லண்டனில் 1948ம் ஆண்டு ஜூலை 29 – ஆகஸ்ட் 14 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. 59 நாடுகள் பங்கேற்ற இத்தொடரில், சுதந்திர இந்தியாவும் ஒரு அணி. லண்டன் விம்ப்ளே ஸ்டேடியத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற்றது.
மொத்தம் 4, 104 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில், 3,714 வீரர்களும், 390 வீராங்கனைகளும் அடக்கம்.
அத்லெட், ஆர்ட்ஸ், பேஸ்கட் பால், பாக்ஸிங், சைக்ளிங், ஃபுட்பால், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், ஷூட்டிங் ஸ்விம்மிங் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றது. இந்தியா சார்பில் மொத்தம் 79 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அனைவரும் ஆண்களே!. 10 விளையாட்டில் 39 ஈவண்ட்களில் கலந்து கொண்டனர்.
இதில், இந்தியா வென்றது ஒரேயொரு பதக்கம் மட்டுமே. அதுவும், 'தங்கப்பதக்கம்'! பட்டியலில் 22வது இடத்தைப் பிடித்தது.
அந்த தங்கப் பதக்கத்தை வென்றுக் கொடுத்தது இந்திய ஹாக்கி அணி. தங்கம் வென்ற அந்த நாள் இன்று. ஆகஸ்ட் 12, 1948. அதுவும், இறுதிப் போட்டியில் இந்தியா வீழ்த்தியது யாரைத் தெரியுமா? இந்தியாவை ஆண்ட தி கிரேட் பிரட்டனை..!
4-0 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை துவம்சம் செய்து முதன்முறையாக சுதந்திர இந்தியா தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது. அதற்கு முன்னதாக, 1928, 1932, 1936 ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவாக ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்றிருந்தாலும், சுதந்திர இந்தியாவாக வென்றது இதுவே முதல்முறை.
இந்திய வீரர் பல்பீர் சிங் 2 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணியின் பயிற்சியாளர் கூறிய வார்த்தைகள் தான் இந்திய அணியின் வெற்றியை வசமாக்கியது. 'வீரர்களே! பந்துக்காக யாரும் காத்திருக்காதீர்கள். பந்தை நீங்கள் துரத்துங்கள்!'.
இந்தியன் ஹாக்கி டீமுக்கு-னு ஒரு கெத்து இருக்கு!.