வது நிமிடத்தில் கே.டி.சிங் கோல் அடித்து அசத்தினார். அடுத்து அரையிறுதியில் கிரேட் பிரேட்யன் அணியை சந்தித்த இந்திய அணி 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை சந்தித்த இந்திய அணி 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சுதந்திரத்திற்கு பின் ஒலிம்பிக் ஹாக்கியில் 2-வது தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் பல்பீர்சிங் சீனியர் 5 கோல்கள் அடித்து அசத்தினார். 25-வது நிமிடத்தில் கேப்டன் கே.டி.சிங் கோல் அடித்திருந்தார். இந்திய ஹாக்கி அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான கே.டி.சிங், ஓய்வுக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

1972- மியூனிக் ஒலிம்பிக் போட்டி

1972-ம் ஆண்டு மியூனிக்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளராக கே.டி.சிங் பணியாற்றினார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி நெதர்லாந்து அணியை 1-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மார்க் சிங் விளையாடினார்.

1978-ம் ஆண்டு கே.டி.சிங் தனது சொந்த துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தார். அவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்காலம் என்று கூறப்படுகிறது. 1948-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்போட்டி தொடர் குறித்து கோல்ட் என்ற தலைப்பில் 2018-ம் ஆண்டு திரைப்படம் வெளியானது. இதில் கே.டி.சிங் கேரக்டரில் அமித் சாத் நடித்திருந்தார். 1953-ம் ஆண்டு உலகின் சிறந்த ஹாக்கி வீரருக்கு வழங்கப்படும் ஹெல்மஸ் கோப்பை கே.டி.சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்த கோப்பையை பெற்ற முதல் இந்தியர் கே.டி.சிங் தான்.

1958-ல் இந்திய அரசின் சார்பில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கே.டி.சிங் சொந்த ஊரான பராபங்கி மற்றும் லக்னோவில் உள்ள ஹாக்கி மைதானங்களுக்கு கே.டி.சிங் பாபு ஸ்டேடியம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பராபங்கி நகரின் ஒரு தெருவுக்கு கே.டி.சிங் பெயர் சூப்பட்டுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்கு பின் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் கேப்டன் கிஷான் லால் துணைக்கேப்டன் கே.டி.சிங் ஆகிய இவருக்கும் (பிப்ரவரி 2) இன்று பிறந்த நாள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Hockey olympics hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment