தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சுற்றுப்பயணம் முடிந்திருக்கும் நிலையில், இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா, இலங்கை வங்கதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன. மார்ச் 6ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் மார்ச் 18ல் முடிவடைகிறது.
இதற்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ரோஹித் கேப்டனாகவும், தவான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கேப்டன் விராட் கோலி, தோனி, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இத்தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில், "இந்த முத்தரப்பு தொடருக்கான அணியை தேர்வு செய்யும் போது, பணிச்சுமை மற்றும் அடுத்து வரவிருக்கும் தொடர்கள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. உச்சபட்ச திறன் கொண்ட இந்திய அணிக்கு போதுமான அளவு ஓய்வு தேவைப்படுவதால் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தோனியை பொறுத்தவரை, அவர் தனிப்பட்ட முறையில் ஓய்வு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்" என்றார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோஹித் ஷர்மா (Capt), ஷிகர் தவான் (vc), லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (wk), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், விஜய் ஷங்கர், ஷர்துள் தாகுர், ஜெயதேவ் உனட்கட், மொஹம்மத் சிராஜ், ரிஷப் பண்ட்(wk).
தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய ரெய்னாவுக்கு முத்தரப்பு தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கக் கூடிய தேர்வாகும். அதேபோல், மீண்டும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு டி20ல் வாய்ப்பு அளித்திருப்பது, தோனிக்கு அடுத்த 'அதிரடி கீப்பர்' தலைமுறையை வளர்க்க உதவும். தமிழகத்தில் இருந்து ஆல் ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர், விஜய் ஷங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சீனியர் தினேஷ் கார்த்திக்கும் அணியில் இடம் பெற்றுள்ளார். 'பயமறியா' தீபக் ஹூடவிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல் நிலை அணியாக இல்லாவிட்டாலும், சீனியர், ஜூனியர் என சரிகலவையான விகிதத்தில் அணித் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், பிப்ரவரி மாதம் ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி தொடர் இதுதான். கோலி, தோனி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட மற்ற வீரர்கள் அனைவருக்கும் ஐபிஎல்-ல் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.