இலங்கைக்கு எதிரான இந்திய டி-20 அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றார்.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றிருக்கும் சூழலில், 3-வது டெஸ்ட் டெல்லியில் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் ஒரு நாள் தொடருக்கு ஏற்கனவே அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.
கேப்டன் விராட் கோலிக்கு அதில் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இலங்கைக்கு எதிரான டி-20 தொடருக்கும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் தொடரைப் போலவே டி-20 தொடருக்கும் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இலங்கைக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய அணி வருமாறு :
ரோகித் சர்மா(கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாகல், குல்தீப்யாதவ், தீபக் ஹூடா, ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், பாசில் தம்பி, ஜெயதேவ் உனத்கட்.
தமிழகத்தை சேர்ந்தவரான இளம் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், டி-20 அணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, ஐபிஎல் மூலமாக உருவான முகம்மது சிராஜ், பாசில் தம்பி, ஜெயதேவ் உனத்கட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் வாய்ப்பு பெற்றுள்ளர். ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே அனுபவ வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.
தென் ஆப்பிரிக்க தொடரை மனதில் வைத்தே முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு எதிரான டி-20 போட்டி அட்டவணை வருமாறு :
டிசம்பர் 20 : கட்டாக், டிசம்பர் 22 : இந்தூர், டிசம்பர் 24 : மும்பை.
ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்ற ஷிகர் தவான், டி-20 அணியில் ஓய்வு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.